திருக்கண்ணன் அமுது - 28

வீட்டுக்குள் வெண்ணாறு

நந்த பவனம்‌ முழுதும் ஆயிரக்கணக்கான விளையாட்டு பொம்மைகள் இறைந்து கிடந்தாலும் பலராமனுகும் கண்ணனுக்கும் உயிருள்ள பொம்மைகள் தான் பிடிக்கும். வேறு யார்? கோபிகள் தான். 

எப்போதும் அவர்களிருவரையும் சுற்றி யாராவது நாமாவளிகளையோ, அவர்களது நாமங்களையோ பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க வேண்டும். நாமச் சத்தம்  கேட்கவில்லையென்றால் குழந்தைகளின் அழுகைச் சத்தம் கேட்கும்.

பாடினால் உற்சாகமாகக் கை கால்களை அசைத்துக்கொண்டும், காற்றை உதைத்துக்கொண்டும்  அவ்வப்போது கன்னம்‌ குழிய  களுக்கென்று  சிரித்துக்கொண்டும்  கேட்பார்கள்.

கண்ணன் பிறந்ததின் நோக்கம், ஒருவருக்கும் உபதேசம் செய்யாமலே அவன் பிறந்ததுமே நிறைவேறிவிட்டது.

நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமாம் மழை போல், அவதார புருஷர் ஒருவர் இருந்தால் போதும், அவரது ஸந்நிதி விசேஷத்தினாலேயே பல ஸங்கல்பங்கள் நிறைவேறும்.

நாளொரு மேனியும் கணமொரு லீலையுமாய்க் குழந்தைகள் வளர்ந்தனர். ஒருநாள் குப்புற நீச்சலடித்துக் கொண்டிருந்த குழந்தைகள் கையை ஊன்றி எழும்பி தவழத் துவங்கினர்.

போட்டி போட்டுக்கொண்டு தவழ்ந்து தவழ்ந்து நிலை வாசல் படியைத் தாண்டியதும் ஸ்வாமிக்கு கொழுக்கட்டை போட்டு நிவேதனம் செய்தாள் யசோதை.

இரண்டு குழந்தைகளும் தவழத் துவங்கியதில் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. ஒரு பொருளைக்கூட கீழே வைக்க முடியவில்லை. ஓரத்தில் அடுக்கி வைத்திருக்கும் பால், தயிர் மோர்ப் பானைகளை உருட்டிவிடுகிறார்கள். இருவரும் வெண்ணாற்றில் நீராடி, தலை, உடல் எல்லாம் பாலும் மோரும் அப்பிக்கொண்டு வாயில் போட்டுக்கொண்டு அப்பப்பா. யசோதையாலும் ரோஹிணியாலும் சமாளிக்கவே முடியவில்லை. 

வீடு முழுவதும் எப்போது பார்த்தாலும், பால் தயிரில் குழந்தைகள் தவழ்ந்த சுவடு இருந்துகொண்டே இருந்தது.

ஒரு நல்ல நாள் பார்த்து இருவருக்கும் ஆதிநாராயணர் கோவிலில்  அன்னப்ராசனம் நடந்தது. 

ங்கு, த்தை, ம்மா, ப்பா, சப்தமெல்லாம் சிறிது காலம்தான். 

இப்போது குட்டிக் குட்டி வார்த்தைகளாக வெடுக் வெடுக்கென்று மழலைப்‌பேச்சு பேசத் துவங்கிவிட்டார்கள் கண்ணனும் பலராமனும்.

என்னவானாலும் இரவில் அம்மாவின் குரலில் தாலாட்டு கேட்டால் மட்டுமே உறங்குகிறான் நம் கண்ணன்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37