கிரிதர கோபாலா.. (33)
ஜீவ கோஸ்வாமி என்ற ஸாதுவும் மீராவும் சம காலத்தவர். ஜீவ கோஸ்வாமி ப்ருந்தாவனத்தில் ஒரு ஆசிரமம் அமைத்து, கண்ணனை ஆராதித்து வந்தார்.
அவரது மனத்தில் ஒரு ஊஞ்சல் இட்டு, அதில் ராதாக்ருஷ்ணனை அமர்த்தியிருப்பார். எப்போதும் அவர்கள் ஊஞ்சலில் ஆடும் காட்சி அவரது மனக்கண்களுக்குப் புலனாகிக்கொண்டிருந்தன. அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர்.
ஒரு சமயம் மீரா அவரைக் காண்பதற்காக அவரது ஆசிரமத்திற்குச் சென்றாள்.
வாசலிலேயே ஜீவ கோஸ்வாமியின் சீடர்கள் மீராவை நிறுத்தினர்.
ஸ்வாமியை தரிசனம் செய்யவேண்டும் என்று மீரா கேட்டபோது,
எங்கள் குரு பெண்களைப் பார்ப்பதில்லை என்று கூறினர்.
அவ்வளவுதான். மீரா சட்டென்று பின்வாங்கினாள்.
ஓ! இந்த ப்ருந்தாவனத்தில் கண்ணன் ஒருவன்தான் புருஷன், புருஷோத்தமன் இருக்கிறான், மீதி அனைவரும் பெண்கள் என்று எண்ணியிருந்தேனே. இங்கு இன்னொரு ஆண்மகன் இருக்கிறாரா.. எனில் அத்தகையவரைக் காண எனக்கும் விருப்பமில்லை. கண்ணனைத் தவிர வேறொரு ஆணை நானும் பார்க்க விரும்பவில்லை.
என்று கூறித் திரும்பிச் சென்றுவிட்டாள்.
உள்ளே நிகுஞ்ச த்யானத்தில் இருந்த ஜீவகோஸ்வாமியின் ஹ்ருதயத்திலிருந்து கண்ணனும் ராதையும் ஜல்லென்று குதித்தனர்.
என்னவாயிற்றென்று ஜீவகோஸ்வாமி கேட்க,
கண்ணனோ,
இங்கு ஒரு ஸாதுவுக்கு அவமரியாதை நடக்கிறது, ஸாதுக்களே எனது பிராணன். அவர்களை மதிக்காத இடத்தில் எனக்கென்ன வேலை. நான் போகிறேன்
என்றான்.
ஜீவகோஸ்வாமிக்கு ஒன்றும் புரியவில்லை. இதை எப்படியாவது சரி செய்கிறேன். தயவு செய்து போகவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார். பின்னர் சீடர்களை அழைத்து விசாரித்தார். மீரா வந்ததையும், அப்போது நடந்தவற்றையும் சீடர்கள் கூற, மிகவும் வருந்தினார்.
பின்னர் தானே தேடிப்போய் மீராவை சந்தித்தார் எனவும், மீரா கடைசி வரை அவரைச் சந்திக்காமல் தவிர்த்தாள் என்றும் இருவிதமாக வழங்குகின்றனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.
Comments
Post a Comment