கிரிதர கோபாலா.. (36)

ஸாதுக்களுடன் துவாரகையை நோக்கிக் கிளம்பினாள் மீரா. வழியெங்கும் பெரும்  மக்கள் கூட்டம் மீரா மாதா, மீரா மாதா என்று வாஞ்சையுடன் கூறிக்கொண்டு இணைந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஊராகத் தங்கி கீர்த்தனம் செய்துகொண்டு சென்றனர்.

அவ்வாறு செல்லும் வழியில் புஷ்கர் எனப்படும் க்ஷேத்ரத்தைக் கடந்து சென்றதாக செவி வழிச் செய்தி ஒன்று சொல்கிறது. தீர்த்தராஜ் என்றழைக்கப்படும் புஷ்கர் என்பது பெரிய ஏரியாகும். அங்கு தீர்த்த ரூபத்தில் பகவான் விளங்குகிறான். புஷ்கர் ஏரியின் கரையில் மீரா தங்கிய இடம் உள்ளது. அந்த ஆசிரமம் மிக அழகாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கே மிக அழகான கிரிதாரியின் மூர்த்தி உள்ளது.
அங்கிருந்து கிளம்பும்போது, மீரா தன் கிரிதாரியை அங்கே வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி வழிபாடு செய்து வருகின்றனர்.
ஒரு வாறாக, சில மாதங்களில் துவாரகையை அடைந்தார்கள். தன்‌மீது அளவற்ற அன்பு கொண்டு தொடரும் லட்சக்கணக்கான மக்களைப் பார்த்து, கிரிதாரியின் லீலையை நினைத்து வியந்தாள் மீரா. 

துவாரகையில் கண்ணனின் கோவிலின்  முன் நின்றனர்.
வானளாவிய கோபுரம்! பெரிய வாயிற்கதவுகள்‌ மூடிக்கிடந்தன. எத்தனை காலமாயிற்றோ!
அதுவரை யாரும் கோவிலின் உள்ளே செல்லத் துணியவில்லை. 
என்ன அதிசயம்‌ நடக்கப்போகிறது என்று வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர் மக்கள்.

கண்ணனின் கோட்டை வாயிலில் நின்றுகொண்டிருந்த மீராவின் மனநிலையை எப்படிச் செல்வது? தன் இனிமையான குரலில் கிரிதாரியைப் பாடத் துவங்கினாள்.

தன்னை மறந்த நிலையில் உயர்ந்த 'பா'வங்களுடன் கிரிதாரியின் நாமத்தை மீரா பாட, வாங்கிப் பாடிய மக்களின் ஒலி விண்ணை முட்டியது.
எவ்வளவு நேரம் கீர்த்தனம் செய்தார்களோ! அங்கிருந்த அனைவருமே சூழ்நிலையை மறந்து கீர்த்தனம் செய்தனர். 
சடாரென்று பெரும் ஒலியுடன் கோவிலின் தாழ்ப்பாள் உடைந்து விழ, வாசல் திறந்தது.

உள்ளே  அழகிய நீலபாலன் ஸர்வ அலங்காரங்களுடன் தன் கரங்களை நீட்டி,  மீராவைப் பார்த்துப் புன்னகைத்து வாவென்று தலையசைக்க,

ஓ! கிரிதாரி! என் உயிரே! வந்துவிட்டேனடா! 
என்று கூவிக்கொண்டு அதிவேகமாக உள்ளே‌ ஓடினாள்‌ மீரா.

கண்ணன் மீராவின் கரங்களைப் பற்றியதும் இருவரும் சட்டென்று மறைந்துவிட்டனர்.அழகான துவாரகாதீசன் காட்சிதர,  மீராவின் உடை அவனைச் சுற்றிக் கீழே விழுந்திருந்தது.
கூடவே ஓடிவந்த எவரும் என்ன நடக்கிறதென்று அனுமானிப்பதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில்,  துவாரகாதீசனுடன் கலந்துவிட்டாள் மீரா.
 
உடன் வந்த ஸாதுக்கள், மற்றும் மக்களுக்கு எப்படி இருக்கும்?
ஹா! ஹா! என்று கோஷம் செய்தனர். அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, சிலைபோல் நின்றனர்.

கோவில் திறந்த சந்தோஷம், மீரா கண்ணனுடன் கலந்த காட்சியைக் கண்ட பரவசம், அற்புதமான பக்தையான மீராவை இழந்துவிட்ட துக்கம்.. எதை நினைப்பது? எதை விடுவது?

எதுவாயினும் க்ருஷ்ண நாமத்தைக் கீர்த்தனம் செய்வதொன்றே மீராவின் வழி. அதையே பின்பற்றினர். 
கிரிதாரியின் நாமத்தை ஓங்கி உச்சரிக்கத் துவங்கினர்.

தென்னாட்டில் அரங்கனைக் காதலித்துப் பிடிவாதமாக அவனையே மணந்து, அரங்கனுடனேயே இரண்டறக் கலந்தாள் ஆண்டாள்.
அரங்கனின் கோவிலுக்குள் ஒரே ஒரு முறை நுழைந்தவர் மீண்டும் வெளியேறவில்லை, அப்படியே அரங்கனுடன் கலந்தார் திருப்பாணாழ்வார்.

அதே போல் திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமியிடம் இரண்டறக் கலந்தார் ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள்.

பூரியில் ஜகன்னாதருடன் ஐக்கியமானார் ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு. 
மஹாப்ரபுவை சாக்ஷாத் பகவான் என்று உணர்ந்து அவரது மூர்த்தியை உபாசனை செய்து அந்த மூர்த்தியிலேயே  கலந்தவள் அவரது மனைவி விஷ்ணுப்ரியா.

இன்னும் எத்தனை எத்தனை அவதார புருஷர்கள். நமக்காக புவியில் இறங்கி வந்து, பக்தி மார்கத்தைக் காலத்திற்கேற்றவாறு நமக்குக் காட்டி, தாங்களும் அவ்வழி நின்று, அர்ச்சாவதாரத்தை அசைத்து இறைவனுடன் கலந்துவிட்டார்கள்.
இத்தகைய பக்தியைச் செய்ய முடியும் என்று நமக்கு நம்பிக்கை ஊட்ட அவர்கள் பட்ட துன்பங்கள்தான் எத்தனை எத்தனை!

இத்தகையோரின் சரித்திரத்தை கொஞ்சமாவது நினைவு கூர்ந்தோமானால், அவர்களின் அருளால் நமக்கும் இறைவன் மீது அசையாத நம்பிக்கையும் துளியாவது பக்தியும் ஏற்படும். 
மீண்டும் மீண்டும் நம்‌ அனைவர்க்கும்  ஸத்சங்கதையும் பக்தியையும் அருள வேண்டி ஸ்ரீ ஸத்குருநாதரின் சரணங்களில் பிரார்த்தனை செய்வோம்.

மீரா மாதா கீ ஜெய்!

என்னுடன் இதுநாள் வரை பயணித்து மீரா மாதாவின் வாழ்க்கையை அனுபவிக்க உதவிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் வணக்கங்கள்!

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
முதல் இரண்டு படங்கள் கிரிதர கோபால் மந்திர், புஷ்கர்.
மூன்றாவது துவாரகாதீசன்

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37