குருவருள் ஒன்றே கதி - 32
குழந்தை மனம் - 2
இராமேஸ்வர பட் என்ற பண்டிதர் சொல்லக் கேட்டு குழந்தை போன்ற தெள்ளிய மனமுடையாரான ஸந்த் துகாராம் தான் எழுதிய அத்தனை அபங்கங்களையும் மூட்டை கட்டி இந்திராயணி நதியில் போட்டுவிட்டார்.
அத்தனை பாடல்களும் அவர் ஆழ்ந்த அனுபவத்தில் திளைத்திருக்கும் போது விட்டலன் அருளால் வந்து கொட்டியவை. எனவே, பெற்ற குழந்தையைத் தொலைத்தது போன்ற துக்கம் மேலிட்டு நதிக்கரையிலேயே அமர்ந்து அழத் துவங்கினார்.
ஒரு நாளாயிற்று. இரண்டு நாளாயிற்று. மூன்றாவது நாளும் ஆயிற்று. உணவு செல்லவில்லை. நீரும் செல்லவில்லை. அவரது அழுகையும் நின்றபாடில்லை.
அங்கே பண்டரிபுரத்தில் காலை ப்ரபோதனத்திற்காக கதவைத் திறந்த பண்டாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
முதல்நாள் இரவு, டோலோத்ஸவம் செய்து அவர்தான் காப்பிட்டுச் சென்றார். மறுநாள் காலை கதவைத் திறந்தால், பாண்டுரங்கனின் தலையில் ஒரு பெரிய சாக்கு மூட்டை இருந்தது. அவனது உடைகள் அனைத்தும் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தன.
எல்லா பண்டாக்களும் ஓடிவந்தனர்.
என்ன லீலை புரியலையே.
எங்க போய் மூட்டையைத் தூக்கிண்டு வந்தாரோ?
என்ன மூட்டை? இறக்குங்கோ பாக்கலாம்..
ஒரு வாறு மூட்டையைக் கீழே இறக்கிப் பிரித்தனர். மூட்டை முழுதும் ஏதோ பாடல்வரிகள் நிரம்பிய நோட்டுக்கள். ஒவ்வொரு பாடலாகப் படித்தால் அவற்றின் கடைசி வரியில் துகாம்ஹணே என்று முத்திரை வந்தது.
இதெல்லாம் ஸாது துகாராமின் அபங்கம்
ஆமாமா. நானும் அவரை அடிக்கடி கோவில்ல தர்சனம் பண்ணியிருக்கேன்.
விட்டலன் எதுக்கு இந்தப் பாட்டு மூட்டையைத் தூக்கிண்டு வந்தார்.
அப்போது ஒரு அர்ச்சகர் மேல் ஆவிர்பவித்து, விட்டலன் சொன்னான்.
இவை ஸந்த் துகாராமின் பாடல்கள்தான். இவற்றை உரிய மரியாதையோடு எடுத்துக்கொண்டு அவர் வசிக்கும் தேஹு கிராமம் சென்று அவரிடம் ஸமர்ப்பிக்கவும்
பண்டாக்கள் உடனே அதற்கு ஏற்பாடு செய்து, சத்ர, சாமர மரியாதைகளோடு மூட்டையைத் தூக்கிக்கொண்டு தேஹு கிராமம் சென்றனர்.
பண்டரிநாதனின் கோவில் மரியாதைகளோடு சிலர் வருவதைப் பார்த்த ராமேஸ்வர பட் அவர்களிடம் விசாரித்தார்.
விட்டலன் தலையில் துகாராமின் பாட்டு மூட்டை இருந்ததென்று கேட்டதும் பாம்பை மிதித்தாற்போல் துள்ளினார்.
விட்டலனே நதியில் மூழ்கி எடுத்தானா? அவ்வளவு உயர்வானவரை எப்படி எள்ளி நகையாடினோம்? குழந்தைபோல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாரே. குலத்தையும், படிப்பையும், அந்தஸ்தையும் வைத்து பக்தியை எடை போட்டுவிட்டோமே. அனலில் இட்ட புழுவாய்த் துடித்துக் கொண்டு, அவர்களை துகாராமிடம் அழைத்து வந்தார்.
அவரிடம் மூட்டையைக் கொண்டு சேர்த்ததும், துகாராம் மகிழ்ந்தார். இருந்தபோதிலும் ஒரு கேள்வி அவரது மனத்தைக் குடைந்தது.
அதென்ன? மூணு நாள் கழிச்சு மூட்டையைக் கொண்டு வரது? முதல் நாளே கொண்டுவந்திருக்கலாமே. அழுகை பொறுக்காம கொண்டுவந்தானோ? உண்மைல பாண்டுரங்கனுக்கு என் பாட்டு பிடிக்கலையோ?
மூட்டையை வாங்கிக் கொண்டு விட்டலனை த்யானம் செய்தார்.
த்யானத்தில் வந்த விட்டலனைக் கேட்டும் விட்டார்.
விட்டலன் இடி இடியென்று சிரித்தான்.
சின்னக் குழந்தைபோல கேக்கறயே துகா.
நீ தண்ணில மூட்டையைப் போட்டதும் அது நனையாம இருக்கணுமேன்னு அடிலேர்ந்து பிடிச்சவனே நான்தானே...பாரு நோட்டில் ஒரு எழுத்துகூட தண்ணி பட்டு அழியவேல்ல. தண்ணி படறதுக்கு முன்னாடியே பிடிச்சு வெளில எடுத்துட்டேன்.
பின்ன ஏன் மூணு நாளா கொடுக்கல?
நான் படிச்சுப் பாத்தேண்டா அத்தனையும். ருக்மிணியும் விழுந்து விழுந்து படிச்சா. போறாததுக்கு ஸரஸ்வதி வேற கடன் வாங்கிண்டு போய் படிச்சுட்டு நேத்திக்குதான் திருப்பிக் கொடுத்தா. அதான் மூணு நாளாயிடுச்சு. ஒவ்வொரு அபங்கமும் அருமை.
என்ன பேசுவார் துகாராம். அவரது நிலையை எப்படிச் சொல்வது?
த்யானம் கலைந்து பார்த்தால் காலுக்கடியில் ராமேஸ்வர பட் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்.
ஐயா,நான்தான் உங்களை வணங்கணும். நீங்க இப்படி செய்யலாமா?
அதெல்லாம் இல்ல. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். பகவான் யாரை அங்கீகாரம் பண்றானோ அவாதான் பெரியவா.
என்னை மன்னிச்சு எனக்கு மந்திரோபதேசம் பண்ணுங்கோ
என்று அழுதார்.
துகாராம் மிகுந்த சங்கோஜத்துடன் பகவன் நாம உபதேசம் செய்தார். அந்தப் பண்டிதருக்கும் உத்தமமான பக்தி சித்தித்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment