கிரிதர கோபாலா.. (34)
ஒருநாள் மீரா வம்சீவடத்தின் அடியில் அமர்ந்திருந்தாள்.
கண்ணன் தினமும் அமர்ந்து குழலூதும் மரம் வம்சீவடம்.
இங்கே நடந்த லீலைகள்தான் எத்தனையெத்தனை!
இம்மரத்தின் தாழ்வான கிளையில் ஒரு காலை மடித்து அமர்ந்து ஒயிலாக மரத்தின் மீது சாய்ந்துகொண்டு, அவன் குழலூதும் காட்சி மீராவின் கண்கள் முன் விரிந்தது.
தன்னை மறந்து கண்ணனின் லீலைகளில் மூழ்கிப் பாடிக்கொண்டிருந்தாள்.
கண்ணன் திடீர் திடீர் என்று எப்போது வேண்டுமானாலும் குழலூதுவான். அவனது குழலிசை கேட்டால் இடைச்சேரியில் ஒரு பெண்ணுக்கும் வேலை ஓடாது. அப்படியே கல்லாய்ச் சமைந்துபோவார்கள். இதனால், அவர்களது வீடுகளில் அவர்களுக்கு வசவு விழும். எனவே, அனைவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவு செய்தனர்.
தினமும் ஏதாவதொரு குறிப்பிட்ட நேரத்தில் கண்ணனைக் குழலூதும்படி வேண்டலாம். அது தெரிந்தால் வீட்டு வேலைகளை அதற்குள் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தனர்.
ஆனால், கண்ணனிடம் பேசப்போனால், அவன் வாய்க்கு வாய் வம்பிழுப்பான். அவன் அழகில் மயங்கி ஏதாவது உளறிக்கொட்டிவிடுவோம் என்றும் பயந்தனர்.
எனவே ராதையை சமரசம் பேச அனுப்பினார்கள்.
ராதாராணி தன்னுடன் பேச வருகின்றாள் என்பதே கண்ணனுக்குப் பரவசம் தரும் விஷயம்தான். ஆனாலும், இந்த உடன்படிக்கைக்கு அவன் தயாரில்லை.
குழல் ஊதுவது என் பிறப்புரிமை. எனக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் குழல் வாசிப்பேன். உங்களை யார் என் குழலிசையில் மயங்கச் சொன்னது? என்று கூறிவிட்டான்.
அவன் தங்கள் வழிக்கு வரமாட்டான் என்றுணர்ந்த பெண்கள், கண்ணனுக்குத் தெரியாமல் அவனது குழலை எடுத்து வரச்சொல்லி மீண்டும் ராதையை அனுப்பினார்கள்.
பைய பைய அடி வைத்து கண்ணனின் அருகில் வந்தாள் ராதை.
கண்ணா, நீ எவ்வளவு அழகாக இசைக்கிறாய் தெரியுமா.. உன் இசையால் பிரபஞ்சமே ஸ்தம்பித்துப்போகிறது. அப்படியிருக்க பேதைப் பெண்களான நாங்கள் எம்மாத்திரம்?
உனக்குக் குழலிசை பிடித்திருக்கிறதா ராதா..
ஆம் கண்ணா..
எனக்கும் சொல்லித் தருகிறாயா..
ஆஹா.. அது என் பாக்யமல்லவா..
அருகில் வா ராதே..
இதோ இந்தத் துளையைப் பார், இதில் உன் இதழை வைத்து ஊதவேண்டும். இது ஸட்ஜமம், இது ரிஷபம்..
கண்ணன் சொல்லிக்கொண்டே போக, ராதை கண்ணனின் ஸ்பர்சத்தால் மயங்கினாலும் குழலை எப்படிக் கவரலாம் என்று யோசித்தாள்.
கண்ணன் மீண்டும் ஒரு சின்ன ஒலித்துணுக்கை வாசித்தான்.
ராதே, உன் இதழும், விரல்களும் பட்டதும் இதன் இசை மேலும் இனிமையாகிவிட்டது.
சரி கொடு, நானே வாசிக்கிறேன்.
என்று வாங்கிக்கொண்டாள் ராதை.
தன் இதழில் வைத்து மயக்கும் மோஹன இசையை எழுப்பினாள். கண்ணன் கண்களை மூடித் தன்னை மறந்தான். சட்டென்று அவனது மடியிலிருந்து ஜல்லென்று குதித்து, குழலை எடுத்துக்கொண்டு சல் சல் சல்லென்று சலங்கை ஒலிக்க ஓடத் துவங்கினாள் ராதை.
ராதே ராதே.. என் குழல்.. குழலைக் கொடு..
கண்ணன் துரத்திக்கொண்டு ஓடினான் கண்ணன். ஒருவாறு அவளைப் பிடித்து விட்டான்.
ராதை அவனை நிமிர்து பார்க்க,
நீ இப்படிப் பார்ப்பாயானால், நீ என்ன வேண்டினாலும் தருவேன் ராதை.
கண்ணா இந்தக் குழலில் மட்டும்தான் இத்தகைய இசை வருகிறதா.. அல்லது நீ எந்த மூங்கிலை வாசித்தாலும் மயக்கும் இசை வருமா..
கலகலவென்று சிரித்த கண்ணன், இன்னொரு மூங்கிலை ஒடித்து சிறு துளைகள் போட்டு மனம் மயக்கும் இசையைப் பரப்பினான்.
புதிய குழலை ராதையிடம் கொடுத்தான். நீ வாசித்த குழலை எனக்குக் கொடு ராதே என்று வாங்கிக் கொண்டான்.
அத்தனையும் ஒளிந்திருந்து பார்த்த தோழிகள்
உன்னைப்போய் சமரசம் பேச அனுப்பினோமே. கண்ணன் கரம் பட்டதுமே இப்படிக் கனிந்துபோகிறாயே ராதே என்று அவளைப் பகடி பேசினர்.
வேண்டுமானால் நீங்கள் போவதுதானே. என்னை அனுப்புவானேன். கண்ணன் கரம் பட்டால் உங்கள் நிலை மட்டும் என்னவாம்? போங்கடி...
ராதை சொல்ல, கண்ணனின் குழலை வாங்கித் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தனர் கோபியர்.
காட்சிகள் கண்முன் விரிய, சிலிர்த்துப்போய் சிலையாய் நின்றாள் மீரா.
அப்போது
குழலும் ஊதி வந்தனனே கண்ணன் - இங்கு
விதம் விதமாய்க் குழல் ஊதி
அழகழகாய் ஆட்டம் ஆடி
ராதையும் அதிசயிக்க அபிநயம் செய்தனனே ..
மதுரமான கீதங்களை இசைத்துக்கொண்டு ஒரு ஸாதுக்கள் கூட்டம் அவ்வழி வந்தது.
தன்னுணர்வு பெற்ற மீரா, அவர்களை இதற்கு முன் ப்ருந்தாவனத்தில் பார்த்ததில்லையே. அற்புதமாய்ப் பாடுகிறார்களே .. வெளியூரிலிருந்து வந்த ஸாதுக்கள் போலும் என்று நினைத்தாள்.
அவர்களுள் ஒருவர் மீராவை நோக்கி வந்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment