குருவருள் ஒன்றே கதி - 30
ஸ்பர்சவேதி - 2
பக்கத்துவீட்டிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு வந்திருந்த, இரும்பையெல்லாம் தங்கமாக்கும் சக்தி பெற்ற,
ஸ்பர்சவேதிக் கல்லை நாமதேவர் சிறிதும் யோசிக்காது நதியில் விட்டெறிந்துவிட்டார்.
அதிர்ந்துபோனாள் நாமதேவரின் மனைவியான ராஜாயி.
இப்படிப் பண்ணிட்டீங்களே. நான் பக்கத்து வீட்டில் கடனா வாங்கிட்டு வந்தது. ரெண்டுநாளில் திருப்பித்தரேன்னு சொல்லியிருக்கேன். இப்ப அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?
யாரா இருந்தாஎன்ன? இப்படியெல்லாம் பொருளாசை பிடித்து அலையக்கூடாது. இந்த மாதிரி விஷயமெல்லாம் ஆபத்தில் கொண்டு விடும். அவங்களுக்கும் நல்லதுதான் பண்ணியிருக்கேன்
இதையெல்லாம் அவங்க ஒத்துப்பாங்களா? சண்டை போடுவாங்களே.
அவங்க ஏதாவது சொன்னா பாத்துக்கலாம். பேசாம இரு
என்று மனைவியை அடக்கிவிட்டார்.
நாமதேவர் விட்டல ஸ்மரணத்தினால், எந்த விதமான ஆசைகளுக்கும் ஆட்பாடாமல் இருக்கலாம். பக்கத்து வீட்டுக்காரர் சும்மா இருப்பாரா.
கல்லைக் கொண்டுவரும்படி அவரது மனைவியிடம் சொல்ல, அவள் தயங்கித் தயங்கி ராஜாயியிடம் கொடுத்ததைச் சொல்ல, அவளை பயங்கரமாகத் திட்டி, திருப்பி வாங்கிவரும்படி அனுப்பினார்.
கல்லைக் கேட்டு வந்த அந்தப் பெண்ணிடம் அதை நாமதேவர் நதியில் போட்டுவிட்டார் என்று எப்படிச் சொல்லுவாள்? சொல்லித்தானே ஆகவேண்டும். எப்படியோ மென்று விழுங்கிச் சொல்லிமுடித்தாள். ஸ்பர்சவேதிக்கல்லை நதியில் போட்டாயிற்று என்று கேட்டதும் பக்கத்து வீட்டுப் பெண் மயங்கியே விழுந்து விட்டாள்.
பக்கத்துவீட்டுக்காரர் நாமதேவரை அடிக்காத குறையாக சண்டைக்கு வந்துவிட்டார். குய்யோ முறையோ என்ற அவரது கூச்சலைக் கேட்டு நாமதேவர் பொறுமையாகச் சொன்னார்.
இப்ப என்னதான் சொல்றீங்க?
நான் சித்தர்கிட்டேர்ந்து வேண்டி எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்த கல் அது. அதைத் தூக்கி வீச உமக்கென்ன உரிமை?
சரிதான். வீசிட்டேனே. என்ன பண்ணலாம்.
உமக்கு நான் மட்டும் வசதியாயிடுவேன்னு பொறாமை.
இல்ல இப்படியெல்லாம் திடீர்னு தங்கம் வந்தா ஆபத்தும் வரும். உழைச்சு சம்பாதிக்கற பொருள்தான் நிக்கும். உங்க நல்லதுக்குத்தான் பண்ணினேன். விட்டலன் இருக்கும்போது அதெல்லாம் எதுக்கு?
என் நல்லதைப் பத்தி நீங்க பேசவேண்டாம்.
என்னை என்னதான் பண்ணச்சொல்றீங்க?
நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. எனக்கு என்னோட ஸ்பர்சவேதிக்கல் வேணும்.
அப்படியா. அதை நதியில் போட்டுட்டேன். வாங்க தேடிப்பாக்கலாம்
என்று அவரையும் அழைத்துக்கொண்டு சந்திரபாகாவுக்குப் போனார்.
இங்கதான் வீசினதா நியாபகம்
என்று சொல்லிக்கொண்டே நதியில் இறங்கி, முத்தெடுப்பதுபோல் கை நிறைய கற்களுடன் வந்தார். அத்தனையும் ஸ்பர்சவேதிக்கற்கள்.
இதில எது உங்க கல்னு பாத்து எடுத்துக்கோங்க. மிச்சத்தை நதியிலயே போட்டுடலாம்
நாமதேவர் கைநிறைய ஸ்பர்சவேதிக்கற்கள். எப்படி இருக்கும் அந்த மனிதருக்கு?
பளாரென்று அறைந்தாற்போலிருந்தது. இவர் தொட்டால் கூழாங்கற்களெல்லாம் ஸ்பர்சவேதியாகிவிடுமா? இதென்ன? இவ்வளவு மகிமை உடையவரையா இழித்துப் பேசினோம்? இவ்வளவு சக்திகளை வைத்துக்கொண்டு இவர் ஒன்றுமேயில்லாதவர் போல், வறுமையோடு, விட்டல நாமத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறாரே. சிறுவயதிலெயே விட்டலனோடு பேசியவராயிற்றே. இப்படி அபசாரப் பட்டுவிட்டோமே.
அடியற்ற மரம்போல் நாமதேவர் கால்களில் விழுந்து மன்னித்துவிடும்படி கதறினார். கருணையே வடிவான அவருக்கு நாம உபதேசம் செய்தார். ஸ்பர்ச பாகவதர் என்றழைக்கப்படும் அவர் நாமதேவரின் சீடரானார். அவருக்கும் உண்மையான பக்தி சித்தித்தது.
அவரும் விட்டலன் மீது அபங்கங்கள் பாடியிருக்கிறார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment