குருவருள் ஒன்றே கதி - 2

அழுகிய வாழைப்பழம்

ஸந்த் துகாராம்‌ மஹராஜ் தினமும் கீர்த்தனம்‌ செய்வார். அவரது கீர்த்தனத்தைக் கேட்க ஏராளமானோர் கூடுவர். எளிமையான மொழியில் அவர் விட்டலனைப் பாடுவார். ஏராளமானோர் வாங்கிப் பாடுவதோடு, நாள் முழுதும் வேலை செய்யும்போதும் அவரது அபங்கங்கள் அவர்களது நாவை விட்டகலாது. ஒரு மஹாத்மாவின் முன்னிலையில் மனம் அடங்குவதால் அவர் முன்னால் சென்றதுமே மனதில் சாந்தி ஏற்படும். 

ஒரு தனவந்தர் துகாராம் மஹராஜைப் பற்றிக் கேள்விப்பட்டு ஏதோ ஒரு ப்ரச்சனையிலிருந்து விடுபடுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றார். இவர் சென்ற சமயம், துகாராம் மிகவும் உருக்கமாக நாம ஸங்கீர்த்தனம்‌ செய்து கொண்டிருந்தார். செல்வந்தர் போன காரியத்தை மறந்து, தன்னையும்‌ மறந்து துகாராம் மஹராஜின் மதுரமான குரலிலும், கீர்த்தனத்திலும்‌ ஈடுபட்டார். ஸத்சங்கம் முடிந்து அனைவரும் சென்றதும், இந்த செல்வந்தர் துகாராமின் அருகில் சென்று வணங்கினார். இவ்வளவு அற்புதமான ஒரு மஹானை தரிசிப்பது அரிது. இவரிடம் உலக வாழ்க்கையைப் பற்றிக் கேட்பது பிழை என்று எண்ணினார். எனவே, எனக்கு ஞானம் வேண்டும். அனுக்ரஹம் செய்யுங்கள் என்று கேட்டார். 

அவர் கேட்ட விதத்தைப் பார்த்து துகாராமால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவருக்கு அனுக்ரஹம் செய்ய எண்ணி அங்குமிங்கும் பார்த்தார். பக்கத்தில்‌ கருப்பாக அழுகிய ஒரு வாழைப்பழம் இருந்தது.
அதை எடுத்து அவரிடம் கொடுத்துத் தலையசைத்தார்.

செல்வந்தருக்கு சப்பென்றாகிவிட்டது. ஞானத்தைக் கேட்டால், ஏதாவது மந்திரோபதேசம் செய்வார் என்று பார்த்தால், அழுகிய வாழைப்பழத்தைக் கொடுத்து விட்டாரே என்று கோபம்‌ கோபமாய் வந்தது. நமது கௌரவத்தை விட்டுக்‌கேட்டால் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார். என்றாலும் அதை வாங்கிக்கொண்டு வெளியில் வந்துவிட்டார். 
அதைப் பார்க்க பார்க்க தன்னை அவமானப்படுத்திவிட்டதாய் எண்ணி கோபம்‌அதிகமாயிற்று. 
வாசலில் வந்ததும் தூக்கி ப் போட்டுவிடலாம் என்று நினைத்தார். அப்போது அங்கு ஒருவர் சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அவரிடம் அந்த அழுகிய வாழைப்பழத்தைக் கொடுத்து விட்டார்.

சாக்கடை தள்ளுபவருக்கோ நல்ல பசி. வினயத்தோடு அதை வாங்கிக்கொண்டு உடனே உண்டும் விட்டார். 
அவ்வளவுதான்.
அந்தக் கணமே சாக்கடை அள்ளுபவருக்கு ஞானம்‌ சித்தித்துவிட்டது.

அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு பழம் கொடுத்த செல்வந்தரை வணங்கிப் பாட ஆரம்பித்தார். அவர் பெயர் ஸாந்தீச்வர் மஹராஜ்..

குருத்யாயீ குருத்யாயீ
குரு பரதே ஸாதன நாஹி

கேலே ஸத்குரு பூஜன
ஹேம்சி மாஜே அனுஷ்டான

குரு ஸேவா சா ஸங்கல்ப 
ஹேம்சி மாஜே பூரண தப

ஸாந்தீச்வர சாங்கே வர்ம 
குருதோசீ பரப்ரும்ம

ஒரு மஹாத்மாவின் கடாக்ஷம், ஸ்மரணம், ஸ்பர்சம் இவற்றாலேயே ஒரு பொருளுக்கு மஹத்வம் வந்துவிடுகிறது.
மேலும், குருவுக்கு அனுக்ரஹம் செய்ய ஒரு பொருளும் தேவையில்லை. ஒரு அழுகிய வாழைப்பழத்தின் மூலமாகக் கூட, அவரால் ஞானத்தைக் கொடுத்து விட முடியும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37