குருவருள் ஒன்றே கதி - 17
இளமை திரும்பியது - 2
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்!
கணிகண்ணன் திருமழிசையாழ்வாரின் அனுமதியுடன் அரண்மனைக்குச் சென்றான்.
வாருங்கள்
நீதான் கிழவியைக் குமரியாக்கினீரா? உமது திறமை கண்டு வியந்து போற்றுகிறோம்..
வணக்கம் மன்னா..
நான் எதுவும் செய்யல. அவங்க சாமிக்கு தொண்டு செய்யணும்னு ஆசைப்பட்டாங்க. குருவருளால மாறிட்டாங்க..
நீர் எப்படி வேண்டுமானாலும் சொல்லும். எனக்கும் வயதாகிவிட்டது. இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன.. சற்று என் இளமையைத் திருப்பினால், உமக்கு நிறைய ஸன்மானங்கள் கிடைக்கும்..
அரசே, அது என்னால் ஆகாது. ஏதோ குருவருளால் அதிசயம் நிகழ்ந்தது. அதுவும் அவரது தொண்டில் மகிழ்ந்து இறைவன் கொடுத்தது..
என்னை இளமையாக்கும்படி உமக்கு உத்தரவிடுகிறேன்.
என்னால் முடியாது அரசே..
எனில், உம்மை நாடு கடத்தும்படி உத்தரவிட நேரிடும்..
பரவாயில்லை. உலகம் பெரியது. குருவருள் எதைச் செய்யும் செய்யாது என்பதில் நான் தலையிட இயலாது. நான் ஊரை விட்டுப் போகிறேன்..
எனில், இன்றே நீ நம் நாட்டை விட்டுக் கிளம்பவேண்டும்
உத்திரவு மன்னா!
என்று சொல்லிவிட்டு கணிகண்ணன் நிகழ்ந்ததனைத்தையும் குருவிடம் சொன்னான்.
நான் ஊரைவிட்டுப் போறேன். உத்திரவு தாங்க
என்று விழுந்து வணங்கினான்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் திருமழிசையாழ்வார். உத்தம சிஷ்யனுக்காக குரு என்ன வேண்டுமானாலும் செய்வார்.
கண்ணா, நீ எனக்கு நிறைய சேவை செய்யற. நீதான் எனக்கு வேண்டியதெல்லாம் பார்த்து பார்த்து செய்யற. நீ இல்லாத இவ்விடத்தில் எனக்கு மட்டும் என்ன வேலை? நானும் உன்னோட வரேன்.
என்று கிளம்பினார்.
கண்ணனுக்கு அளவிலாத மகிழ்ச்சி.
என் பாக்யம் ஸ்வாமி!
என்றவன் அவரது உடைமைகளையும் சேர்த்து மூட்டை கட்டினான்.
கோவிலை விட்டு இருவரும் கிளம்பினார்கள்.
செல்லுமுன், ஆழ்வார், உள்ளே திரும்பி பெருமாளைப் பார்த்து,
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.
என்று பாடினார்.
அதாவது நானும் என் சீடனும் கிளம்புகிறோம். உமக்கு மட்டும் இங்கென்ன வேலை? உமது பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு நீரும் கிளம்பும்
என்று பெருமாளுக்கு உத்திரவிட்டார் ஆழ்வார்.
பகவான் பக்த பராதீனன் அல்லவா?
ஆழ்வார் சொன்னதை
அப்படியே கேட்டான். தன் ஆதிசேஷனைச் சுருட்டிக் கட்கத்தில் வைத்துக்கொண்டு ஆழ்வாரின் பின்னால் நடக்கத் துவங்கினான்.
பெருமாள் சென்றால், மஹாலக்ஷ்மித் தாயார் என்ன செய்வாள்? அகலகில்லேன் இமைப்பொழுதும் என்று மார்பில் குடிகொண்டவளாயிற்றே. தாயாரும் பெருமாளின் பின்னால் கிளம்ப, காஞ்சியிலிருந்த அத்தனை தெய்வங்களும் மஹாலக்ஷ்மியின் பின்னால் கிளம்பின.
ஊரே சுடுகாடு போல் காட்சியளித்தது. தெய்வமில்லாத ஊர் எப்படி இருக்கும்? எங்கும் நாயும் நரியும் ஊளையிடத் துவங்கின. அனைவர் மனத்திலும் இனம் புரியாத பயம் குடிகொண்டது. அபசகுனங்கள் தென்பட்டன.
திடீரென்று இத்தகைய மாற்றம் ஏன் வந்தது என்று ஒருவருக்கும் புரியவில்லை.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment