குருவருள் ஒன்றே கதி - 18

இளமை திரும்பியது - 3

சொன்ன வண்ணம் செய்த இறைவன்

திடீரென்று ஊர் முழுதும் அசம்பாவிதங்கள் தோன்றியதும், அரசன் மிகுந்த கவலையும் பயமும் கொண்டான். உடனே, ராஜகுருவிடம் காரணம் கேட்க, ராஜகுரு ஆலோசித்துவிட்டுச்  சொன்னார்.

ஊரில் காமாக்ஷி உள்பட ஒரு தெய்வமும் இல்லை. எல்லாக் கோவில்களும் ஸாந்நித்யமற்று வெற்றுக் கட்டிடங்களாகக் காட்சியளிக்கின்றன.

ஒரே நாளில் ஏன் இவ்வாறு ஆயிற்று.

ஏதோ தெய்வ குற்றம் நிகழ்ந்திருக்கிறது.

இதற்கிடையில், கணிகண்ணனும் அவனைத் தொடர்ந்து சென்ற ஆழ்வாரும், தெய்வங்களும் காஞ்சிபுர நகரத்தில் எல்லையில் ஒரு கிராமத்தில் அன்றிரவு தங்கினார்கள். 

அத்தனை தெய்வங்களின் ஸாந்நித்யமும் சட்டென்று ஏற்பட்டவுடன் கிராமமே‌ ப்ரகாசமாயிற்று. அனைவர் மனத்திலும் ஆனந்தம் பொங்கியது. நிறைய ஸத்சங்கங்கள் ஏற்பாடாயின.

திடீர் முரண்பாட்டை ஒற்றர் மூலம் அறிந்த ராஜகுரு, எல்லா தெய்வங்களும் காஞ்சியை விட்டு அங்கு சென்றிருக்கலாம் என்று நினைத்து, மன்னனை அழைத்துக்கொண்டு அங்கு சென்றார்.

அங்கு குவிந்திருந்த ஸாந்நியத்தைக் கண்டு, காமாக்ஷியை த்யானம் செய்து அழைத்தார்.

அம்மா, நீங்கள் ஏன் இப்படி ஊரை விட்டு வந்தீர்கள்? தெய்வ ஸாந்நித்யம்  இல்லாத ஊரில் நாங்கள் எப்படி இப்போம்? திரும்பி வாருங்கள்.

எனக்கொன்றும் தெரியாது. என் ஸ்வாமியான ஏகாம்ரேஸ்வரர் பரிவாரத்துடன்  கிளம்பினார். அவர் பின்னால் நான் வருவதுதானே முறை? அவர் வந்தால் நானும் வருகிறேன். 

ராஜகுரு பரமேஸ்வரனை அழைக்க, 
ஈச்வரன் சொன்னார்.

பெருமாள் கிளம்பினார். அவரைத் தொடர்ந்து  மஹாலக்ஷ்மி கிளம்பிவிட்டார். அவரைத் தொடர்ந்து அத்தனை தெய்வங்களும் கிளம்பின. எந்த தெய்வமும் வசிக்க விரும்பாத ஊரில் நான் எப்படி இருக்கமுடியும்?

ராஜகுரு, மஹாலக்ஷ்மியை வேண்டினார்

அம்மா நீங்கள் இல்லாமல் அத்தனை தெய்வங்களும் வர மறுக்கின்றன. தயவு செய்து வாருங்கள்.

என் கணவர் வந்தால் நான் வருகிறேன் ஒரே வரியில் பதிலிறுத்தார் தாயார்.

ராஜகுரு பகவானிடம் போனார்.

ஸ்வாமி, நீங்கள் இப்படிச் செய்யலாமா? 
வேகவதி ஆற்றுப் பெருக்கைக் கட்டுப் படுத்த வந்து படுத்துக்கொண்டீர். இப்போது ஊரை விட்டுப் போகும் அளவிற்கு என்ன நேர்ந்துவிட்டது? தயவு செய்து திரும்பி வாரும்..

ராஜகுருவே, நான் பக்த பராதீனன். என் பக்தனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன். எனவே ஆழ்வாரைக் கேளும். அவர்தான் என்னைக் கிளம்பி அவரோடு வரச்சொன்னார்.
அவர் சொன்னால் வருகிறேன்.

ராஜகுருவிற்கு இப்போது விஷயம் விளங்கிற்று.
திருமழிசையாழ்வாரின் திருவடிகளில் மன்னனோடு சென்று விழுந்தார்.

ஸ்வாமி, நீங்கள் ஊரை விட்டுக் கிளம்பியதால், எல்லா தெய்வங்களும் உமது பின்னால் வந்துவிட்டன. ஊரே சுடுகாடாகி விட்டது. தயவு செய்து நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து திரும்பி வந்து எங்களுக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.

ஆழ்வார் அமைதியாகச் சொன்னார்.
என் சிஷ்யனை விட்டுவிட்டு என்னால்‌இருக்க முடியாது. அவன் வந்தால் நான் வருகிறேன்.

 மன்னன் கணிகண்ணன் காலில் விழுந்து, 

ஐயா, எனக்கு இளமை திரும்பவும் வேண்டாம். நீர் எங்கேயும் போகவும் வேண்டாம். என் நாடும் மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தால் போதும். நான் அளித்த தண்டனையை உடனே ரத்து செய்கிறேன். தயவு செய்து திரும்பி வாருங்கள்.

கணிகண்ணன் குருவைப் பார்க்க, ஆழ்வார் தலையசைக்க, சரியென்று திரும்பி ஊருக்கு வர ஒப்புக்கொண்டான்.
மன்னன் உடனே  பல்லக்கு ஏற்பாடு செய்து ஆழ்வாரையும் கணிகண்ணனையும் அழைத்து வர்ச் செய்தான். கணிகண்ணன் பல்லக்கில் ஏற மறுத்து ஆழ்வாருக்கு சாமரம் போட்டுக்கொண்டு வர, அவர்களைப் பின்தொடர்ந்து பெருமாளும், லக்ஷ்மியும், பரமேஸ்வரனும், காமாக்ஷியும், மற்ற அத்தனை தெய்வங்களும் காஞ்சி நகருக்குள் நுழைந்தன. 

மறுபடி ஊர் சிறப்புற்று விளங்கியது. அபசகுனங்கள் நீங்கின.

ஆழ்வாரும் சிஷ்யனுமாக திருவெஃகாவிற்குத் திரும்பினர்.
அங்குமிங்கும் அலைந்த களைப்பில் ஆழ்வார் சென்று மண்டபத்தின் திண்ணையில் அமர்ந்தார். பிறகுதான் கவனித்தார்.
அங்கே...

கட்கத்தில் அனந்தனைச் சுருட்டி வைத்துக்கொண்டு எல்லாம்‌ வல்ல இறைவன் ஆழ்வாரை பரிதாபமாகப்  பார்த்துக்கொண்டு பேசாமல் நின்றுகொண்டிருந்தார்.

சட்டென்று எழுந்த ஆழ்வார்,

ஓ என் சொல்லுக்காகக்‌ காத்திருக்கிறீரா?

என்றார். பின்னர் முன்பு சொன்னதைச் சற்றே மாற்றி

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.

என்று பாடினார்.

அவர் பாடியதுதான் தாமதம் ஹரி குடுகுடுவென்று ஓடிச் சென்று அனந்தனை விரித்துப் படுத்துக் கொண்டான்.
அவசரத்தில் முன்பிருந்தபோல் அன்றி‌மாற்றிப் படுத்துக்கொண்டு விட்டான். மேலும், ஆழ்வார் சொன்னதைச் செய்ததன் அடையாளமாக மாற்றிப் படுத்துக்கொண்டானோ?

சொன்ன வண்ணம் செய்த பெருமாள், யதோக்தகாரி என்று பெயரும் வந்துவிட்டது.

அத்தனை தெய்வங்களும் சென்று ஒரு இரவு தங்கியதால், அந்த கிராமத்திற்கும் ஓரிரவிருக்கை அல்லது ஓரிக்கை என்று பெயராகிவிட்டது.

உத்தம குருவின் வாக்கை இறைவனே கேட்கும்போது‌ நமக்கும் குருவின் வாக்கே கதியன்றோ?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37