கிரிதர கோபாலா.. (35)
நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டு தன்னை நோக்கி வந்த ஸாதுக்கள் கூட்டத்தைப் பார்த்தாள் மீரா.
அவர்களுள் ஒருவர் மீராவிடம் வந்து,
அம்மா! இங்கே கண்ணனின் பரம பக்தையான மீரா மாதா என்றொருவர் இருக்கிறாராமே. அவர் எங்கிருக்கிறார் தெரியுமா? என்றார்.
என்ன விஷயம்? நீங்கள் எதற்காக அவர்களைத் தேடுகிறீர்கள்?
குழந்தை தாயைத் தேடக் காரணம் வேண்டுமா அம்மா?
நாங்கள் அவரைச் சந்தித்து வணங்க விரும்புகிறோம்.
மீரா சட்டென்று அவர்கள் அனைவரையும் வணங்கினாள்.
நான் தான் மீரா. கண்ணனின் அடிமை. நான் தங்களுக்கு என்ன ஸேவை செய்ய வேண்டும்?
மீரா மாதா கீ! ஜெய்! என்ற கோஷத்துடன் அனைவரும் மீராவை வணங்கினர். மீராவிற்கு சங்கோஜமாக இருந்தது.
மீண்டும் ஒரு ஸாது பேசலானார்.
அம்மா! நீங்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டும்.
தங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால், ப்ருந்தாவனத்தை விட்டு வெளியில் வரமாட்டேன்.
அம்மா! நீங்கள் அப்படிச் சொல்லலாகாது. அதுவும் கண்ணனின் ஊர்தான்.
இருக்கலாம். எல்லா ஊரும் ப்ருந்தாவனமாகாது.
நீங்கள் ஒரே ஒரு முறை வந்துவிட்டுத் திரும்பி ப்ருந்தாவனம் வந்து விடுங்களேன்.
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
நாங்கள் கண்ணனின் மதிப்புமிக்க அரசபீடமான த்வாரகையிலிருந்து வருகிறோம்.
த்வாரகையா?
மீராவிற்கு கண்ணனின் லீலைகள் நெஞ்சை அடைத்தன.
ஆம் அம்மா! த்வாரகை. அங்கே கண்ணன் மஹாலக்ஷ்மியான ருக்மிணியுடன் கோவில் கொண்டிருக்கிறான்.
கண்ணன் வைகுந்தம் சென்றபிறகு, த்வாரகை கடலில் மூழ்கிவிட்டது என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. கண்ணனின் கோவில் மட்டுமே எஞ்சி நிற்கிறது. ஆனால், கோவிலின் கதவுகள் திறக்கப்படவே இல்லை.
கண்ணன் வைகுந்தம் சென்றதிலிருந்தே கோவில் கதவுகள் மூடிக்கிடக்கின்றன என்று கர்ண பரம்பரையாக வழங்கிவருகிறது. தாங்கள் ஒரு முறை வந்து கண்ணனைப் பாடி வேண்டினால், கோவில் கதவுகள் திறக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்களும் அந்தக் கருணாமூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று உய்வோம்.
துவாரகாநாதன் தங்களை அழைக்கின்றான், நீங்கள் அவசியம் வரவேண்டும்.
மீரா சற்று யோசித்தாள்.
கண்ணனின் விருப்பம் அதுவானால் நான் வருகிறேன். இறையின் விருப்பத்திற்கெதிராக எதுவும் செய்ய இயலாது. தங்களின் விருப்பப்படி நான் வந்து கண்ணனைப் பற்றிப் பாடுகிறேன். ஆனால், எனக்கு அத்தகைய சிறந்த பக்தி இருக்கிறதா என்று தெரியாது. கோவில் கதவுகளைத் திறப்பது கண்ணனின் விருப்பம்
என்றாள் மீரா.
அந்த ஸாதுக்கள் மேலும் சில நாள்கள் தங்கி, ப்ருந்தாவனம் முழுதும் சுற்றிப் பார்த்து கீர்த்தனம் செய்து மகிழ்ந்தார்கள். பின்னர் மீராவை அழைத்துக்கொண்டு துவாரகையை நோக்கிப் புறப்பட்டனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment