குருவருள் ஒன்றே கதி - 28

முதலைக்கு அருள் - 2

தன்னைச் சோதனை செய்வதற்காகக் குளத்தில் முதலையைக் கொண்டுவிட்டுவிட்டு இப்போது கதறியழும் அந்த மனிதனைக் கருணையோடு பார்த்தார் ஆலங்குடி பெரியவா. 

நீ ஒன்னும் தப்பு பண்ணலப்பா. அழாத. நான் சொன்னது நிஜம்தானா சரிபாக்கறது ஒரு தப்பா. அழாத.
என்றார்.

இப்படிக்கூட ஒருவர் இருக்கமுடியுமா? முதலை கடித்து காலில் குருதி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும்போது, எவன் அதற்குக் காரணமோ அவனிடம் இவ்வளவு கருணையோடு ஒருவர் பேசமுடியுமா?

ஸாதுக்களால் மட்டுமே இயன்ற விஷயம் அது.

அவன் அழுதுகொண்டே சொன்னான்.

நீங்க உடனே வாங்க. இதுக்கு மருந்து போடலாம். உங்களுக்கு வேணும்னா முதலை கடிச்சாக்கூட  வலிக்காம இருக்கலாம். ஆனா இதுக்குக் காரணமான என்னால் உங்க காலில் ரத்தம் வரதைத் தாங்கமுடியாது..

பெரியவா அவனைக் கருணை பொங்கப் பார்த்துவிட்டுச்  சொன்னார்,

நான் கஜேந்திர மோக்ஷம் மட்டுமா சொன்னேன்? அதுக்கு முன்னாடி ஜடபரதர் சரித்ரமும் சொன்னேனே. ஆத்மா வேற சரீரம் வேற ன்னு உபதேசம் பண்ணினேனே. அதுவும் நிஜம்தானே. அதனால், உடம்பில் இருக்கும் காயம் என் ஆனந்தத்தை பாதிக்காது. கவலைப் படாதே

நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நான் உங்களை இந்த உடலின் வழியாத்தானே பாக்கறேன். என்னை நீங்க மன்னிச்சுட்டது நிஜம்தான்னா,  என்னுடைய சமாதானத்துக்காகவது வைத்தியம் பண்ணிக்கணும்.

சரி, உனக்காக வைத்தியம் பண்ணுவோம். ஆனா, நான் சொல்ற வைத்தியந்தான். சரியா?

சரி.

அதற்குள் இன்னும் சிலர் வந்துவிட்டனர். 
பெரியவா சில மூலிகைகளின் பேரைச் சொல்லி,
 அதையெல்லாம்  எண்ணெயிலிட்டுக் காய்ச்சி எடுத்துண்டு வா. கொதிக்கற எண்ணெய்யை இந்தப் புண்ணில் விட்டா சீக்கிரம் சரியாகும்.

அவர் வாயால் சொன்னதற்கே, கொதிக்கும் எண்ணெய் மேலே பட்டாற்போல் துடித்துப் போனார்கள் அனைவரும்.
முதலை கடித்து ரணகளமாயிருக்கும் காலில் கொதிக்கும் எண்ணெய்யை விடுவதா?

பெரியவா? இதென்ன முரட்டு வைத்தியம்? 

இதைப் பண்றதா இருந்தா இருந்தா பண்ணுங்கோ. இல்லாட்டா வேற  வைத்தியம் வேண்டாம்.

அத்தனை பேரும் உறைந்துபோயிருக்க, 
மூலிகையையும் எண்ணெயையும் கொண்டுவரச் சொல்லி, தானே காய்ச்சி, அதைக் கொதிக்க கொதிக்க தன் காலில் சிரித்த முகத்துடன் தானே விட்டுக்கொண்டார் ஆலங்குடி பெரியவா. 

அவரது காலில் புண்ணும் வெகு சீக்கிரமாக குணமாகிவிட்டது.

சற்றேறக்குறைய  நூறாண்டுகளுக்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்த ஆலங்குடி பெரியவரின் ஸமாதி முடிகொண்டானில் உள்ளது. இவர்  முடிகொண்டான் ஸ்வாமிகள் என்றும் அழைக்கப்படுகிறார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37