குருவருள் ஒன்றே கதி - 25
மாறிடும் பொல்லா விதி
ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் அணுக்கமான சீடர் மதுர்பாபு என்பவர். அவர் அன்னை பவதாரிணி கோவிலைக் கட்டிய ராணி ராசமணி என்பவரின் மாப்பிள்ளையாவார். பெரும்செல்வந்தரான ராணியின் மூத்த மகளைத் திருமணம் செய்திருந்த அவரிடம் சொத்து முழுவதையும் நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்திருந்தார் ராணி. திடீரென மூத்த மகள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, சிறிதுகாலம் கழித்து இளைய மகளையும் அவருக்கே திருமணம் செய்து கொடுத்திருந்தார் ராணி ராசமணி.
மதுர்பாபு மிகவும் நல்லவர், நேர்மையானவர் என்பதும் அதற்குக் காரணம்.
சிறிது நாள்களாக மதுர்பாபுவின் முகம் வாடியிருப்பதைக் கண்ணுற்ற ஸ்ரீ ரமக்ருஷ்ணர் அவரைக் காரணம் கேட்டார்.
மதுர்பாபு முதலில் எதுவும் சொல்லவில்லை. மிகவும் வற்புறுத்திக் கேட்கவே,
விடுங்கள் மஹராஜ், எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.
என்ன? விதிப்படி என்ன நடக்கும்?
என் முதல் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துட்டா. இப்போ இரண்டாவது மனைவியின் உடல்நிலையும் மோசமாயிட்டே வருது. ஒருவேளை இவளுக்கும் ஏதாவது ஆயிட்டதுன்னா என்ன செய்யறதுங்கற கவலைதான்.
பிறப்பு இறப்பெல்லாம் நம் கையில இல்லைதான். ஆனா, மகளுக்காகத்தான் என்னை ராணி இங்க வெச்சிருக்காங்க. அவங்க மகளே இல்லன்னா என்னையும் விரட்டிடுவாங்களோ என்னமோ..
என்ன வைத்தியம் செய்தும் குணமாகமாட்டெங்குது. நாளுக்கு நாள் மோசமாயிட்டே வருது. அவ படற வேதனையையும் பாக்கமுடியல.
பரமஹம்சர் கேட்டார்
நீ என்ன விதி விதின்னு சொல்ற? உனக்கொரு கஷ்டம்னா நான் சும்மா இருப்பேனா? அம்மாகிட்ட ப்ரார்த்தனை பண்றேன் சரியாயிடும். கவலைப்படாத.
அவ விதி நோயை அனுபவிக்கணும்னு இருந்தா நீங்களோ காளியோ என்ன செய்ய முடியும்?
என்ன? காளியாலகூட, ஜகதம்பாவாலகூட விதியை மாத்த முடியாதா?
குழந்தைபோல் கேட்டார் பரமஹம்சர்.
அதெல்லாம் முடியாது மஹராஜ்.
ஓ, அப்படியா சொல்ற?
என்று கேட்டுவிட்டு, பவதாரிணியைப் பார்த்தார் பரமஹம்சர். அவளது விஷமச் சிரிப்பு அவரைவிட வேறு யாருக்குப் புரியும்?
எவ்வளவோ கஷ்டங்களிலிருந்தும், ப்ரச்சினைகளிலிருந்தும் காப்பாற்றியிருந்தபோதும், மதுர்பாபுவிற்கு அன்னை மீது நம்பிக்கை வரவில்லையே என்று மிகவும் வருந்தினார்.
காலையில் தோட்டத்திற்குச் சென்ற ராமக்ருஷ்ணருக்கு ஒரே குஷி.
குதியோ குதியென்று குதித்தார்.
உடனே மதுவை வரச்சொல்
மதுவை வரச்சொல்
மதுர்பாபுவுக்கு செய்தி அனுப்பப்பட்டு அவர் உடனே கிளம்பி வந்தார்.
பாத்தியா, பாத்தியா, காளியால்கூட விதியை மாத்த முடியாதுன்னு சொன்னியே..
இதோ பார், இது சிவப்பு செம்பருத்திச் செடி. எப்படிப் பூத்திருக்கு பார்.
அந்த சிவப்பு செம்பருத்திச்செடி பலவிதமான வண்ணங்களில் கிளைக்கொரு பூவாகப் பூத்துக் குலுங்கியிருந்தது.
நேத்து அம்மாகிட்ட வேண்டினேன், அம்மா எப்படி இதன் விதியை மாத்தியிருக்கா பார். சிவப்புப்பூ பூப்பதுதான் இந்தச்செடியின் விதி. ஆனா, எத்தனை வண்ணப்பூக்கள் பாத்தியா?
மதுர்பாபுவைக் கட்டிக்கொண்டு குதித்தார்.
உன் மனைவியின் நோயும் சரியாயிடும். உனக்கொரு கஷ்டம்னா விட்டுடுவேனா. அம்மாகிட்ட சொல்றேன். உன் மனைவி பிழைச்சுடுவா. சந்தோஷமா போ
என்றது அந்த ஞானக்குழந்தை.
அவர் சொன்னபடி வெகு சீக்கிரத்திலேயே மதுர்பாபுவின் மனைவிக்கு உடல்நிலை சரியாகிவிட்டது.
சீடனின் நிம்மதியான வாழ்க்கைமீது குருவிற்குத்தான் எவ்வளவு அக்கறை? இப்படியெல்லாம் நிரூபிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? குருவின் கருணை உள்ளம் எந்த அளவிற்கு இறங்கி வந்து அருள் செய்யும் என்று யாராலும் அனுமானிக்கமுடியாது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment