குருவருள் ஒன்றே கதி - 24
குருவின் பொறுமை
தற்போது பைடன் என்றழைக்கப்படும் ப்ரதிஷ்டானபுரத்தில் ஒருவன் வசித்து வந்தான். வேலை வெட்டி ஒன்றும் பார்ப்பதில்லை. மிகவும் சோம்பேறி. எப்போதும் கோதாவரி நதிக்கரையிலிருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்து நண்பர்களுடன் சூதாடிக்கொண்டிருப்பான். இப்படி இருந்தபோதிலும், அவனிடம் ஒரு பழக்கம் இருந்தது. அவ்வூரில் வசித்து வந்த மஹாத்மாவான ஸந்த் ஏகநாதரை தினமும் ஒருமுறையாவது தரிசித்துவிடுவான்.
ஒருநாள் அவன் சூதாட்டத்திற்கு மிகவும் தாமதமாக வந்தான். அவனது நண்பர்கள்,
ஏனடா, இவ்ளோ நேரமா? அப்படி என்ன வேலை? சீக்கிரம் வந்தாத்தானே ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்.
இல்லடா, கொஞ்ச நேரமாயிடுச்சு. அதான் வந்துட்டேன்ல. ஆட்டாம் ஆரம்பிக்கலாம்.
இருடா, அப்படி என்ன வேலை உனக்கு? ஏன் இவ்ளோ நேரம்? சொல்லு. நாங்களும் தெரிஞ்சுக்கறோம். சொன்னாத்தான் மேல இன்னிக்கு ஆட்டம்.
அதுவா..
சற்று தயங்கினான்.
சொல்லுடா..
இந்த ஊர்ல ஏகநாதர்னு ஒரு மஹாத்மா இருக்காரே. தினமும் அவரைப் பாத்து வணங்கிட்டுத்தான் வருவேன். இன்னிக்கு அவர் வெளில வர தாமதமாயிடுச்சு. இருந்து பாத்துட்டு வந்தேனா. அதான்.
நீ ஏன்டா அவரைப் பாக்கணும்?
அவரைப் பாத்துட்டா, மனசில் ஒரு அமைதி வந்துடும்டா. அதான், எப்படியாச்சும் தினமும் ஒரு தடவையாச்சும் பாத்துட்டு வருவேன்.
அப்படி என்னடா அவர் கிட்ட விசேஷம்?
அவருக்கும் நம்மள மாதிரி ரெண்டு கை, ரெண்டு கால், ஒரு தல அப்படித்தானேடா...
சிரித்தான் மற்றொருவன்.
அதெல்லாம் தெரியாதுடா. அவரைப் பாத்தா ஒரு நிம்மதி. அவ்ளோதான்.
பார்ரா.. என்ன கதை சொல்றான் பார். அப்படி அவர்கிட்ட என்ன விசேஷம். ஏதாச்சும் ஒன்னு சொல்லு பாக்கலாம்.
மிகவும் தயங்கிவிட்டுச் சொன்னான். இவர்கள் அவரைக் கேலி பேசுவதை அவன் விரும்பவில்லை. இருந்தாலும் பேச்சு வந்துவிட்டது. விடமாட்டார்கள்.
அவருக்குக் கோபமே வராதுடா..
என்ன.. கோவமே வராதா?
அது ஒரு விஷயமாடா...
ஆமாண்டா. கோவம் வராம இருக்கறது பெரிய விஷயம்தான்.
அதற்குள் இன்னொருவன்,
கோவம் வராம ஒருத்தர் எப்படி இருக்கமுடியும்?
தெரியாது. ஆனா, அவருக்குக் கோபமே வராது.
அழுத்திச் சொன்னான்.
கோபம் வராட்டா அவரென்ன மனுஷர்தானாடா..
சரிடா, இன்னிக்கு அதையும் பாத்துடுவோம். அவருக்குக் கோவம் வருதா இல்லையான்னு
டேய் வேணாம்டா அவர் பெரிய மஹாத்மா. ஏதாச்சும் தப்பாயிடும்.
நீதான சொன்ன, கோவம் வராதுன்னு. நான் நம்பணும்னா ஏதாச்சும் செய்து பாத்தாதானே..
என்னடா செய்யப்போற?
சொன்னவன் சற்று யோசித்தான்.
அவர் இப்ப எங்கடா இருக்காரு?
அவர் இப்ப நதிக்கு குளிக்க வருவார்டா. வர நேரம்தான்.
அப்ப சரி.
வெற்றிலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த மண்டபத்தின் மேல் ஏறினான்.
டேய். வேணாம்டா. என்ன செய்யப்போற?
பேசாம, ஒளிஞ்சிருந்து வேடிக்கையை மட்டும் பாருங்கடா.
சற்று நேரத்தில் ஸந்த் ஏகநாதர் கோதாவரிக்கு ஸ்நானத்திற்கு வந்தார். அமைதியே உருவான அழகான மலர்ந்த முகம். கோபி சந்தனம் துலங்கும் நுதல். பளிச்சென்று ஒரு தேஜஸ். பார்த்தவரை உடனே விழுந்து வணங்கச் செய்யும் கம்பீரமான தோற்றம். நாமம் சொல்லிக்கொண்டே நடந்து வந்தார்.
நதிக்குச் சென்று, பொறுமையாக பிரார்த்தனைகளைச் செய்துவிட்டு நீராடினார். பின்னர் அனுஷ்டானங்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டு திரும்பினார். இப்போது அவரது ப்ரகாசம் இன்னும் அதிகமாகியிருந்ததைப் போல் இருந்தது. மண்டபத்தின் அருகே வந்ததும்,
ப்ளச்...
மேலிருந்து மென்ற வெற்றிலை பாக்கை யாரோ அவர் மீது துப்பினார்கள். அது அவரது தோளின் மீது விழ, உடனே திரும்பி நதிக்கு நடந்தார். மறுபடி, ப்ரார்த்தனை, ஸ்நானம் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வரும்போது, மீண்டும் வெற்றிலை பாக்கை மென்று யாரோ மேலிருந்து துப்பினார்கள்.
மறுபடி நதிக்குப் போனார். ப்ரார்த்தனை செய்து, ஸ்நானம் செய்தார். மறுபடி எச்சில் அவர் மேல் விழுந்தது. இவ்வாறு அவர் ஸ்நானம் செய்துவிட்டு வருவதும், எச்சிலைத் துப்புவதும் தொடர்ந்தது. எவ்வளவு முறை நடந்ததோ தெரியாது.
ஒரு கட்டத்தில், வெற்றிலை போட்டுத் துப்பிய துஷ்டனின் வாய் வெந்துபோயிற்று. அவனால், அதற்குமேல் வெற்றிலையை மெல்ல முடியவில்லை. ஆனால், ஏகநாதரோ எத்தனை முறை ஸ்நானம் செய்தபோதும் அசராமல் மீண்டும் சென்றார். ஒருமுறை கூட, அவரது முகத்தில் சிறு கோணலோ, சிறிய எரிச்சலோ இல்லை. யார் இப்படிச் செய்வது என்று நிமிர்ந்து பார்க்கக்கூட இல்லை.
வாய் முழுதும் வெந்துபோய் இறங்கி வந்தான் துப்பியவன்.
ஸ்நானம் செய்துவிட்டு வந்து கொண்டிருந்தவரின் கால்களில் விழுந்தான்.
சாமீ, என்னை மன்னிச்சிடுங்க.
சட்டென்று நின்றார் ஏகநாதர்.
எதுக்குப்பா..
நான்தான் உங்கமேல் இத்தனை வாட்டி எச்சில் துப்பினேன்.
அப்படியா? சரி. மன்னிப்பெல்லாம் எதுக்கு? நீ ஒரு பாவமும் செய்யலையே.
என்ன சாமீ சொல்றீங்க. வெத்தலையைத் துப்பி துப்பி நான் தான் அலுத்துப் போனேன். இத்தனை வாட்டி குளிச்சிருக்கீங்க. உங்களுக்கு என்மேல கோவம் வரலையா?
உண்மையில் நீ பெரிய புண்ணியம் செய்திருக்க. உன்னால்தான் இன்னிக்கு எனக்கு இத்தனை தரம் கோதாவரி ஸ்நானம் கிடைச்சது.
அதோட, வெத்தலையை ஒருத்தர் மேல தெரிஞ்சே துப்பறது கெட்ட குணம்னு வெச்சுப்போம். ஒரு கெட்ட குணத்தில் நீ இவ்வளவு பிடிவாதமா இருக்கும்போது,
கோபப்படக்கூடாதுங்கறது நல்ல குணம். நான் அதில் அதில் பிடிவாதமா இருக்கக்கூடாதா..
நீ துப்பினதால் உடம்பு அழுக்காச்சு. அது குளிச்சா போயிடப்போறது. அது அஞ்சு நிமிஷத்தில் சுத்தமாயிடும். கோபத்தால் மனம் அழுக்காயிடுமே. அதை என்ன செய்து சுத்தம் செய்யறது. அதனால், கோபப்படறதை விட, ஸ்நானம் செய்வது சுலபம்.
ஓ வென்று அழுதுகொண்டு அவரது சரணங்களைப் பிடித்துக்கொண்டு மன்னிப்பு வேண்டினான் அவன். அவனோடு சேர்ந்து அவனது நண்பர்களின் மனத்திலும் பெரிய மாற்றம் நிகழந்தது. அன்றுமுதல் அவர்கள் அனைவரும் சூதாட்டத்தை விட்டுவிட்டு, ஏகநாதரது சீடர்களார்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment