குருவருள் ஒன்றே கதி - 26
காகமும் கருடனும்
ஸந்த் ஏகநாத ஸ்வாமி பைடன் என்றழைக்கப்படும் ப்ரதிஷ்டான புரத்தில் வசித்துவந்தார். இறைவனே அவருக்கு பன்னிரண்டு வருடங்கள் சேவை செய்தபோதிலும், ஊரார் அனைவரும் அவரை மஹாத்மா என்று போற்றியபோதிலும் அவரது மகனான ஹரிக்கு ஏகநாதர் மீது பூரண நம்பிக்கை வரவில்லை.
நம்மோடுதான் எப்போதும் இருக்கிறார். நம்மைப் போலவே குளிக்கிறார், சாப்பிடுகிறார், உறங்குகிறார், ஜபம் செய்கிறார், பூஜை செய்கிறார். மஹாத்மா என்று கொண்டாடும் அளவிற்கு இவரிடம் வேறென்ன தனித்தன்மை இருக்கிறது என்ற அலட்சியம் இருந்தது.
யாரேனும் வந்து புகழ்வதை ஏகநாத ஸ்வாமி அறவே தவிர்த்த போதிலும், அதைத் தாண்டி அவரைக் கொண்டாடுபவர்களும் இருக்கத்தான் செய்தனர்.
அவ்வூரிலிருந்த பெண்மணி ஒருத்தி ஏதோ காரணத்திற்காக ஸஹஸ்ர ப்ராம்மண போஜனம் செய்விப்பதாக வேண்டிக்கொண்டாள். அதாவது ஆயிரம் அந்தணர்களுக்கு உணவிடுதல். வேண்டுதல் நிறைவேறிவிட்டது. ஆனால், அவளது வறுமை காரணமாக ஆயிரம் பேருக்கு அவளால் உணவிட இயலவில்லை. வேண்டிக்கொண்டதை நிறைவேற்ற இயலாமல்மிகவும் வருந்தினாள். ஒருநாள் அவளது குலதெய்வம் அவளது கனவில் வந்து,
இவ்வூரிலிருக்கும் ஸந்த் ஏகநாத ஸ்வாமிக்கு அன்னமிட்டால், ஸஹஸ்ர ப்ராம்மண போஜனம் செய்வித்த பலன் கிட்டும்
என்று திருவாய் மலர, அவளது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
மறுநாள்காலை, நேராக புறப்பட்டு, ஏகநாத ஸ்வாமியிடம் வந்துவிட்டாள். முதலில் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு, அவள் வருந்துவதையும், குலதெய்வத்தின் வார்த்தை என்பதாலும், ஒரு நாள் பார்த்துச் சொல்லி அன்று வருவதாக ஒப்புக்கொண்டார்.
அவ்வளவுதான். அவரது மகனான ஹரிக்கு, வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததுபோலாயிற்று.
இதெல்லாம் சுத்த பித்தலாட்டம். நீங்க ஒருத்தர் சாப்பிட்டா, ஆயிரம் பேர் சாப்பிட்டதாயிடுமா? அந்தம்மாக்குதான் பித்து பிடிச்சிருக்குன்னா, உங்களுக்கென்ன? இதெல்லாம் தெய்வ குத்தமாகப்போகுது
என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசிக்கொண்டிருந்தான்.
பொறுமையே உருவான ஏகநாதர் எதற்கும் பதில் சொன்னாரில்லை. அந்தப் பெண்மணியின் வீட்டிற்குச்செல்லும் நாள் வந்தது.
நீயும் என்னோட வாயேன். அந்தம்மா சந்தோஷப்படுவாங்க.
என்று சொல்லி ஹரியையும் கூட அழைத்துப்போனார் ஏகநாதர்.
தந்தையும் மகனுமாக வந்தது அந்தப் பெண்மணிக்கு இரட்டிப்பு சந்தோஷம். உண்டுமுடித்ததும், இலையை எடுத்து சுத்தம் செய்ய யத்தனித்த அந்தப் பெண்மணியைத் தடுத்தார் ஏகநாதர்.
இலையை ஹரியே எடுப்பான்
என்று சொல்லிவிட்டார்.
அவளது வீட்டுக்கு உண்ண வந்த விருந்தாளியையே இலை எடுக்கச் சொல்வது சங்கடமாக இருந்தபோதிலும், ஏகநாதர் மேலிருந்த மரியாதையினால் பேசாமலிருந்தாள் அந்த்ப் பெண்மணி.
தந்தை சொல்லிவிட்டாரே என்று ஹரியும் இலையெடுக்கச் சென்றார்.
தான் சாப்பிட்ட இலையை எடுத்துப் போட்டுவிட்டார். ஏகநாதர் உண்ட இலையை எடுத்துப்போட்டுவிட்டுப் பார்த்தால், அந்த இடத்தில் இன்னொரு இலை இருந்தது. அதையும் எடுத்தால், அடியில் இன்னொரு இலை வந்தது. இப்படியாக ஹரி எடுக்க எடுக்க அடியில் ஒரு இலை முளைத்துக்கொண்டே இருந்தது. ஆயிரம் இலைகள் வரை வந்துகொண்டே இருந்தன.
பொட்டில் அறைந்தாற்போலிருந்தது ஹரிக்கு. அருகிலேயே இருப்பதால், அவரது மகிமையை உணராது போனோமே என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். தந்தையிடம் பலவாறு மன்னிப்பு கேட்டார்.
மஹான்கள் மனித உருவில் இருந்த போதிலும், சாதாரண மனிதர்கள் அல்லர். அவர்களது மகிமை சொல்லொணாதது.
காகமும் கருடனும் ஒன்றாய் அமர்ந்தாலும்
கருடனைப் போல் காகம் பறந்திடுமோ? - அதுபோல்
மானுடனாய் வந்து பிறந்திருந்தாலும் குருவின் லீலைகள் மாலினை ஒத்ததன்றோ?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment