குருவருள் ஒன்றே கதி - 20

குருவின் ஸாந்நித்யம் - 2

மிகுந்த மகிழ்சியோடு தனக்குக் கிடைத்த கைங்கர்யத்தை ச்ரத்தையாகச் செய்து வந்தாள் சபரி. 

குரு நம்மோடு பேசவேண்டும், நம்மைத் தனியாக கடாக்ஷிக்கவேண்டும், நாம்‌ செய்யும்‌ கைங்கர்யத்தை அவர்  கவனிக்கவேண்டும்,  என்றெல்லாம் கூட அவசியம் இல்லை. 

குருவின் ஸந்நிதியில் சும்மா இருப்பதுகூட சாதனைதான்.

 கைங்கர்யம் கிடைத்துவிட்டால் அது இன்னும் சிறப்பு. (போனஸ்) அதை ச்ரத்தையாக விடாமல் செய்துவருவதாலேயே ஒருவருக்கு கைவல்யம் கிடைத்துவிடுகிறது. 
எப்படியாவது, எதையாவது சிறியதோ, பெரியதோ நாம் செய்யும் ஒரு விஷயம் குருவை மகிழ்வித்துவிட்டால் போதும். அதன் பிறகு, அந்த ஜீவன் எதைப் பற்றியும் கவலையின்றி நிம்மதியோடு தன் வாழ்வைக் கழித்துவிடலாம்.

குருவின் ஸந்நிதியின் உயர்வைப் பற்றி எவ்வளவு சொன்னாலும்‌ அது குறைவானதே. 

சபரி தினந்தோறும் மதங்க மஹரிஷி சென்று வரும் பாதையைச் சுத்தம் செய்து வந்தாள்.

சில காலம்  ஓடியது. ஒரு நாள் ஆசிரமத்தில் ஒரே பரபரப்பு. எல்லோரும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
இந்த திடீர்ப் பரபரப்பு சபரிக்கு விசித்ரமாக இருந்தது. மெதுவாக ஆசிரம வாசலுக்குச் சென்று, அங்கு ஓடிக் கொண்டிருந்த ஒரு சீடனைக் கேட்டாள். 

ஏதாவது விசேஷமா சாமி?
என்ன எல்லாரும் ஓடிட்டே இருக்கீங்க?

உனக்குத் தெரியாதா பாட்டீ?

நம்ம குருநாதர் இன்னிக்கு வைகுண்டம் போகப்போறார்.

அப்டின்னா?

வைகுண்டம்னா தெரியாதா? மோக்ஷத்துக்குப் போறார்.

இங்கேயிருந்து போறாரா? எப்ப திரும்பி வருவார்?

பாட்டீ,, பாட்டீ,,
திரும்பியெல்லாம் வரமாட்டார். ஒரேயடியா கிளம்பறார்.

என்னப்பா சொல்றீங்க?

ஆமா பாட்டி, அதான் எங்க எல்லாரையும் கூப்பிட்டு  யார் யாருக்கு என்னென்ன வேணுமோ அனுக்ரஹம் பண்றார். உனக்கேதாவது வேணும்னா வாங்கிக்கோ. சீக்கிரம் போ..

அதிர்ந்துபோனாள் சபரி.
என்ன? குருநாதர் கிளம்புகிறாரா? வரவே மாட்டாரா? அவரால்தானே இங்க எல்லாரும் நிம்மதியா இருக்கோம். எவ்ளோ அழகான திரு உருவம்? இனி பார்க்க முடியாதா?
நாம என்ன செய்யறது?

துக்கம் தொண்டையை அடைத்தது.
தாளமுடியவில்லை. அழுகொண்டே குடிசைக்கு வந்துவிட்டாள்.

மதங்க மஹரிஷி ஒவ்வொரு சீடனையும் தனித்தனியாக அழைத்து 

என்ன வேண்டுமோ கேள்

 என,
ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்டனர்.

எந்த சபையிலும் தானே வெல்ல வேண்டும்  எதிர்ப் பேச்சு பேச எவரும் இருக்கக்கூடாது.

ஆகட்டும் போ.

குபேரனைப் போன்ற செல்வம் வேண்டும்

கிடைக்கும் போ

எனக்கு ராஜ சபையில் பெரிய பதவி வேண்டும்

கிடைக்கும் போய் வா.

எனக்கு நீரின் மேல்‌நடக்கும் ஸித்தி வேண்டும்

நடப்பாய்..

இப்படியாக ஒவ்வொரு சீடனும் ஒவ்வொன்றைக் கேட்க, கேட்பவர்க்குக் கேட்டதை வாரி வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அவரது மனம் வாடியிருந்தது.

இத்தனை வருடங்களாக ஒவ்வொரு‌ சீடனையும் பார்த்து பார்த்து எவ்வளவு அக்கறையோடு உபதேசங்கள் செய்தும், ஒருவனுக்குக் கூட பக்தி வேண்டும் என்றோ, கைவல்யம் வேண்டும் என்றோ பகவானைப் பார்க்க வேண்டும் என்றோ ஆசை வரவில்லையே. சீச்சீ, இப்படி ஆகிவிட்டதே..

உண்மையாக உலகப் பொருள்மீது பற்றற்ற ஒரு சீடன்‌கூட இல்லையா?

யோகத்தின் மூலமாக தன் உடலை நீத்துக் கிளம்புவதற்குத் தயாரானார்.
சட்டென்று சபரியின் நினைவு வந்தது.

அவள் இவ்வளவு நாள்களாக, கைங்கர்யம் செய்திருக்கிறாளே. அவளுக்கும் ஏதாவது கொடுத்து விட்டுப் போகலாம். யாருக்கும் கடனாளி ஆகிவிடக்கூடாது என்று நினைத்தவர், ஒரு சீடனைக் கூப்பிட்டு

சபரி பாட்டியைக் கூட்டிக்கொண்டு வா. 
என்று ஆணையிட்டார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37