திருக்கண்ணன் அமுது - 29

விஷமக்காரக் குழந்தைகள்

ஆறே ‌மாதங்கள்தான்  நிரம்பியிருந்தன  குழந்தைகளுக்கு. ஆனால்,  அவர்களின் விஷமத்திற்கு எல்லையே இல்லை. அதற்குள் பிடித்துக் கொண்டு நிற்க முயற்சி தொடங்கியாயிற்று.

ஒருநாள் பகற்பொழுதில் குழந்தைகள் உறங்குவதை உறுதிப்படுத்திக்கொண்டு எழுவதற்குள்  உணவருந்திவிட்டு வரலாம் என்று யசோதையும் ரோஹிணியும் ‌உள்ளே சென்றனர்.

தாதிகள் பார்த்துக்கொள்ள அருகில் இருந்தனர். 
அன்னையர் இருவரும் உள்ளே சென்றதுதான் தாமதம், பலராமன் கையைத் தூக்கி கண்ணன் மீது போட்டான். இருவரும் ஒருவரையொருவர் அரைக்கண்ணால் பார்த்துக் கொண்டு சிரித்தனர். அறை ஓரத்தில் இருந்த தயிர்ப் பானையை நான்கு கண்களும்‌ நோக்கின.

மெதுவாக கொலுசு சத்தமின்றி ஊர்ந்து சென்று பானையின் அருகில் சென்றாகிவிட்டது.

பார்த்துக் கொள்வதற்காக அங்கிருந்த தாதி உட்கார்ந்தே உறங்கிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி குழந்தைகளின் துணிகளை மடித்து உள்ளே வைக்கப் போனாள். 

டமாரென்று சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த கோபிக்குத்  தூக்கி வாரிப்போட்டது.
பார்த்தால் பானை உடைந்து தரை முழுவதும் தயிர்.

குழந்தைகள் இருவரும் இரண்டு திக்குகளில் வேகமாய்த் தவழ்ந்து அறையின் இன்னொரு மூலைக்கு ஓடிவிட்டனர். ஆனாலும் அவர்கள் தவழ்ந்த சுவடு தெரிந்தது.

யசோதை திட்டப்போவதை நினைத்து பயந்த அந்த கோபி 
அவசர அவசரமாய்ச் சுத்தம்‌ செய்து கொண்டே..

யார் உடைச்சா பானையை என்று கொஞ்சல் குரலில் கேட்க கண்ணன் பலராமனைக் காட்ட, அவன் கண்ணனைக் காட்டினான். 
ஒரு கணம் குழந்தைகளின் வெகுளித் தனத்தில் மனத்தைப் பறிகொடுத்த அந்த கோபி, சிரித்துவிட்டு, தயிர் கொட்டிய சுவடே தெரியாமல் சுத்தம் செய்துவிட்டாள்.
 
மீண்டும் இருவர் மேலிருந்த தயிரைத் துடைத்து உடை மாற்றினாள்.

யசோதையும் ரோஹிணியும் உள்ளேயிருந்து வந்தனர். ஆயிரம் செய்தாலும் யசோதை பார்த்தவுடன் கண்டுபிடித்துவிடுவாள்.

இப்பத்தானே தூங்கினாங்க ரெண்டுபேரும். அதுக்குள்ள எழுந்தாச்சா?

கேட்டுக் கொண்டே வந்தவள், கூடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, 

தயிர்ப் பானை உடைஞ்சிடுச்சா என்ன?

என்று கேட்டாள். அதற்கு மேல் மறைக்க முடியாத கோபி,

 ஆமாம்மா.

யார் உடைச்சா?
வாய் கேள்வி கேட்டதே தவிர, யசோதையின் கண்கள் குழந்தைகளின் மீது இருந்தது. கேள்விக்கு கோபி பதில் சொல்ல வாயெடுக்குமுன் இரண்டு குழந்தைகளும்‌ சேர்ந்து அந்த கோபியைக் கை காட்ட, அதற்குப் பின் அவள் யசோதையிடம் வாங்கிய திட்டுக்களைக் கேட்கவும் வேண்டுமா?

பேச்சு வருவதற்கு முன்னாலேயே இருவருக்கும் விஷமம் வந்துவிட்டது. 
ஒரு ப்ராக்ருத சிசு அன்னைக்குக் கொடுக்கும் இன்பத்தை விடவும்‌பல மடங்கு யசோதைக்குக் கொடுத்தான் கண்ணன்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37