குருவருள் ஒன்றே கதி - 4
முஸலகிஸலயம்
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை என்ற பெரியவர் வைணவ ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான ஆசார்யராவார்.
எண்ணற்ற நூல்களையும், வ்யாக்யானங்களையும் எழுதியவர். ஸ்ரீ ரங்கத்திலுள்ள பெரிய தாயாரால் வ்யாக்யான சக்ரவர்த்தி என்று அழைக்கப்பெற்றவர்.
அவருக்கு ஒரு சிஷ்யன் இருந்தான். அனைத்துப் பணிவிடைகளையும் பார்த்து பார்த்துச் செய்வான். இருந்தபோதிலும் நிரக்ஷரகுக்ஷியாக இருந்தான். படிப்பு சிறிதும் ஏறவில்லை. மிகவும் வெகுளி. சற்று லொடலொடவென்று பேசிக்கொண்டிருப்பான்.
ஒரு சமயம் எங்கோ சென்றுவிட்டு பெரியவாச்சான்பிள்ளை அவர்களது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் ஒரு பெரியவர் பெரிய க்ரந்தம் ஒன்றை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார்.
சும்மா போயிருக்கலாம். அவரருகில் சென்று
ஐயா என்ன படிக்கிறீர்கள்?
என்று கேட்டான்.
இவனைப் பற்றி எல்லோரும் அறிவர்.
படிப்பறிவில்லாத அவனுக்குச் சொன்னால் மட்டும் என்ன புரிந்துவிடப்போகிறது என்று நினைத்து மிகவும் ஏளனமாக
முஸலகிஸலயம்
படிக்கிறேன்
என்றார்.
முஸலகிஸலயம் என்றால், உலக்கை கூடத் துளிர்த்தாலும் துளிர்க்கும். ஆனால், உன் தலையில் ஒன்றும் ஏறாது என்பதாகப் பொருள்.
சீடனோ நிஜமாகவே அப்படி ஒரு நூல் இருக்கிறது போலும் என்று நினைத்துக் கொண்டான்.
மறந்துவிடாமல் இருப்பதற்காக திரும்ப திரும்ப முஸலகிஸலயம் என்று சொல்லிக்கொண்டு ஆசார்யனின் வீட்டை அடைந்தான்.
இவன் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு வருவதைக் கண்ட பெரியவாச்சான்பிள்ளை,
என்ன சொல்லிக்கொண்டு வருகிறாய்?
ஆசார்யனை தெண்டனிட்டு வணங்கிவிட்டுச் சொன்னான்.
வழியில் ஒரு பெரியவர் ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் முஸலகிஸலயம் படிக்கிறேன் என்றார். உண்மையாகவே சிறப்பு வாய்ந்த நூல் போலும். அதுதான் பெயர் மறந்துவிடாமல் இருப்பதற்காகச் சொல்லிக்கொண்டு வந்தேன்
அந்தப் பெரியவர் இவனைக் கேலி செய்திருக்கிறார். அதைக்கூட உணராத வெகுளியாய் இருக்கிறானே என்று பெரிதும் மனம் வருந்தினார் பெரியவாச்சான்பிள்ளை. அந்த சீடன்மீது அவருக்கு அளவிலாக் கருணை சுரந்தது.
அக்கணமே ஞானத்தை அடைந்தார் அந்த சீடர். பிற்காலத்தில் பெரும்புலமை பெற்று விளங்கியதோடு முஸலகிஸலயம் என்று ஒரு கிரந்தமும் செய்திருக்கிறார்.
வரதராஜர் என்ற அந்தச் சீடர் பல வாதங்களை வென்று வாதிகேசரி என்ற பட்டமும் பெற்று விளங்கினார்.
பின்னாளில் ஸன்யாஸம் பெற்று வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் என்று அழைப்பட்டார்.
சீடன்பால் குருவின் மனதில் சுரக்கும் கருணையானது அச்சீடனை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசென்றுவிடும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment