குருவருள் ஒன்றே கதி - 29
ஸ்பர்சவேதி - 1
ஸந்த் நாமதேவர் பெரிய மஹாத்மா. மஹாத்மாவாக இருந்தபோதிலும், யார் எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார். தானாக வியாபாரம் செய்தோ, வேலைக்குச் சென்றோ தேவையான அளவு பொருளீட்டுவதற்கு அவரது மனோபாவம் ஒத்துழைக்கவில்லை. வெகு குறைவான சம்பாத்யம். எந்நேரமும் கோவிலிலேயே வாசம்செய்துகொண்டு விட்டல ஸ்மரணத்திலேயே ஆழ்ந்திருந்ததால், அவரால் சமூகத்திற்கேற்றபடி வாழவும் இயலவில்லை. குடும்பத்தில் நிறைய குழந்தைகள், ஜனாபாய், நாமதேவரின் தாயார், இவர்களைத் தவிர திடீர் திடீரென்று வரும் விருந்தினர்கள். செலவு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. அவரது மனைவிதான் எப்படியோ சமாளித்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
ஒருநாள் பக்கத்து வீட்டுப் பெண்மணியை கவனித்ததில் ஏதோ விசேஷமாகப் பட்டது. எதுவாயினும் பகிர்ந்துகொள்பவள், சில நாட்களாக எதுவும் பேசுவதில்லை. புதுபுது நகைகளாகப் போட்டுக்கொண்டிருந்தாள். நாமதேவரின் மனைவியான ராஜாயிக்குத் தெரிந்த வரையில், பக்கத்து வீட்டுக்காரர் மிகவும் சாதாரணமாக வேலை செய்பவர்தான். திடீர்ப் பணப்புழக்கத்தின் காரணம் புரியவில்லை.
மெதுவாக சிறிது வெல்லம் கடன் வாங்கும் சாக்கில் பக்கத்து வீட்டிற்குள் சென்றாள்.
ராஜாயி வருவதை பக்கத்து வீட்டுப் பெண்மணி கவனிக்கவில்லை. பார்த்திருந்தால் வாசலோடு பேசி அனுப்பியிருப்பாள்.
இவள் வெகுநாள் நட்பு என்ற உரிமையில் உள்ளே சென்ற ராஜாயிக்கு, அது வீடா, ஏதாவது இந்திரலோகத்திற்குள் வந்துவிட்டோமா என்று சந்தேகம் வந்துவிட்டது. கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். நிஜம்தான். ப்ரமையில்லை.
வெளியில்தான் அந்த வீடு சாதாரணமாக இருந்தது. உள்ளே சென்றால், எங்கு நோக்கினும் தங்கத்திலான பொருள்கள். பாத்திரங்கள், நாற்காலி, மேசை, கதவின் பிடி, சுவற்றிலும் ஆங்காங்கே தங்க ரேக்குகள் பதிக்கப்பட்டிருந்தன.
சிலைபோல் நின்றுவிட்டாள்.
சமையலறை யிலிருந்து வெளியே வந்த அந்த வீட்டுப் பெண்மணி அதிர்ந்து போனாள்.
எப்படியோ பேசி, ராஜாயி கேட்ட வெல்லத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாள்.
வீட்டிற்கு வந்த ராஜாயிக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. நம்மைப்போல் சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருந்தாள். இவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இத்தனை வருடங்களாக நட்பில் இருந்தும் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லையே. தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
எப்படியோ அந்தப் பெண்ணிடம் பேசி பேசி ஒருவாறு ரகசியத்தை அறிந்துகொண்டாள் ராஜாபாய்.
எங்க வீட்டில ஒரு விசேஷக் கல் இருக்கு. ஸ்பர்சவேதின்னு பேராம். ரொம்பவும் கடன்ல கஷ்டப்பட்டதால, ஒரு சித்தர்கிட்ட வேண்டினோம். அவர் கொடுத்தார். அந்தக் கல்லால இரும்புப்பொருள் எதைத் தொட்டாலும் அது தங்கமாயிடும்
என்று சொல்லி, ஒரு இரும்பு உலக்கையை ராஜாயியின் எதிரேயே தங்க உலக்கையாய் மாற்றிக் காண்பித்தாள் அந்தப் பெண்.
நாமும் எவ்வளவுநாளுக்குத்தான் பட்டினியில் வாடறது? குழந்தைகள் பசின்னு கேக்கும்போது உயிரே போயிடும்போல இருக்கு.இவரும் சம்பாதிச்சு எதுவும் கொண்டு வர வழியா இல்ல. கேட்டா விட்டலன் பார்த்துப்பான்னு சொல்றார். அவளிடம் ஒரு இரண்டு நாள்களுக்கு அந்தக் கல்லைக் கேட்டுப் பார்ப்போம். ரெண்டே நாள்தான். இருக்கற ரெண்டு பழைய இரும்பு சாமானை தங்கமா மாத்திண்டு திருப்பிக் கொடுத்துடலாம். கொஞ்ச நாளைக்காவது பசங்க ஒரு வேளையாச்சும் நன்னா சாப்பிடட்டும் என்று நினைத்து,
மறுநாள் காலை சென்று தோழியிடம் அழுதாள்.
அந்தப் பெண்ணோ,
எங்க வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சா என்னைக் கொன்னே போடுவார். அதெல்லாம் கொடுக்க முடியாது
என்று கறாராகச் சொல்லிவிட்டாள். இருந்தாலும் பல வருஷங்களாகப் பழகிய தோழியின் குடும்பம் வாடுவதைக் காண சகியாமல் மனமிரங்கி ஏகப்பட்ட எச்சரிக்கைகளைச் செய்துவிட்டு பூஜையறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த ஸ்பர்சவேதிக் கல்லைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
மிகுந்த சந்தோஷத்துடன், வீட்டுக்கு வந்த ராஜாயி, ஒரு சிறிய இரும்புத் தடியைத் தங்கமாக்கினாள். பின்னர், நாமதேவர் வெளியே அஎன்றதும் அவருக்குத் தெரியாமல் அதை சந்தையில் விற்று, ஏராளமான பணம் பெற்றுக்கொண்டு, வீட்டிற்கு வேண்டிய மளிகை அனைத்தையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். கல்லைப் பத்திரமாக ஒளித்து வைத்து விட்டு, ச்மையலைத் துவங்கும் நேரம், நாமதேவர் வந்துவிட்டார்.
தடபுடலான சமையல் ஏற்பாட்டைக் கவனித்துவிட்டு மனைவியை அழைத்தார்.
ராஜாயீ...
தீர்த்த பாத்திரத்தோடு வெளியில் வந்தவளைப் பார்த்து,
இன்னிக்கென்ன விசேஷம்? சமையல் தடபுடலா இருக்கே?
சும்மாதான். ரெண்டுநாளா குழந்தைகள்ளாம் சாப்பிடவேல்ல. அதான்.
சரி. இவ்ளோ மளிகை சாமான் வந்திருக்கே. ஏது? கடன் வாங்கினியா?
ஆமா, ஒரு பொருளும் சரியா வாங்கிப் போடறதில்ல. எப்படி வந்தா உங்களுக்கென்ன?
அப்படில்லாம் சொல்லக்கூடாதும்ம்மா. யாராவது எதையாவது கொடுத்தா வாங்கிக்கறதா? அப்றம் அந்தக் கடனை அடைக்க ஜென்மா வந்துடும்.
விட்டலனோட குடும்பம் இது. இன்னொருத்தர் கிட்ட கையேந்தறது அவனுக்கு அவமானமில்லையா? என்ன பண்ணின சொல்? ஏது இவ்ளோ சாமான்?
என்று மிரட்டினார்.
அவரது கோபத்தைப் பார்த்து மிரண்ட ராஜாயி உண்மையை உளறிக் கொட்டினாள்.
பொறுமையாகக் கேட்ட நாமதேவர்,
அப்படியா, இரும்பைத் தங்கமாக்குமா? ஸ்பர்சவேதியா? எங்கே எனக்கும் காட்டேன் பாக்கலாம்
ஒன்றுமறியாதவர்போல் கேட்க, சமாதானமாகி விட்டார் என்று நினைத்து, குழந்தைபோல் குதிதுக்கொண்டு கல்லை எடுத்து வந்தாள்.
சட்டென்று கல்லை வாங்கிய நாமதேவர், விடுவிடுவென்று நடந்தார். சந்திராபாகா நதியில் விட்டெறிந்துவிட்டு வந்துவிட்டார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment