குருவருள் ஒன்றே கதி - 8
தங்கச் சொம்பு
ஸந்த் துகாராம் அவர்களது கீர்த்தனத்தில் பகவானே மயங்கும்போது மக்கள் எம்மாத்திரம்?
பலரும் தங்களது கிராமத்துக்கு அழைத்து கீர்த்தனம் செய்யச் சொல்லிக் கேட்டு மகிழ்வர்.
ஒரு சமயம் சிஞ்ச்வாடி என்ற கிராமத்திற்கு துகாராம் மஹராஜ் அழைக்கப்பட்டிருந்தார். கிராமத்து மக்கள் அவரை நன்முறையில் வரவேற்றுத் தங்க வைத்திருந்தனர். அதே சமயம் புராணக் கதைகள் சொல்லக்கூடிய ஒரு ஏழை அந்தணர் அந்த கிராமத்திற்கு வந்தார். அந்த கிராமத்தில் ஏதேனும் கதா காலக்ஷேபம் நிகழ்த்தி அதில் வரும் பொருளைக் கொண்டு தன் மகளது திருமணத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்பது அவரது எதிர்பார்ப்பு.
அந்த ஊருக்கு வந்ததும்தான் அவருக்கு துகாராம் மஹராஜ் அங்கு வந்திருப்பது தெரிந்தது. துகாராம் மஹராஜ் கீர்த்தனம் செய்யும் சமயத்தில் தான் கதை சொன்னால் எடுபடாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எல்லோரும் அங்குதான் செல்வார்கள். தன் கதைக்கு ஒருவரும் வரமாட்டார்கள். அவரது மகளின் கல்யாணத் தேதி நெருங்கிக்கொண்டிருந்தபடியால், அவருக்கு பொருளுக்கு என்ன செய்வது என்ற கவலை வந்துவிட்டது.
துகாராமைப் போன்ற மஹாத்மாவின் கீர்த்தனத்தை அவரும் ஆனந்தமாய்க் கேட்பார்தான் என்றாலும், மகளின் கல்யாணக் கவலையால், மறுநாள் வேறு ஊருக்குச் சென்று முயற்சி செய்யலாம் என்று நினைத்தார்.
அதற்குள் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பேச்சு வாக்கில் இந்த அந்தணரைப் பற்றி துகாராமிடம் சொல்லிவிட்டார்.
அவர் பாவம், மகளோட கல்யாணத்துக்கு உதவிக்காக இந்த ஊருக்கு கதை சொல்ல வந்தார். ஆனால், மஹராஜின் கீர்த்தனம் இருப்பதால் தன் கதை எடுபடாது என்று கிளம்புகிறார்.
துகாராம் சட்டென்று எழுந்தார்.
அவர் எங்கே இருக்கார்?
அவரைப் பார்க்கணுமே..
அவரிடம் அழைத்துச் செல்லப்பட்டதும்,
அந்தணரை வணங்கினார் துகாராம் மஹராஜ்.
குழந்தையின் கல்யாணம் முக்கியம். நான் கிளம்பறேன். நீங்க ஒரு வாரம் இருந்து பாகவதம் சொல்லணும்.
அப்படி இல்லை மஹராஜ், என்னால் நீங்க ஊரை விட்டுக் கிளம்பறீங்கன்னு கேள்விப்பட்டால் ஊர் மக்கள் என் மேல் வருத்தப்படுவாங்க
அப்படியா, சரி ஒன்னு செய்யலாம். நீங்க ஊரை விட்டுப் போகவேணாம். சாயங்காலம் வாங்க. பாத்துக்கலாம்
மாலை கீர்த்தனம் நடக்கும் இடத்தில் அனைவரும் கூடினர். துகாராம் மஹராஜ், அந்த அந்தணரை முன்னிறுத்தி,
ஒரு வாரம் இவர் பாகவதம் சொல்வார். இவர் மகளின் கல்யாணத்திற்கு உங்களால் முடிந்ததை இவருக்கு கொடுத்து அவரோட ஆசீர்வாதத்திற்கு எல்லாரும் பாத்திரமாகணும். நானும் உங்களோட உட்கார்ந்து பாகவதம் கேட்கப் போறேன்
என்று அறிவித்தார்.
எப்பேர்ப்பட்ட உயர்ந்த குணம் அவருடையது? தன்னிடத்தில் இன்னொருவரை அமர்த்திவிட்டு, அவரை யாரும் தவறாகப் பேசக்கூடாது என்பதற்காக தானும் அமர்ந்து கதை கேட்டார்.
தினமும் மிகச்சிறப்பாக பாகவதக் கதை நடந்தது. துகாராம் மஹராஜே ச்ரவணம் செய்கிறார் என்பதால் பெரிய கூட்டம் வந்தது. கடைசி நாள் கதை முடிந்து அந்தணருக்கு மரியாதை செய்யும் சமயமும் வந்தது. ஊர் மக்கள் தங்களால் இயன்ற பொருள்கள், பணம் முதலியவற்றைக் கொடுத்தனர். துகாராம் அவற்றை வாங்கி, கொடுப்பவரின் பெயரைச் சொல்லிவிட்டு தன் கையால் அந்தணருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த ஊரில் ஒரு வடிகட்டிய கஞ்சன் இருந்தான். அவனது மனைவிக்கோ ஒரு பாகவதருக்கு உதவி செய்தால் எவ்வளவு நன்மை வரும்? கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் ஏதாவது கொடுக்கவேண்டுமே என்று மிகவும் ஆசைப்பட்டாள்.
கணவருக்குத் தெரியாமல் எதையும் கொடுக்கவும் இயலாது. தாய் வீட்டிலிருந்து தான் கொண்டுவந்த பாத்திரங்களில் ஒரு நசுங்கிய பித்தளை சொம்பு வீட்டில் இருந்தது. அதைக் கொடுத்தால் கணவர் திட்டமாட்டார். மேலும் அதுவும் எதற்காகவாவது பயன்படுமே என்றும் நினைத்தாள். எனவே, அந்த பழைய பித்தளைச் சொம்பை பளபளவென்று ஒரு பெட்டியில் போட்டுக் கொண்டுவந்துவிட்டாள்.
அதை எப்படியோ தெரிந்துகொண்ட அவளது பக்கத்து வீட்டுக்காரர் அதை ஊர்ப்பெரியவரிடம் சொல்ல, அவர்கள் அவளைப் பொதுவில் வைத்து ஏளனம் செய்ய எண்ணினர். அவள் பரிசுப் பெட்டியைக் கொண்டுவந்ததும் ஊர்ப் பெரியவர் சட்டென்று அதை வாங்கி
தங்கச்சொம்பு கொண்டுவந்திருக்கிறாள், பிரித்துக் கொடுக்கலாமே, எதற்குப் பெட்டி?
என்று சொல்லி துகாராம் மஹராஜ் கையில் கொடுத்தார்.
அந்தப் பெண்ணின் முகம் அவமானத்தால் சுண்டிப்போவதைக் கவனித்துவிட்ட துகாராம்,
ஆஹா, விட்டலன் தங்கச் சொம்பே தந்துவிட்டானே
என்று சொல்லிக்கொண்டே பெட்டியைப் பிரித்தார்.
உள்ளே..
நிஜமாகவே தங்கச் சொம்பு பளபளத்தது.
அந்தப் பெண்ணை அவமானப்படுத்த நினைத்தவர்களின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?
குருவின் அருளால் அன்று பித்தளையும் தங்கமாயிற்று..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment