கிரிதர கோபாலா.. (32)
யமுனா தேவியால் ப்ருந்தாவனத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட மீராவை ஸந்த் ரயிதாஸ் அடையாளம் கண்டுகொண்டார்.
ஸாதுக்கள் அனைவரும் சேர்ந்து மூர்ச்சையடைந்திருந்த மீராவை எழுப்ப நாமஸங்கீர்த்தனம் செய்தனர்.
உணர்வு வந்ததும் தன்னைச் சுற்றி ஸாதுக்களைப் பார்த்ததும் மீராவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
நான் எங்கிருக்கிறேன்?
ப்ருந்தாவனம்..
ப்ருந்..தா..வ..ன..மா?
மறுபடி மூர்ச்சையானாள்.
மீண்டும் நாமசங்கீர்த்தனம் தொடர்ந்தது. இப்படியே உணர்வு வருவதும், ப்ருந்தாவனத்தில் இருக்கிறோம் என்ற நினைவு வந்ததும் மறுபடி மூர்ச்சை அடைவதுமாக ஏழு நாள்கள் ஓடின.
ஏழு நாள்கள் கழித்து ஓரளவு சமநிலைக்கு வந்த மீரா, கதறி அழத் துவங்கினாள்.
ஓ! குருநாதா! சின்னஞ்சிறு வயதில் தாங்கள் என் ஹ்ருதயத்தில் விதைத்த ப்ரேமையின் பலனாக இன்று கிரிதாரி என்னை ப்ருந்தாவனத்திற்கு அழத்துக்கொண்டு விட்டான். என் மீதான தங்களின் கருணைக்கு அளவே இல்லை.
குழந்தாய்! மீரா! கிரிதாரிதான் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினான். உன்னுடைய பக்தியில் சிறிதளவாவது எனக்கும் கிடைக்க அவன்தான் அருள் செய்யவேண்டும்.
மீராவிற்கு ப்ருந்தாவனத்தில் சில வருடங்கள் மிக அமைதியாகக் கழிந்தன.
ரயிதாஸின் ஆசிரமத்திலேயே தங்கினாள் மீரா. இப்போதெல்லாம் கிரிதாரியின் பூஜையை ரயிதாஸ் பார்த்துக்கொண்டார்.
மீரா சின்னஞ்சிறு குழந்தையைப் போல் ப்ருந்தாவனத்தைச் சுற்றி சுற்றி வந்தாள்.
ஆங்காங்கே கண்ணனின் லீலைகள் நடந்த இடங்களில் எல்லாம் சென்று மணிக்கணக்காக கீர்த்தனம் செய்வாள். மூர்ச்சையடைந்து விடுவாள். வீதிகளில் பாடிக்கொண்டே செல்வாள்.
அவளுக்குத் தன் கடந்த காலம், பிறந்த ஊர், வாழ்ந்த நாள்கள் அனைத்தும் மறந்தே போயின.
குருவின் நிழலில், ப்ருந்தாவனத்தில் வாசம். இவ்வுலகில் இதைவிட சுகமான தங்குமிடம் உண்டா?
ப்ருந்தாவனத்தில் கண்ணன் ராதாராணியுடன் உலாவுகிறான். தினமும் லீலைகள் செய்கிறான். ப்ருந்தாவனத்தில் தங்கிக்கொண்டு ப்ரேமையுடன், நாமகீர்த்தனம் செய்துகொண்டு அவனை தரிசிக்க விரும்புவோர்க்கு, நிச்சயம் காட்சி தருகிறான்.
குருவின் வார்த்தைகள் அமுதம் போல் மீராவின் நெஞ்சில் இறங்கின.
தூய வெண்ணிற ஆடையும், கழுத்தில் துளசிமாலையும் கையில் தம்பூராவும் வைத்துக்கொண்டு கீர்த்தனம் செய்துகொண்டே ப்ருந்தாவனத்தில் ஒரு இடம் விடாமல் அலைந்தாள்.
ப்ருந்தாவனம் வரும்போது அரச வம்சத்து நகைகள் சிலவற்றை அணிந்திருந்தாள்.அவை அனைத்தையும் கொண்டு போய் ஸ்ரீ பாங்கேவிஹாரிஜியின் கோவில் உண்டியலில் போட்டாள்.
ஸ்ரீ பாங்கேவிஹாரிஜி கோவில் ப்ருந்தாவனத்திலுள்ள மிகவும் ப்ராசீனமான கோவில் ஆகும். இங்கு கண்ணனும் ராதாராணியும், மஹாராஜனைப்போல் அலங்காரங்களுடன் வீற்றிருக்கிறார்கள்.
இன்றளவிலும் தினமும் எண்ணற்ற லீலைகள் புரிகிறார்கள்.
ப்ருந்தாவனத்தில் இருந்த பறவைகள், விலங்குகள் அனைத்தும் மீராவின் தோழமைகள் ஆயின. மரம், செடி, கொடிகள், மற்றும் உயிரினங்கள் அனைத்திலும் கண்ணனை உணரத் துவங்கினாள் மீரா. கண்ணனுடன் இருந்த கோபி ஒருத்தி இப்போது ப்ருந்தாவனத்தில் உலாவிக் கொண்டிருக்கிறாள் என்று ப்ருந்தாவன வாசிகள் நம்பினர்.
அவள்மீது அளவற்ற அன்பு பூண்டு, பல பெண்கள் மீராவுடன் இணைந்து கீர்த்தனம் செய்தனர்.
ப்ருந்தாவனம் முழுதும் மீராவின் கீர்த்தனங்கள் ஒலிக்கத் துவங்கின. சிறு வயதிலிருந்து எதற்கு ஆசைப்பட்டாளோ அந்த வாழ்க்கையை மிகுந்த மனநிறைவுடன் அனுபவித்தாள் மீரா. அவள் மனத்தில் எந்த ஆசைகளும் இல்லை.
ஸந்த் ஸங்க பைதி பைதி லோக் லாஜ் கோயீ
சாது சங்கத்தில் சேர்ந்து சேர்ந்து என் உலகத்தளைகள் அறுந்தனவே..
படங்கள்:
1. ஸ்ரீ பாங்கேவிஹாரி டாகுர்ஜி
2. ப்ருந்தாவத்தில் மீரா தங்கியிருந்த ஆசிரமம்
Comments
Post a Comment