திருக்கண்ணன் அமுது - 34
செல்வோமா கோகுலம்?
எப்போதும் தேவர்களுக்கு வானில் கோகுலத்தின் மேல் கூடிநிற்பதும், கண்கொட்டாமல் கண்ணனின் லீலைகளை அனுபவிப்பதுமே வேலை..
பரமபதநாதனாக இருக்கும்போது ஒரு கண நேர தரிசனத்திற்குத் தவமிருந்தவர்கள் அவர்கள். இப்படி ஒரு ஸௌலப்யத்தை, நீர்மையை வாயைப் பிளந்துகொண்டு ஆச்சர்யத்துடன் அனுபவித்தார்கள். நடை பழகுவதற்கு கண்ணன் போட்ட நாடகம், நிஜமாகவே இவன் ப்ராக்ருத சிசுவோ என்று தேவர்களில் சிலரே ஐயம் கொள்ளுமளவிற்கு அமைந்தது..
கைலாசபதியான பரமேஸ்வரன் க்ருஷ்ணனின் ரூபலாவண்யத்தைக் காண்பதற்காக நேரில் காண ஆசைப்பட்டார். எனவே கோகுலம் செல்லக் கிளம்பினார். .
அவர் கிளம்பும் சமயம், கைலாசத்திலிருந்து யாராவது உடன் வருவார்களா என அழைத்துப் பார்த்தாராம்.
பராசக்தியை அழைத்தார், அவளோ ஏற்கனவே எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படியிருக்க என் தமையனான இவன் அழகு சொட்டும் குழந்தையாகப் பிறந்திருக்கிறான். கோகுலம் என் பிறந்தவீடு வேறு. இப்போது உங்களுடன் வந்தால், திரும்பி வருவது சந்தேகம்தான். பரவாயில்லையா? என்றாள்.
பரமேஸ்வரன், வேண்டாம் நீ இங்கிருந்தே பார் என்று சொல்லிவிட்டு, கங்கையை அழைத்தார்.
கங்கை சொன்னாள்.
ஸ்வாமி, பகவான் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது ஸத்யலோகத்தில் அவரது பாதம் நுழைந்தது. அப்போது ப்ரும்மதேவர் பகவானின் பாதத்திற்கு பூஜை செய்தார். அந்த தீர்த்தம்தான் நான். இது நாள் வரை அனைத்து லோகங்களிலும் உள்ள புண்ய தீர்த்தங்களை விடவும் நான் தான் உயர்ந்தவள் என்று என்னை அனைவரும் கொண்டாடி வந்தனர். ஒரு பாத அபிஷேக தீர்த்தமான எனக்கே இவ்வளவு பெருமையெனில், யமுனையில் கண்ணன் குதித்து விளையாடப் போகிறான். அதனால், என்னை விடச் சிறியவளான யமுனை இப்போது என்னைப் பார்த்து எக்காளமிடக்கூடும். எனவே.. என்று இழுத்தாள்.
அவளை விட்டு சிவனார் பிறைநிலாவை அழைக்க,
ஸ்வாமி மன்னிக்க வேண்டும் என்றது.
எதற்கு?
கீழே பிறந்திருக்கும் இறைவனின் முகம் என்னை விடவும் அழகாகவும் ப்ரகாசமாகவும் ஒளிர்கிறது. என்னிடம் களங்கங்கள் உண்டு. களங்கமற்ற அவரது முகத்தைக் காண எனக்கு அவமானமாய் இருக்கிறது. மேலும் யசோதை அம்மா, தினமும் என்னைக் காட்டி காட்டி அவருக்கு அன்னம் ஊட்டும்போது எங்கள் இருவரையும் ஒருசேரப் பார்க்கும் என் மனைவிகளே என்னைக் கேலி செய்கிறார்கள். இனி யாரும் அழகுக்கென்று என்னை ஒப்பிடுவார்களா என்பது சந்தேகமே..எனவே..
பிறர் அழகைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளாமல், நீ ஏன் அவமானமாக எடுத்துக்கொள்கிறாய்? என்று கேட்டுவிட்டு, சரி நீ வராவிட்டால் பரவாயில்லை. நான் நந்தியை அழைக்கிறேன் என்றார்.
நந்தி எங்கே தன்னைக் கூப்பிட்டுவிடுவாரோ என்று தர்மசங்கடத்தில் நெளிந்துகொண்டிருந்தார்.
நந்தியை வருகிறாயா என்பதுபோல் பரமேஸ்வரன் பார்த்ததும், நந்தி சொன்னார்,
ஸ்வாமி, மாடுகளை மேய்ப்பதற்காகவும், அவற்றின் மீது அன்பைப் பொழியவுமே எடுத்த அவதாரம் இது. நான் உங்களோடு வரலாம்தான். ஆனால், என்னை அவர் தன் வீட்டுக் கொட்டிலில் கட்டிவிட்டால், தங்களுக்குச் செய்யும் கைங்கர்யம் தடைப்படுமே என்று பார்க்கிறேன்.
சரி, பரவாயில்லை நான் தனியாகவே செல்கிறேன் என்று கிளம்பும் சமயத்தில் பரமேஸ்வரனின் கழுத்தில் இருந்த நாகம் கிடுகிடுவென்று கீழே இறங்கியது.
ஏன் உனக்கென்னவாயிற்று? நீயும் வரமாட்டாயா?
ஸ்வாமி, அவர் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த காளிங்க நாகத்தின் மேல் நடனமாடி அதை அடக்கப்போகிறவர். என்னைப் பார்த்ததும் நானும் காளிங்கனின் குடும்பம்தானே என்று என் மேல்சினம் கொள்வாரோ என எனக்கு அச்சமாக இருக்கிறது. அவரருகில் என்னால் வர இயலாது.
அனைவரும் வர மறுத்து விட்ட தால், பரமேஸ்வரன் ஒரு பிக்ஷாடனர் உருவத்தில் தனியாக கோகுலம் வந்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment