குருவருள் ஒன்றே கதி - 22
குருவின் ஸாந்நித்யம் - 4
சபரிக்கு தாரக நாமத்தை, உபதேசித்துவிட்டு யோகத்தினால் தன் சரீரத்தை விட்டார் மதங்க மஹரிஷி. அவரது யோகாக்னியால் அவரது சரீரமும் பஸ்மமாகிற்று.
ஆனால், அவர் சொன்னபடி, அவரது ஆசிரமத்தில் இருந்த யோககுண்டத்தில் அக்னி சோபையுடன் விளங்கியது.
சிஷ்யர்கள் அனைவரும் ஆசிரமத்தை விட்டு நீங்கினர்.
சபரி தினமும் ஆசிரமத்தையும் நதிக்குச் செல்லும் பாதையையும் சுத்தம் செய்வாள். பின்னர், மந்திரத்தின் பொருளின் வருகையை நோக்கிக் காத்திருப்பாள். ஒருவேளை இன்று வந்துவிட்டால், வாசல் தெளித்து, சிறிய கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, விளக்கேற்றி வைத்து, வருபவர்க்குக் கொடுப்பதற்காக பழங்களையும் பறித்து வைத்துக்கொண்டு வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து குருதேவர் சொன்ன மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பாள்.
இரவானதும், காட்டில் இனி யாரும் வரமாட்டர்களோ என்று நினைத்து உள்ளே செல்வாள்.
இப்படியாக சபரி காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தாள்.
எவ்வளவு நாட்களுக்கு?
இன்னும் ராமன் பிறக்கவே இல்லை. தசரதனது ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது.
இனி அஸ்வமேத யாகம்செய்து, புத்ர காமெஷ்டி செய்து, ராமனை கௌசல்யை கருவுற்று, ராமன் பிறந்து வளர்ந்து, கானகம் சென்று பதினான்காவது வருடத்தில் தான் ராவணன் சீதையை தூக்கிச் செல்லப்போகிறான். அப்போது கபந்தன் என்ற அசுர வடிவிலிருந்த கந்தர்வன் ராமனுக்கு, சபரியிடம் சென்று சுக்ரீவனைப் பற்றி விசாரித்து அவனோடு நட்பு கொள்ளும்படி அறிவுறுத்துவதன் காரணமாக ராமன் சபரியைத் தேடி வரவேண்டும்.
அதற்குள் சபரி வசித்திருந்த காட்டில் இன்னும் சில குடியிருப்புகள் வந்துவிட்டன.
வாசலில் விளையாடும் குழந்தைகளைப் பார்த்தால் சபரி கேட்கும் ஒரே கேள்வி..
யாராவது என்னைத் தேடி வராங்களான்னு பாத்து சொல்லு தம்பி..
பாட்டீ, உனக்கு இதே வேலை. எங்கப்பா சின்ன வயசா இருக்கும்போது அவர்கிட்டயும் இப்படித்தான் கேப்பியாம்.
உன்னைத் தேடி யார் வருவாங்க பாட்டி..
பைத்தியம்தான் பிடிச்சிருக்கு உனக்கு..
இத்தனை கேலிப் பேச்சுகளைத்தாண்டி, அவளது குரு சொன்ன வார்த்தைகள் அவளது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன.
இந்த மந்திரத்தின் பொருள்
சபரி வீடு எங்க?
சபரி வீடு எங்கன்னு கேட்டுக்கிட்டு உன் வீடு தேடி வரும்.
எத்தனை வருடங்களானாலும், குரு சொல்வது நிச்சயம் நடக்கும் என்று காத்திருக்கிறாள் சபரி..
வருடங்கள் உருண்டோடின.
ஒருநாள் குழந்தைகள் ஓடிவந்தன.
பாட்டீ
பாட்டீ,
நீங்க கேட்டுட்டே இருப்பீங்களே.. உங்களைத் தேடி யாராச்சும் வராங்களான்னு, நிஜமாவே ரெண்டு பேர் வந்துட்டிருக்காங்க பாட்டி.
சபரி வீடு எங்க ன்னு விசாரிச்சிட்டு வராங்க.. ரெண்டு பேரும் கைல ஆளுக்கொரு வில்லு வெச்சிருக்காங்க பாட்டி. ரொம்ப அழகா இருக்காங்க..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment