குருவருள் ஒன்றே கதி - 3

ஸ்மரண தீக்ஷை


ஸ்ரீ ஆதிசங்கரர் தினமும் சிஷ்யர்களுக்குப்  பாடம் சொல்வார். அவரது சீடர்களுள் கிரி என்பவர் ஆசார்யருக்குப் பணிவிடைகள் செய்வதிலேயே அதிக கவனம்‌ செலுத்துவார். பாடங்களில் அவரது மனம்‌ செல்லாது. மற்ற சீடர்களுக்கு அவர் ஒரு மூடர்‌ என்று இளக்காரம் இருந்தது. 
இந்நிலையில் ஒரு நாள் சாங்கரர் ஸ்நானம் செய்துவிட்டு அனுஷ்டானங்களை முடித்து க் கொண்டு பாடம் சொல்ல அமர்ந்தார். கிரியோ குருவின் வஸ்திரங்களைத் துவைத்து காயப் போட்டுக் கொண்டிருந்தார். தினமும் செய்வார்தான். அன்றைக்கு ஏனோ சற்று தாமதமாகிவிட்டது. கிரியைத் தவிர மற்ற  எல்லா சிஷ்யர்களும் வந்துவிட்டனர். பகவத் பாதர் பாடத்தை ஆரம்பிக்காமல்‌ காத்துக் கொண்டிருந்தார்.

குரு ஏன் இன்னும் பாடத்தை ஆரம்பிக்கவில்லை?
 எல்லாரும் வந்தாயிற்றே

என்பது அனைவரின் எண்ணமாயிருந்தது.
 பொறுத்து பொறுத்துப் பார்த்துவிட்டு ஒரு சீடர் வாயைவிட்டுக் கேட்டுவிட்டார்.

குருவே, தங்களைக்‌கேள்வி கேட்பது தவறுதான். இருந்தாலும் மன்னித்து விடுங்கள். நாங்கள் அனைவரும் வந்தாயிற்று. இன்றைக்கு உபநிஷத் பாடம் சொல்வதாகச் சொன்னீர்கள். ஆனால், ஏன் இன்னும் தாங்கள் பாடத்தை ஆரம்பிக்கவில்லை? எங்களுக்கு பக்குவமில்லையா? அல்லது வேறு காரணங்கள் உண்டா?

பகவத்பாதர் சாதாரணமாகச் சொன்னார்.

கிரி இன்னும் வேலைகளை முடித்துவிட்டு  வரவில்லையே. அவனுக்காகத்தான் காத்திருக்கிறேன்.

அவ்வளவுதான். எல்லா சீடர்களும் கொல்லென்று சிரித்துவிட்டனர். 

அடிப்படைப்‌பாடமான  புருஷஸுக்தம்கூடச் சரியாக சொல்ல வராது கிரிக்கு. இதில் உபநிஷத் பாடம் என்ன புரியும்? குரு அவனுக்ககக் காத்திருக்கிறாராம்

என்பது அவர்களது எண்ண‌ஓட்டம்.

அவர்களின் ஏளனச் சிரிப்பைப் புரிந்துகொண்டு மனம் வருந்தினார் பகவத்பாதர். தன்னை நம்பி வந்த குழந்தையை மக்கு என்று மற்றவர்கள் ஏளனம்‌ செய்வதை அவரால் தாங்க முடியவில்லை. அவர் மனதில் கிரியின்பால் கருணை சுரந்தது.

ஆற்றங்கரையில் துணி உலர்த்திக்கொண்டிருந்த கிரிக்கு அக்கணமே ஏதோ மாற்றம் நிகழ்ந்தது..

இரு கரங்களும் சிரமேற்குவிந்தன.

விதிதாகில ஸாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத்கதிதார்தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கரதேஸிக மே ஷரணம்

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர து:க விதூநஹ்ருதம்
ரசயாகில தர்ஸநதத்வ விதம்
பவ சங்கரதேஸிக மே ஷரணம்

பவதா ஜநதா பவிதா
நிஜபோத விசாரணசாருமதே
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கரதேஸிக மே ஷரணம்

பல ஏவ பவாநிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கரதேஸிக மே ஷரணம்

ஸுக்ருதே திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்ஸநலாலஸதா
அதிதீநமிமம் பரிபாலய மாம்
பவ ஸங்கரதேஸிக மே ஷரணம்

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹஸஸ்சலத:
அஹிமாம்ஸுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கரதேஸிக மே ஷரணம்

குருபுங்கவ புங்கவகேதந தே
ஸமதாமயதாம் நஹி கோபி ஸுதீ:
ஸரணாகதவத்ஸல தத்வநிதே
பவ சங்கரதேஸிக மே ஷரணம்

விதிதா ந மயா விஸதைககலா
ந ச கிஞ்சந காஞ்நமஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கரதேஸிக மே ஷரணம்

ஆனந்த பாஷ்பம் பொங்க பாடிக்கொண்டே
ஒவ்வொரு சரணத்திற்கும் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துகொண்டு 
பகவத்பாதரின் ஸந்நிதியை அடைந்தார் கிரி.
அத்தனை சீடர்களின் தலைகளும் கவிழ்ந்தன. 
கிரி தான் தோடகாசார்யார் என்று அழைக்கப்படுகிறார். 
குருவின் பெருமையை விளக்கும் அந்தப் பாடல் தோடகாஷ்டகம் ஆகும்.

சீடனுக்கு ஞானம் வருவதற்கு குரு அவனை ஸ்மரித்தாலேகூடப் போதுமானது.

இதேபோன்ற சரித்ரம் வைணவ ஸம்ப்ரதாயத்திலும் உண்டு.. 
அதை அடுத்த பதிவில் காண்போம்..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37