திருக்கண்ணன் அமுது - 24

தேனொழுகும் பாதம்

கண்ணனைக் கொண்டாடுவதற்காகவே பிறவி எடுத்து வந்தவர்கள் கோகுலவாசிகள். 

இருபத்து நான்கு மணி நேரமும்  கோகுலத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்தாவது கண்ணனின் புகழ் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

இதே நிலையை இன்றும் ப்ருந்தாவனம், திருமலை, பண்டரிபுரம், ஸ்ரீரங்கம், பூரி, குருவாயூர்,  த்வாரகா போன்ற சில திவ்ய க்ஷேத்திரங்களில் காண முடிகிறது. 

ஒருநாள் யசோதை கண்ணனை மடியில் வைத்துக்கொண்டு தோட்டத்துத் திண்ணையில் அமர்ந்திருந்தாள். இரண்டு மூன்று கன்றுக்குட்டிகள் அவளைச் சுற்றி நின்று கண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று குட்டிக் கண்ணனின் பட்டுப் பாதத்தை அவ்வப்போது நக்கியது. கண்ணனும் தாயின் மடியிலிருந்து எட்டி எட்டி கன்றுகளின் மூக்கைத் தொட முயற்சி செய்து கொண்டிருந்தான்.

கன்று பாதத்தை நக்கும் போதெல்லாம், காலில் குறுகுறுப்பு ஏற்பட்டு கலீர் கலீரென்று சிரித்தான். அவனது சிரிப்பில் மயங்காதார் எவர்?

கண்ணனின் பாதத்தை எதற்காக கன்று மீண்டும்‌மீண்டும் நக்குகிறது? அப்படி என்ன சுவை கண்டது?

கங்கை தோன்றிய பாதத்தில் அப்படியென்ன சுவை? 

மஹாலக்ஷ்மி பிடித்துவிடும் பாதத்தில் அப்படியென்ன சுவை?

எப்போதும் துளசியின் நறுமணம் வீசும் பாதத்தில் அப்படியென்ன சுவை?

கோடானுகோடி பக்தர்கள் தினமும் தேனொழுகும் பூக்களால் பூஜை செய்கிறார்கள் அல்லவா? அந்தப் பூக்களிலிருந்து இறைவனின் பாதத்தில் விடாமல் தேன்  ஒழுகிக்கொண்டே இருக்கிறதாம். எனவே அந்தக் குட்டிக் கண்ணனின்  பாதங்கள் தேனில் ஊறிய பலாச்சுளையாய் இனிக்கின்றனவாம். 

அதனால்தான் கண்ணனே கூட ஆலிலையில் தனித்திருக்கும்போது சுவைப்பதோடன்றி, இந்த அவதாரத்திலும் அவ்வப்போது கால் கட்டை விரலைச் சுவைப்பான் போலும். 

தூரத்தில் வேலை செய்துகொண்டிருந்த கோப கோபியரும் வேலை மறந்து கண்ணனை வேடிக்கை பார்த்தனர்.

த்ருணாவர்த்தன் தென்றலாய் கோகுலத்தினுள் நுழைந்து வேவு பார்த்தான். கம்சன் கொல்லச் சொன்ன சிறு குழந்தையைக் கண்டுபிடிப்பதில் அவனுக்கு அதிக சிரமம் இருக்கவில்லை.
நந்தனின் தோட்டத்திலேயே தகுந்த நேரத்திற்காகக் காத்திருக்க ஆரம்பித்தான். 

தனக்கு வேலை வந்துவிட்டதை உணர்ந்த கண்ணன் இப்போது தன் எடையை அதிகரிக்கத் துவங்கினான்.

அஷ்டமா சித்திகளும் பகவானின் சொந்த ஐச்வர்யம். அதை அவன் எந்த சாதனையும்‌செய்து புதிதாகச் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. கரிமா என்ற சித்தியைப் பயன்படுத்தி உடலின் எடையைக் கூட்டிக்கொண்டே போனான் கண்ணன். திடீரென்று வழக்கத்திற்கு மாறாய்க் குழந்தை கனக்கவும், யசோதைக்குக் கால் வலிக்க ஆரம்பித்தது.

வெகுநேரமாய் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டிருப்பதால் தான் அப்படி இருக்கிறது என்று நினைத்த யசோதை, தன் பக்கத்தில் திண்ணையிலேயே ஒரு பட்டை விரித்து, குழந்தையைக் கீழே விட்டாள்.

உள்ளேயிருந்து ஒரு சேடி வந்து அம்மா, உங்களை ராஜா கூப்பிடறார்.

கண்ணனைத் தனியாக விட்டுச் செல்ல யசோதைக்கு மனம் ஒப்பவில்லை. தூரத்திலிருந்த ரோஹிணியை வரச்சொல்லி இன்னொரு பெண்ணிடம் சொல்லியனுப்பிவிட்டு கண்ணனின் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டுப் போனாள். 

அம்மா, இப்ப வந்துடறேன். சரியா..

சேடிப்பெண்ணிடம் 
எதுக்கும்‌ நீ இங்கயே இரு 
என்று சொல்லிவிட்டுப் போனாள்.

த்ருணாவர்த்தன் இதுதான்‌ சமயம் என்று சுழல்காற்றாய் உருக்கொண்டான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37