குருவருள் ஒன்றே கதி - 23

குருவின் ஸாந்நித்யம் - 5

மரவுரி, ஜடாமுடி, உச்சியில் கொண்டை, நீண்ட தாடி, சீதையைத் தேடி அலைந்துகொண்டு வரும் கோலம். ஆனால், இந்த ஒரு திருக்கோலத்திலும் எத்தனை அழகு?  ராமலக்ஷ்மணர்களைக் கண்டு முனிவரும் மயங்குகின்றனர்.

லக்ஷ்மணன் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துக் கேட்டான்

தம்பீ, இங்க சபரியோட வீடு எங்க இருக்கு?

அவர்களுள் ஒருவன் சபரிக்கு விஷயம் சொல்ல ஓடினான்.

சபரி பாட்டியா, அவங்க உங்களுக்காகத்தான் ரொம்ப நாளா காத்துக்கிடிருக்காங்க. நீங்க வாங்க, நான் கூட்டிட்டுப் போறேன்.

 என்று சொல்லி முன்னே நடந்தான். 

சிறுவன் ஓடிவந்து சொன்னதும், சபரியை ஒருவிதப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எழுந்து நின்றாள். 
தூரத்தில் தபஸ்விகள் போன்ற இருவர், கைகளில் வில்லேந்தி கம்பீரநடையோடு வந்து கொண்டிருந்தனர். 

பார்த்தவுடன் குருவருளால் புரிந்துகொண்டாள். குரு தனக்கு உபதேசித்த மந்திரத்தின் பொருள்தான் வருகிறதென்று. மந்திரத்தின் பொருள் வேறென்ன? இறைவனேதான் என்று உள்ளுணர்வால் வழிகாட்டினார் குருதேவர்.

இதோ இவங்கதான் சபரிபாட்டி

கையைக் காட்டிச் சொல்லிவிட்டு ஓடிவிட்டான் சிறுவன். 

ராமன் அவளை நோக்கினான். ஒட்டி உலர்ந்த முதிய உருவம்தான். ஆனால், எவ்வளவு தேஜஸ். 

ராமனைத் தன் வீட்டுத் திண்ணையில் அமரச் செய்தாள் சபரி. லக்ஷ்மணன் மரியாதை காரணமாக நின்றுகொண்டிருந்தான்.

ராமா, நீங்க வருவீங்கன்னு குரு சொல்லியிருக்கார். நீங்க தெய்வம் னு எனக்குத் தெரியும். உங்களைப் பார்க்கிற வரை நான் இங்கிருக்கணும்னு சொன்னார்.
உங்களுக்கேதாவது கொடுக்கணுமே..
பழம் சாப்பிடறீங்களா?

கொடுங்க பாட்டீ. நீங்க அன்போட எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். ஆனா, நான் தெய்வமெல்லாம் இல்ல பாட்டி. மதங்க மஹரிஷி ஞான த்ருஷ்டியால் நான் வருவேன்னு சொல்லியிருப்பார்.

பழத்தைக்‌ கையில் கொடுக்கப்போனவளுக்கு‌ அது புளிக்குமோ என்று சந்தேகம்‌ வந்துவிட்டது. ஒவ்வொரு பழத்தையும்  கொஞ்சம்‌ கடித்துப்‌பார்த்து, இனிக்கும் பழங்களை மட்டும் ராமன் கையில் கொடுத்துக் கொண்டே பேசினாள். 

ராமா, நீங்ககூட பொய் சொல்லலாம்‌. ஆனா, என் குரு பொய் சொல்லமாட்டார். மந்திரத்தின் பொருளான நீங்க என்னைத் தேடி வருவீங்கன்னு சொன்னார். மந்திரத்தின் பொருள் தெய்வம்தானே..

ராமன் சிரித்தான். உங்க ஜபமெல்லாம் எப்படி இருக்கு பாட்டீ..

ஜபமா? அதன் பலன்தான் உங்களைப்‌ பாத்துட்டேனே..
என்றாள்.

ராமனுக்கு அவளைப் பேசி ஜெயிக்கமுடியாதென்று தோன்றியது. ஆனால், சபரியைப் பேசவிட்டால், தன் அவதார ரகசியத்தைப் போட்டு உடைத்துவிடுவாளோ என்று நினைத்தான். 

உடனே பேச்சை மாற்றினான். 

மதங்க மஹரிஷி ஆசிரமம் எங்க இருக்கு பாட்டி?

அதோ அங்க.. என்று கை காட்டியவள், 

வாங்க போய்ப் பார்க்கலாம் என்று கிளம்பிவிட்டாள்.

ஆசிரம வாசலை அடைந்ததும் ஆரம்பித்தாள்.

ராமா, இங்க ஆயிரக்கணக்கான சீடர்கள் அவரிடம் படிச்சிட்டிருந்தாங்க. இதோ இந்த திண்ணையில்தான் தினமும் உக்காந்து தியானம் செய்வார். இதோ, இது அவரது அனுஷ்டானத்துக்கான ஹோமகுண்டம். 

இதில் அக்னி எரியுதே பாட்டீ.. நீங்க தான் இதைப் பாத்துக்கறீங்களா?

இல்ல ராமா, இந்த ஹோம குண்டத்தில் எந்த இந்தணமும் போடாமயே அக்னி எரியும். இதோ, இங்க பார், இந்த துணியெல்லாம் ஈரமாவே இருக்கு பாருங்க. இதுவும் குருதேவர் உலர்த்திட்டுப் போனதுதான். இன்னும் காயாம இருக்கு. 

ராமன் விழிவிரிய சபரியைப் பார்த்தான்.

 இதெல்லாம் அவர் இங்க ஸாந்நித்யத்தோட இருக்கறதுக்கான அடையாளம்.

லகக்ஷ்மணனுக்கு சபரியைப் பார்த்து ஆச்சரியம் தாங்கவில்லை. காடோ, நாடோ, ராமனைக்  கண்டவர் அனைவரும் தோள் கண்டார் தோளே கண்டார் என்று ராமனின் அழகில் மயங்கிக் கிடக்க, இங்கு ஒருத்தி, அதுவும், ராமனே அவளைத் தேடி வந்த போதும், அவர் அழகைப் பொருட்படுத்தாமல், தன் குருவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாளே. இவரும் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டுக்கொண்டிருக்கிறாரே. பழத்தை எச்சில் படுத்திக் கடித்துவிட்டுக் கொடுக்கிறாள். இவரும் வாங்கி வாங்கி உண்கிறாரே.. மன்னி காணாமல் போனதற்குப் பிறகு இப்போதுதான் இப்போதுதான் சிறிது சாப்பிடுகிறார். எச்சிலோ என்னமோ, அவர் சிறிது உண்டால் சரிதான்.  அண்ணனையே தன் பேச்சினால் மயக்கிவிடுவாள் போலிருக்கிறதே என்று பலவாறாக  வியந்தான் இலக்குவன்.

பாட்டீ, சுக்ரீவனைப் பத்தி ஏதாவது தெரியுமா?

சுக்ரீவனைப் பற்றித் தான் கேள்விப்பட்டவற்றையெல்லாம்‌ சொன்னாள்‌ சபரி.

 பின்னர், ராமா, உங்களைப் பார்க்கும் வரை இங்கயே இருக்கும்படியும், அதுக்கப்றம் என்கிட்ட வந்துடலாம்னு குரு சொல்லிருக்கார். நான் உங்களைப் பாத்தாச்சு. 
அதனால், நான் இப்ப என் சரீரத்தை விட்டுட்டு குருதேவர்கிட்ட போகப்போறேன். நீங்க இப்படி உக்காருங்க. என்றவள். 

மதங்க மஹரிஷியைப் போலவே, பத்மாஸனமிட்டு அமர்ந்து, ராமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, யோகத்தினால் தன் சரீரத்தை விட்டாள். யோகாக்னியால் அவளது சரீரம் பஸ்மமாயிற்று.

சபரியின் மோக்ஷத்திற்கு ராமன் சாட்சியாக விளங்கினான்.

ராமனே கண்டு அதிசயிக்கும் அளவுக்கு குருவின் மீது பக்தி பூண்டு விளங்கினாள் சபரி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37