திருக்கண்ணன் அமுது - 27
பாலகர்களின் பால லீலைகள்
க்ருஷ்ணன், கிருஷ், கிச்சா விதம் விதமாய்க் கூப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தாள் யசோதை. அவளுக்கு மட்டுமா, உலகிற்கே பிடித்த பெயராயிற்றே.
ஒவ்வொரு அசுரனாக இறக்கும் செய்தி கேட்டு மிகவும் குழம்பியும் பயந்தும் போயிருந்தான் கம்சன். அதற்குள் நாட்டில் மிகவும் சலசலப்பு ஏற்பட்டது.
அந்தணர்களும் ஸாதுக்களும் கம்சனின் கொடுங்கோல் ஆட்சியைப் பொறுக்க முடியாமல் நாட்டை விட்டு வெளியேறினர்.
தன் பெயரில் தினமும் ஆயுஷ்ய ஹோமம் செய்வதற்கும், ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்வதற்கும் ஏற்பாடு செய்து அந்தணர்களைப் பாடாய்ப் படுத்தினான் கம்சன். அவனை ஆமோதிப்பவர்கள் மட்டுமே அந்நாட்டில் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
சில மாதங்கள் கழித்து, மீண்டும் குழந்தையைக் கொல்லும் படலத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த கம்சன், அதுவரை நாட்டில் நடக்கும் வித்தியாசமான விஷயங்களை அறிந்துவர ஒற்றர்களை ஏவினான்.
காலம் பறந்தது.
ஒரு நன்னாளில் கண்ணனும் பலராமனும் குப்புறித்துக்கொண்டனர். பலராமன் சிலமாதங்கள் கண்ணனை விடப் பெரியவன்தான். ஆனாலும், அவன் ஒவ்வொரு லீலைக்கும் தன் ஸ்வாமியான கண்ணனுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.
கண்ணன் பிறந்ததிலிருந்து உறங்கும் நேரம் தவிர, மீதி எல்லா நேரமும் கண்ணனின் தொட்டிலின் அருகிலேயேதான் அவனது தொட்டிலும் இருந்தது. இல்லாவிட்டால் பெருங்குரலெடுத்து அழத் தொடங்குவான்.
குழந்தைகள் கவிழ்ந்ததை ஆட்டம் பாட்டத்தோடு விழாவாகக் கொண்டாடினார் நந்தன்.
சத்தம் கேட்டுத் திரும்புவது, பார்த்துப் பார்த்துச் சிரிப்பது, வாயில் கை விரல் கால் விரல் எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்வது என்று ப்ராக்ருத சிசுவைப் போலவே விளையாட்டுக்கள் இருந்தாலும், அவற்றில் ஒரு தெய்வீக அழகு மிளிர்ந்தது.
சமயத்தில் கண்ணனையும் பலராமனையும் அருகருகே விட நேர்ந்தால், கண்ணன் தன் கை எது பலராமன் கை எது என்று தெரியாமல் அவன் விரலை எடுத்து வாயில் போட்டுக்கொள்வான்.
அவனும் சுகமாகக் காட்டுவான்.
குப்புறக்கவிழத் தெரிந்து விட்ட தால், சில சமயம் பலராமன் சக்கரம் போல் சுற்றி, கண்ணனின் பாதத்தின் அருகே போய் அவனது கால் கட்டை விரலைச் சப்புவான்.
ஒரு சில கோபிகளை வெறுப்பேற்றுவதற்கு அவர்கள் தூக்கியதும் அவர்களது மடியை ஈரமாக்குவான் பொல்லாத கண்ணன்.
இருவருக்கும் வாயில் அரிசி அரிசியாய்ப் பற்கள் முளைத்தன.
பற்கள் முளைக்கும் சமயம் துறுதுறுவென்று இருப்பதால், எந்த கோபி முத்தமிட அருகில் வந்தாலும் அவளது கன்னத்தைப் பிடித்துக் கடித்து வைத்துவிடுவான் கண்ணன்.
கண்ணனின் பற்களின் சுவடு படியாத கன்னங்களே கோகுலத்தில் இல்லை எனலாம். அதுவும் ஒரு ஆனந்த அனுபவமாகவே இருந்தது அவர்களுக்கு.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment