குருவருள் ஒன்றே கதி - 19
குருவின் ஸாந்நித்யம்
அடர்ந்த காடு, அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தாள் அவள். சற்றே முதிர்ந்த தோற்றம். இடுப்பில் கவண், சிற்சிறு கத்திகள், ஒரு தோல் பை, கையில் ஒரு கோல். சுற்றிலும் பார்த்துக் கொண்டு பதுங்கி பதுங்கி வந்துகொண்டிருந்தாள். வேடுவப் பெண்ணாய் இருக்கவெண்டும். வெகுதூரம் வந்துவிட்டாள்.
தூரத்தில் காதுகளை விறைத்துக்கொண்டு ஒரு மான் நின்றுகொண்டிருந்தது. கவண் கல்லைக் கொண்டு அதன் காலில் அடிக்கலாம் என்று எடுத்தாள்.
சட்டென்று ஒரு எண்ணம் வந்தது..
எவ்ளோ அழகா இருக்கு, சின்ன சின்ன புள்ளி, காதை எப்படி தூக்கி வெச்சிருக்கு, நிக்கறதைப் பாரு..
எவ்ளோ அழகான கண், கண்ணை உருட்டி உருட்டிப் பாக்குதே.. யப்பா.. இதைப் போய் அடிப்பாங்களா.. பாத்துட்டே இருக்கலாம் போல..
பசிக்குதே...
வேற ஏதாவது மிருகம் கிடைக்காம போகுதா? இந்த மானை அடிக்க வேணாம்.
கவணைத் திரும்ப இடுப்பில் செருகிக்கொண்டாள். மான் ஓடிவிட்டது. இன்னும் சிறிது தூரம் சென்றதும், இரண்டு முயல்கள் விளையாடிக்கொண்டிருந்தன.
அப்பாடா.. முயல் போதும் இன்னிக்கு.. அடிக்கக் கவணை எடுக்கும் முன் மனம் அவளைக் கட்டிப்போட்டது..
வெள்ள வெளேர்னு எவ்ளோ அழகு, நீளமான காது..
ரெண்டும் எப்படிக் குதிக்குது..
பார்த்துக் கொண்டே நின்றாள்.
இப்படியாக கண்ணில் காணும் ஒவ்வொரு விலங்கையும் அடிக்கக் கவணை எடுப்பதும், பின்னர் அவற்றின் அழகில் மயங்கி அடிக்காமல் விடுவதுமாக அவளது பொழுது போயிற்று. மாலையாகிவிட்டது.
பசி வயிற்றைக் கிள்ளியது.
அங்கு ஒரு சிற்றாறு ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரையிலிருந்த மாமரத்தின் பழத்தைப் பறித்து உண்டாள்.
அங்கேயே நதிக்கரை மணலில் படுத்தவளுக்கு ஒரு சிந்தனை வந்தது.
என்னாச்சு நமக்கு? பொறந்ததிலேர்ந்து இந்தக்காட்டில் தான் சுத்தறேன். தினமும் கண்ணுல படற முதல் மிருகத்தை எப்படியாச்சும் அடிச்சுடுவேன்.
இன்னிக்குக் காலைலேர்ந்து எத்தனை மிருகத்தைப் பாத்தேன். ஏன் இன்னிக்கு மட்டும் எதையுமே கொல்ல மனசு வரல. இது மாதிரியெல்லாம் நாம இதுவரைக்கும் நினைச்சதேயில்லையே..
நமக்கு என்னவோ ஆயிடுச்சு..
அவளது போக்கு அவளுக்கே விசித்ரமாக இருந்தது.
யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் கண்ட காட்சியை அவளாலேயே நம்ப முடியவில்லை. நிஜம்தானா என்று கிள்ளிப்பார்த்துக்கொண்டாள். அப்படி என்ன கண்டாள்?
அங்கே...
ஒரு சிங்கக்குட்டியும் மான்குட்டியும் ஒத்து விளையாடிக்கொண்டிருந்தன. எழுந்துவிட்டாள். ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே நடந்தவளின் கண்களில் இன்னொரு அதிசயம் விழுந்தது.
ஒரு பெரிய யானையின் மேல் ஏறி ஏறி இறங்கி இரண்டு சிறுத்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன.
சட்டென்று நின்றாள். ஒன்றுக்கொன்று விரோத பாவங்கள் உள்ள மிருகங்களே பகை மறந்து அன்போடு விளையாடுகின்றன.
ஓ, அதனாலதான் நமக்கும் எதையும் அடிக்க மனசு வரல. இந்த இடத்திலதான் ஏதோ விசேஷம் இருக்கு.
மனசு, நிம்மதியாவும், சந்தோஷமாவும் இருக்கு. இங்கயே ஒரு சின்ன குடிசை போட்டுத் தங்கிடுவோம். ஆனா, அதுக்கு முன்னாடி இங்க என்ன விசேஷம்னு கண்டுபிடிக்கணும்..
இன்னும் சிறிது தூரம் நடந்தாள்.
ஒரு ஆசிரமம் தெரிந்தது. ஆங்காங்கே சிலர் அமர்ந்து ஏதோ மந்திரங்கள் ஓதிக்கொண்டிருந்தனர். அங்கு ஒரு திண்ணையில் ஒருவர் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார். மனிதரா, தேவரா என்று நினைக்கும்படி யாக ஒளிவீசும் தாமரை போன்ற முகம். கண்கள் மூடியிருந்தன. அகன்ற நெற்றி, அதில் கோபி சந்தனம், நீண்ட கைகள், காஷாயம் உடுத்தியிருந்தபோதும் மிக அழகாக இருந்தார்.
ஓ இவர் இங்க தவம் செய்யறதாலதான் இந்த இடமே அமைதியா நல்லா இருக்கு.
நாமும் இங்கயே இருக்கலாம். அவரைப் பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு..
நதிக்குச் செல்லும் வழியில் சற்றுத் தள்ளி இரண்டு மட்டைகளையும் கட்டைகளையும் வைத்து ஒரு குடிசை போட்டுக்கொண்டாள்.
மறுநாள் அதிகாலை அந்த வழியாகச் சிலர் ஏதேதோ ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டு செல்லும் ஒலி கேட்டதும், தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தாள். அந்த தபஸ்வி சில சிஷ்யர்களோடு நதிக்கு ஸ்நானத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்.
அவரது எல்லையற்ற அன்பு அவளை ஆட்கொண்டது.
வழியெல்லாம் ஒரே கல்லும் முள்ளுமா இருக்கே..
அவர் வருவதற்குள். கையில் கிடைத்த ஏதேதோ மட்டைகளைக் கொண்டு வேகவேகமாக ஒற்றையடிப்பாதையைச் சுத்தம் செய்துவிட்டாள்.
மறுநாளைக்குள் வாகாக ஒரு துடைப்பம் செய்துகொண்டு அவர் ஸ்நானத்திற்கு வருமுன்னரே, பாதையையும் அதைச் சுற்றியும் நேர்த்தியாகச் சுத்தம் செய்து வைக்கத் துவங்கினாள்.
ஒரு வாரம் ஆயிற்று.
அந்த தபஸ்வி முக்காலமும் உணர்ந்தவராயிற்றே. ஒரு சிஷ்யனிடம் கேட்டார்
இந்தப் பாதையில் எப்பவும் கல்லும் முள்ளுமா இருக்குமே. இப்ப கொஞ்ச நாளா சுத்தமா இருக்கே. கவனிச்சியா?
ஆமா ஸ்வாமி?
ஏன் அப்படி? நீங்க யாராவது சுத்தம்செய்யறீங்களா?
இல்லை ஸ்வாமி.
அப்ப வேற யாரோ செய்யறாங்க. நாளைக்கு சீக்கிரமாவே போய் ஒளிஞ்சிருந்து யார் சுத்தம் பண்றாங்கன்னு கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வா.
சரி ஸ்வாமி.
மறுநாள் காலை அந்த சிஷ்யனிடம் பிடிபட்டாள் வேடுவச்சி.
இந்தாம்மா, நீதான் இந்தப் பாதையைப் பெருக்கினியா?
நடுநடுங்கிப் போனாள்
ஆமாங்க.. பயந்துகொண்டே சொன்னாள்.
ஏதாச்சும் தப்புங்களா?
அதெல்லாம் இல்ல. உன்னை சாமி கூப்பிட்டாரு. உடனே வா..
இல்லங்க, நான் தப்பு செய்திருந்தா மன்னிச்சுடுங்க. நான் வேணா இந்த இடத்தை விட்டுப் போயிடறேனுங்க
அதெல்லாமில்லம்மா. நீ வா, சாமி உன்னைப் பாக்கணுமாம்.
வலுக்கட்டாயமாக அவளை அழைத்துக்கொண்டு போய் குருவின் முன்னால் நிறுத்தினான் சீடன்.
கும்பிடறேனுங்க சாமி
வாம்மா, நீதான் பாதையெல்லாம் சுத்தம் பண்றயா?
ஆமாங்க, தப்புன்னா மன்னிச்சிடுங்க.
பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது.
அவரது தேஜஸின் முன்னால் நிற்கக்கூட முடியவில்லை.
உன் பேரென்ன?
அப்பன் ஆத்தாவெல்லாம் சபரின்னு கூப்பிடுவாங்க. இப்ப யாருமில்ல.
யாருமில்லாம எப்படி. எல்லாருக்கும் பகவான் இருக்கான். நீ ரொம்ப நல்ல காரியம் பண்ற. தினமும் பண்ணு. என்று அனுக்ரஹம் செய்து ஒரு பழம் கொடுத்தார்.
ஆனந்தத்தில் அவளுக்குப் பேச்சு வரவில்லை. கண்ணீர்தான் வந்தது.
விழுந்து வணங்கிவிட்டுப் புறப்பட்டாள்.
இவ்வளவு நாள் செய்த கைங்கர்யத்திற்கு குருவின் வாக்கினாலேயே அங்கீகாரம் கிடைத்துவிட்டது. அவரே நியமனம் செய்து ஒரு கைங்கர்யம் கொடுத்து விட்டார்.
குதித்துக் கொண்டு குடிசைக்கு வந்தாள்.
வரும் வழியில் ஒரு சிஷ்யனைக் கேட்டாள்.
சாமி பேரென்ன?
சிஷ்யன் மிடுக்காகச் சொன்னான்.
உனக்கு இனி வாழ்வுதான் போ. குருவே மனசாற அனுக்ரஹம்பண்ணிட்டார். அவர் யார்னு தெரியாமயே அவரோட அனுகரஹம் கிடைச்சிடுச்சு. அவர்தான் மதங்க மஹரிஷி..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment