குருவருள் ஒன்றே கதி - 9
வேகாத பானை - 1
ஒரு சமயம் ஸந்த் கோராகும்பார் வீட்டில் கீர்த்தனம் நடந்தது. ஞானேஸ்வரர், தன்ன்னுடைய கடைசித் தங்கையான, முக்தாபாயை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அவளோ ஐந்து வயது நிரம்பிய சின்னஞ்சிறு பெண்.
நாமதேவரும் இன்னும் பல ஸாதுக்களும் வந்திருந்தனர். நான்கைந்து நாட்களுக்குத் தொடர்ந்து ஸத்சங்கம் நடந்தபடியால், அனைவரும் கோராகும்பார் வீட்டில் தங்கியிருந்தனர்.
மதிய வேளையில் சாதுக்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். உத்தமமான ஸாதுக்களின் சங்கமத்தில் பகவத் கதை தவிர வேறென்ன இருக்கும்?
கோராகும்பார் மண்பாண்டங்கள் செய்பவர். அவர் வீட்டிலேயே பானைகளைச் சுட்டெடுக்கும் சூளையும் இருந்தது. சுட்ட பானைகள் நன்றாக வெந்துவிட்டதா என்று ஒரு கோலை வைத்துத் தட்டிப் பார்ப்பது வழக்கம். சாதுக்கள் வந்திருந்ததால் சூளையை மூட்டவில்லை. மேலும் அதன் அருகிலேயே மூங்கில் கோலும் கிடந்தது.
சின்னக் குழந்தையான முக்தா எல்லாவற்றையும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாள். வந்த அன்றே கோராவைக் குடைந்து குடைந்து கேள்வி கேட்டு அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தாள்.
உணவிற்குப் பின் எல்லோரும் பேசிக்கொண்டிருக்க குழந்தைக்குப் பொழுது போகவில்லை. ஓரத்தில் கிடந்த மூங்கில் கோலை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள்.
ஒவ்வொருவர் தலையிலும் லேசாகத்தட்டி
இது வெந்த பானை
இது வெந்த பானை
என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
என்னதான் குழந்தை என்றாலும், விஷ்ணுவின் அம்சமான ஞானேஸ்வரரின் தங்கையாக, சக்தியின் அம்சமாகப் பிறந்திருப்பவள். சிறு குழந்தையிலேயே ஞான அருவி அவளிடமிருந்து பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அவளது விளையாட்டுக்கள் அனைத்துமே தெய்வீக விளையாட்டுக்கள்தாம்.
அவள் வெந்த பானை என்று சொன்னாளே தவிர, உண்மையில் அவள் குறிப்பிட்டது என்னவென்றால், மோக்ஷத்திற்குத் தகுதியான ஜீவன் என்பதுதான்.
அனைவருக்கும் அவளைப் பற்றித் தெரியும் என்பதால் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்படியா குழந்தை? எனக்கு வைகுண்டம் கிடைக்குமா?
என்று கேட்டு சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தனர்.
சிற்றாடையின் நுனியைப் பிடித்துக்கொண்டு தாவித் தாவி அவள் செல்வதும், செப்பு வாய் திறந்து பேசுவதும், ஸாக்ஷாத் அம்பிகையே குழந்தை உருவில் நடப்பதைப் போல் கொள்ளை அழகுடன் இருந்தது.
ஒவ்வொரு ஸாதுவாகத் தட்டிக்கொண்டே வந்தாள்.
நாமதேவரின் முறை வந்தது.
அவரது தலையைக் கோலால் லேசாகத் தட்டி
இது வேகாத பானை என்றாளே பார்க்கவேண்டும்.
நாமதேவர் அதிர்ந்துபோனார்.
சிறுகுழந்தையின் விளையாட்டென்று ஒதுக்க முடியவில்லை அவரால்.
என்னம்மா சொல்ற? எனக்கு வைகுண்டம் இல்லையா?
இல்லையென்று தலையசைத்தது குழந்தை.
இவ்வளவு ஸாதுக்கள் முன்னிலையில் ஒரு சின்னக் குழந்தை இப்படி சொல்லிவிட்டாளே.
கேட்டுக்கொண்டு ஞானேஸ்வரரும் பேசாமல் இருக்கிறாரே.
நான் இவளை மாதிரி இருக்கும்போதே பாண்டுரங்கனோடு பேசி விளையாடியவன்..
இவர்கள் என்ன எனக்கு வைகுண்டம் உண்டு, இல்லை என்று சொல்வது?
என்னோடு தினமும் பேசும் பாண்டுரங்கனிடமே நான் கேட்கிறேன்..
மிகுந்த வருத்தத்தோடு உடனே கிளம்பி பண்டரிபுரம் திரும்பி விட்டார் நாமதேவர்.
பாண்டுரங்கன் என்ன சொன்னான்?
அடுத்த பதிவில்..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment