குருவருள் ஒன்றே கதி - 31

குழந்தை மனம்‌ - 1

ஸந்த் துகாராம் ஒரு சமயம் மாலை வேளையில் கீர்த்தனம்‌ செய்வதற்காக நதிக்கரையில் அமர்ந்திருந்தார். மிகவும் எளிமையாக ப்ரதேச மொழியில், பக்தி சொட்டும்படி  அமைந்திருந்த அவரது பாடல்கள்‌, அனைவரையும் அவர்பால் ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை.

தினமும்‌ மாலை வேளைகளில் நடக்கும் கீர்த்தனத்தைக் கேட்க, ஆயிரக் கணக்கில்‌ மக்கள் கூடுவர். கீர்த்தனம்‌ பாடி பாடி, பகவத் குணமும்‌ சொல்வார். அந்த ஸத்சங்கம் நள்ளிரவு வரை நீடிக்கும்.
மறுநாள்‌ காலை, விவசாயி யா கட்டும், நெசவாளியாகட்டும், வியாபாரியும்கூட  முதல் நாள் கேட்ட கீர்த்தனத்தைப் பாடிக்கொண்டே பணியைச் செய்வார்கள். 

அவ்வூரில் இன்னும் சில பௌராணிகர்கள் இருந்தார்கள். துகாராமின் கீர்த்தனத்தைக் கேட்க வரும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ராமேஸ்வர பட் என்ற பண்டிதருக்கு பொறாமை கொழுந்து விட்டெரிந்தது.

நதிக்குப் போகும் வழியில் அவரது வீடு இருந்தது. மாலை வேளைகளில் துகாராமின் ஸத்சங்கத்திற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் செல்வதைக் கண்டு அவருக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று. 

எவ்வளவு தைரியம் பார் அவனுக்கு?
படிச்சிருக்கானா? வேதம் தெரியுமா? சாஸ்திரம்‌ தெரியுமா? தர்மம் தெரியுமா? ஒன்றும் தெரியாதவன்‌ உளறலைக் கேட்க எவ்வளவு கூட்டம்? எல்லோரையும் மடையர்களாக்கறான்.

சத்தமாக வாசல் திண்ணையில்‌ அமர்ந்துகொண்டு வழியில் செல்லும் மக்களைப் பார்த்துக் கத்திக்கொண்டே இருப்பார்.

ஒருநாள் அந்த வழியாகச் சென்ற துகாராமின் காதுகளில் இவரது சத்தம் விழுந்துவிட்டது. தன் பெயரைக் க்நெட்டதும் நின்றார். என்ன சொல்கிறார் என்று முழுதும் கேட்டபின் அருகில் சென்று வணங்கினார்.

நீ நமஸ்காரம்‌ பண்ணினா நல்லவன்னு ஆயிடுமா என்ன?

வணங்கியவரை வாழ்த்தும் மனம்கூட இல்லை அந்தப் பண்டிதரிடம்.

நான் என்ன தப்பு பண்ணினேன்னு சொன்னா திருத்திக்கறேன்.

தப்பா? ஒன்னா ரெண்டா? எல்லாமே தப்புதான்

எதைச் சொல்றீங்க?

சாயங்காலம் இப்படி ஊரைக் கூட்டி உபதேசம் பண்ண உனக்கு என்ன தகுதி இருக்கு?

ஐயா, நான் யாரையும் கூப்பிடறதில்ல. அவங்களா வராங்க. ரெண்டாவது நான் உபதேசம் எல்லாம் பண்றதில்ல. எனக்கென்ன தகுதி இருக்கு? 
எனக்கு விட்டலன் அனுக்ரஹம் பண்ற பாடல்களை யெல்லாம் பாடி பகவத் குணம் சொல்றேன். நீங்க வேணும்னா பாருங்க. பகவான் க்ருபாளு, பகவான் அழகு இப்படித்தான் இருக்கும் பாட்டெல்லாமே

பாட்டெழுதற அளவுக்குப்‌ பெரியாளா நீ?

இதெல்லாம்‌ நான் எழுதறதில்லீங்க. விட்டலன் கொடுத்தது.

உளற்றதெல்லாம் உளறிட்டு பகவான் பேர்ல பழியைப் போடற. சாமர்த்தியம்தான்.

ஞானிகளின் உள்ளம்‌ குழந்தை போன்றது.

அப்படியே நம்பிவிட்டார். 

தலையை‌ ஆட்டிக்கொண்டு 

இல்ல. எனக்கா எதுவும் தெரியாது. விட்டலன் கொடுத்ததுதான். என்றார்.

உனக்கு சித்தப்ரமை பிடிச்சிருக்கு. இவ்வளவு வேதம் சாஸ்திரம் எல்லாம் படிச்சிருக்கேன். எனக்குக் கொடுக்காத பகவான் ஒன்னும் தெரியாத உனக்கெப்படிக் கொடுப்பான்?

இப்ப நான் என்னதான் செய்யறது?

எல்லாத்தையும் மூட்டை கட்டிக் கொண்டுபோய் இந்திராயணி நதில போடு.

சரி ஐயா. அப்படியே செய்யறேன்

பண்டிதர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நமக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை, என்று நினைத்து அத்தனை பாடல்களையும் சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு போய் நதியில் போட்டுவிட்டார் துகாராம்.

பாடல்களைத் தூக்கிப்‌ போட்டுவிட்டாரே ஒழிய, துக்கம் தாங்கவில்லை. நதிக்கரையிலேயே அமர்ந்து அழத் துவங்கினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37