குருவருள் ஒன்றே கதி - 21
குருவின் ஸாந்நித்யம் - 3
சபரியை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார் மதங்க மஹரிஷி.
குரு தன்னைவிட்டுக் கிளம்பப் போகிறார். இனி அவரைப் பார்க்க இயலாது என்ற விஷயத்தை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. ப்ரமை பிடித்தவள் போல் குடிசையின் வாயிலில் உள்ள மண் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள்.
பாட்டீ..
..
பாட்டீ...
..
சட்டென்று உணர்வு வந்தவளாக எழுந்தாள்.
குருவின் மீதுள்ள மரியாதையை அவரது சீடனின் மீதும் செலுத்தப் பழகியிருந்தாள்.
பாட்டீ.. என்ன அப்படியே உக்காந்திருக்கீங்க.. குருநாதர் உங்களைக் கூப்பிடறார். வேகமா வாங்க.
ஒன்றும் பேசாமல் வேகமாய் சீடனின் பின்னால் ஓடினாள்.
வா சபரி. நான் இந்த உலகத்தை விட்டு வைகுண்டம் கிளம்பப்போறேன். எல்லா சீடர்களுக்கும் வேண்டியதைக் கொடுத்துட்டேன். உனக்கும் ஏதாவது வேணும்னா தயங்காம கேளு.
சாமீ.. நீங்க போகப்போறீங்களா? திரும்பி எப்ப வருவீங்க?
சிரித்தார் ரிஷி.
திரும்பியெல்லாம் வரமுடியாது சபரி. சொல்லு உனக்கு என்ன வேணும்?
சாமீ.. உங்களைப் பாக்காம நான் எப்படி இருப்பேன்? சின்ன வயசிலேர்ந்து இவ்ளோ நாள் வரை மிருகங்களைக் கொன்னு வயிறு வளத்திட்டிருந்தேன். இப்பத்தான் கொஞ்ச நாளா உங்க நிழல்ல நிம்மதியா இருக்கேன். அதுக்குள்ள போறேன்னு சொல்றீங்களே..பிறவிக் குருடனுக்கு கண்ணைக் கொடுத்துட்டு கொஞ்ச நேரத்தில் பறிச்சுக்கிட்டாப்ல, இதென்ன கஷ்டம்?
என்னையும் கூட்டிட்டுப் போங்க
அழுதாள் சபரி.
அவளது கள்ளமற்ற அன்பை நினைத்து மிக்க மகிழ்வுற்றார் மதங்க மஹரிஷி. இவ்வளவு நாள்களாக என்னோடு இருந்த ஒரு சிஷ்யனுக்கும் இப்படிப்பட்ட அன்பும், குருவின்மீது பக்தியும் வரவில்லையே. இவள் ஒருத்திக்காவது வந்ததே என்று சந்தோஷப்பட்டார்.
குருவை சந்தோஷப்படுத்திவிட்டால் மட்டும் போதும். வேறெதுவுமே ஒரு ஜீவன் செய்யத் தேவையில்லை.
சபரி, உன்னை அப்றம் கூப்பிட்டுக்கறேன். இப்ப உனக்கு ஏதாவது வேணுமா? காசு, பணம், நல்ல வீடு, உடைகள், ஏதாவது ஸித்திகள், நீர் மேல் நடக்கறது, காத்தை நிறுத்தறது அந்த மாதிரி..
குருவின் அன்பு அவள்மீது விழுந்ததுமே அவளுக்கு ஞானம் வந்து விட்டது போலும்.
சாமீ, நானோ காட்டில் வாழற கிழவி. வீடு, காசு, பணமெல்லாம் எனக்கெதுக்கு? ஒரு விஷயம் வேணும் வேணாமான்னு கூட எனக்குத் தெரியாது. உங்க நிழலுக்கு நானா வரலியே. உங்க அன்புதானே என்னை இங்க பிடிச்சு இழுத்துட்டு வந்தது. எனக்கு எது நல்லது கெட்டதுன்னு சாமிக்குத்தான் தெரியும்.. எதுவனாலும் நீங்க இல்லாம என்னால இருக்கமுடியாது சாமி..
கேட்டுவிட்டால் கேட்டது மட்டுமே கிடைக்கும். அவர்களாகக் கொடுப்பது என்றால் குருவிற்கோ பகவானுக்கோ கொஞ்சமாகக் கொடுக்கத் தெரியாது.
குசேலருக்கு வாரி வழங்கினான்.
பலிக்கு பாதாள ஸாம்ராஜ்ஜியத்தையே கொடுத்தான்.
கஜேந்த்ரனோ வலியிலிருந்து விடுவிக்கக்கோர, பகவான் ஸம்சார வலியே இல்லாமல் செய்தான்.
த்ரௌபதிக்குக் கொஞ்சமாகவா கொடுத்தான்..
மிகவும் மகிழ்ந்துபோனார் குரு.
சரி, உன் வலது காதைக் காட்டு..
வலது காதா..அப்டின்னா..
இடது வலதுகூடத் தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவளை விட வேறு யார் குருவின் அன்பிற்குத் தகுதியானவர்?
கோபிகளும் இட வலம் அறியாதவர்களே. ஆனால், பகவானையே மயக்கும் பக்தி கொண்டவர்கள்.
இவ்வளவு நாள்களாக தான் தேக்கி வைத்திருந்த தபஸ், அதன் மூல மந்திரம் அனைத்தையும் அவளுக்கு அனுக்ரஹம் செய்தார்.
எது வலது என்று சுட்டி, காதில் தாரக நாமமான ராம நாமத்தை உபதேசம் செய்தார்.
இதை விடாமசொல்லிட்டே இரு சபரி.
சாமி, இதென்ன? மந்திரமா? எனக்கு இதைச் சொல்லத் தகுதியிருக்கா?
நான் உபதேசம் செய்ததாலயே உனக்குத் தகுதி வந்துடுச்சு சபரி.
இதுக்கென்ன அர்த்தம்?
சற்றே யோசித்தார் ரிஷி..
இதோட அர்த்தம்
சபரி வீடு எங்க?
சபரி வீடு எங்க? னு கேட்டுண்டு உன்னைத்தேடி வரும்.. அது வரைக்கும் இதை சொல்லிட்டே இரு.
சாமீ, நான் சொல்வேன் சாமீ, ஆனா நீங்க இல்லாத இடத்தில் நான் எப்படி இருப்பேன்?
நெகிழ்ந்துபோனார் குரு.
சரி, உனக்காக ஒன்னு செய்யறேன். என் ஈர வஸ்திரத்தை இங்க உலர்த்திட்டுப் போறேன். எவ்வளவு வெயிலடிச்சாலும், காத்தடிச்சாலும் இது காயாது. இந்த ஹோமகுண்டத்திலும் எந்த இந்தணமும் போடாமயே அக்னி எரிஞ்சுண்டே இருக்கும். அது நான் இங்கயே இருப்பதற்கு அடையாளம். நீ இங்க இருக்கற வரை என் ஸாந்நித்யமும் இங்க இருக்கும்.
அழுதுகொண்டே விழுந்து விழுந்து வணங்கினாள் சபரி.
மதங்க மஹரிஷி மிகுந்த நிறைவோடு பத்மாஸனமிட்டு யோகத்தினால் சரீரத்தை விட்டார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment