குருவருள் ஒன்றே கதி - 33
அவதார புருஷர்கள்
'உலகில் எத்தனை ஜீவராசிகள் உள்ளனவோ அத்தனை வழிகள் உள்ளன இறைவனைக் காண்பதற்கு'
என்பது ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் வாக்கு. அவற்றுள் எந்த வழியைப் பின்பற்றி ஒருவர் இறைவனை தரிசனம் செய்தாலும் அல்லது ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைந்தாலும் அவர் மஹாத்மாவாகிவிடுவார். யார் வேண்டுமானாலும் ஒரு ஸாதுவின் கருணையினாலோ, அல்லது வேறு ஸாதனைகள் மூலமோ கூட மஹாத்மாவாகிவிட முடியும். ஆனால், அவதார புருஷர்கள் என்பவர்கள் இறைவனின் அம்சமாகவோ, அல்லது இறைவனோ நேரடியாக பூமியில் இறங்கி வருபவர்கள். அவர்கள் பூமிக்கு வந்து செய்ய வேண்டிய சாதனைகள் ஏதுமில்லை. காலத்திற்கேற்றபடி எல்லா ஜீவன்களுக்கும் ஏற்ற ஒரு மார்கத்தை நிறுவுவதே அவர்களது பணி. அப்படிப்பட்ட அவதார புருஷர்கள் பெரும்பாலும் தனியாக வருவதில்லை. இரட்டையர்களாகவே அவதரிக்கிறார்கள். அவர்கள் அவதரிக்கும்போது கைங்கர்யத்திற்காக அவர்களது பரிவாரங்களும் ஆங்காங்கே பிறந்துவிடுவார்கள். ஸ்ரீ ஆளவந்தார் - ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யர் - ஸ்ரீ நித்யானந்தர், ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் - ஸ்ரீ விவேகானந்தர், எனும்படியாக இரண்டிரண்டு பேர்களாக அவதாரம் செய்கிறார்கள். ஒருவர் ஸங்கல்பம் செய்தால் மற்றொருவர் அதை நிறைவேற்றுவார்.
ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸருக்கு தன்னுடைய ஸ்வரூபம் நன்றாகத் தெரியும். தனனுடன் கீழே இறங்கி வந்திருப்பவர்கள் யார் யார், அவர்கள் எப்போது என்ன பணிக்காக தன்னிடம் வருவார்கள் என்பதையெல்லாமும் பவதாரிணியிடம் அவ்வப்போது கேட்டு கேட்டு ஆறுதலடைவார்.
நரேந்திரனை முதன்முதலில் பார்த்ததுமே பரமஹம்ஸருக்கு அவர்மீது அன்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.
நரேந்திரருக்கு அப்போது தன் ஸ்வரூபம் தெரியவில்லை.
அவருடைய குடும்பம் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. ஆன்மீகத்தில் அளவற்ற நாட்டம் இருந்தபோதிலும், குடும்பக் கஷ்டங்களும், அவை தீர ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமுமாக அலைமோதிக்கொண்டிருந்தார்.
ஒரு சமயம் அவர் பரமஹம்ஸரைப் பார்த்து,
டாகுர்ஜி, நீங்கள்தான் பவதாரிணி அம்மாவோடு பேசுவீர்களே. என் குடும்பத்திலுள்ள ப்ரச்சினைகள் எப்போது தீரும் என்று கேட்டுச் சொல்லுங்களேன்
என்றார்.
நான் ஏன் கேட்கணும்? நீயே கேட்கலாமே என்றார் குருநாதர்.
நான் எப்படிக் கேட்கமுடியும்?
இன்று இரவு பன்னிரண்டு மணிக்கு அம்மாவை உனக்கு தரிசனம் தரச் சொல்றேன். நீயே கேளேன்.
சரியென்றார் சிஷ்யர்.
ஞானி வாக்குக் கொடுத்து விட்டால் இறைவன் அதை நிறைவேற்றியாகவேண்டும்.
சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு, தாயைக் காணச் சென்றது தெய்வச்சேய்.
இதமான குளிர்காற்றின் சிலுசிலுப்பில் தாயிடம் என்ன கேட்கவேண்டும் என்று மனதிற்குள் பட்டியலிட்டுக்கொண்டே கோவிலுக்குள் சென்றார் நரேந்திரர்.
சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு, ஜாஜ்வல்யமாக, கண்களைக் கூசும் ஒளியுடன், பவதாரிணி தோன்றினாள்.
இனம் புரியாத பரவச நிலைக்குச் சென்றார் நரேந்திரர். கண்களிலிருந்து ஆறாகக் கண்ணீர் பெருக, குரல் தழுதழுக்க, விழுந்து விழுந்து வணங்கினார்.
என்ன வேண்டும் கேள் நரேந்திரா
தாயின் குரல் மதுரமாய் ஒலித்தது.
அம்மா..
அம்மா..
எனக்கு ஞானம் வேண்டும். எப்போதும் என் மனம் பக்தியில் மூழ்கட்டும்...
மோஹன முறுவலோடு தலையாட்டிவிட்டு மறைந்தாள் பவதாரிணி.
நரேந்திரர் பரமஹம்ஸரிடம் சென்றார்.
ஸாக்ஷாத் இறைவியை தரிசனம் செய்துவிட்டு வந்திருக்கும் நரேந்திரர் ஏதாவது சொல்வார் என்று பார்த்தால் வாயையே திறக்கவில்லை.
குருநாதர் பரிவுடன் கேட்டார்
நரேன், அம்மாவைப் பாத்தியா?
பார்த்தேன் டாகுர்ஜி
அப்படியா? என்ன சொன்னா என் தாய்? உன் பிரார்த்தனைகளைச் சொன்னாயா?
இல்லை டாகுர்ஜி.
ஏன்? ஏன்? ஏன் சொல்லல?
அன்னையைப் பார்த்ததும் என்னையே மறந்துட்டேன். பரவசத்தில் என்ன பேசறதுன்னு தெரியல. எல்லாம் மறந்துட்டது.
என்னதான் பேசின?
ஞானமும் பக்தியும் வேணும்னு கேட்டேன்.
ஸந்தோஷத்தை வெளியில் காட்டாமல் குருநாதர் சொன்னார்,
பாத்தியா, நான் வேணும்னா நாளைக்கு இரவு மறுபடி அம்மாவை உனக்கு தரிசனம் தரச் சொல்றேன். நாளைக்கு மறக்காம கேளு. சரியா?
சரி டாகுர்ஜி என்று சொல்லிவிட்டு வீடு சென்றார் நரேந்திரர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment