குருவருள் ஒன்றே கதி - 16
இளமை திரும்பியது..
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமழிசையாழ்வார் பெரிய யோகீஸ்வரர். நேருக்குநேர் எம்பெருமானோடு அளவளாவக் கூடியவர்.
மிகுந்த வயதான காலத்தில், க்ஷேத்திரங்களுக்குச் செல்வது சிரமமாகிவிட்ட நிலையில், காஞ்சீபுரத்தில் உள்ள திருவெஃகா என்ற திருத்தலத்தில், உள்ள ஆலயத்தில் தங்கிவிட்டார்.
அப்போது கோவிலுக்கு வழக்கமாக வரும் தம்பதியினர் ஒரு யோகீஸ்வரர் கோவிலில் இருப்பதைப் பார்த்து அவருக்கு சேவை செய்யத் துவங்கினர்.
அவர்களது சேவையில் மகிழ்ந்துபோன ஆழ்வார், ஒரு கனியின் வாயிலாக அருள்கொடையை வழங்கினார்.
இதுவரை மக்கட்பேறின்றி வருந்திய அவர்கட்கு அவ்வருள் கனி பிள்ளைக்கனியைக் கொடுத்தது.
கண்ணனைப் போலவே ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு கணிகண்ணன் என்று பெயரிட்டார் ஆழ்வார்.
அருள்கொடையால் பிறந்தவனாகையால், அவனும் நற்பண்புகளில் சிறந்து விளங்கியதோடு, குருசேவையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்தான்.
காஞ்சி மன்னனின் அரசவையில் நாட்டியக்காரியாக இருந்த ஒரு பெண்மணிக்கு மிகவும் வயதாகிவிட்டதால், ஓய்வு கொடுத்து மானியமும் கொடுத்து அனுப்பிவிட்டான் அரசன். அவள் கோவிலில் தன்னால் இயன்ற சேவை செய்யலாம் என்று நினைத்தாள். தள்ளாத வயதில் கோவிலைப் பெருக்கிக் கொண்டிருந்த அவளை கவனித்தான் கணிகண்ணன்.
ஏன் பாட்டீ, உடம்பு முடியலன்னா ஓய்வெடுக்கலாமே. ஏன் கஷ்டப்படறீங்க
தளர்ந்துபோனா என்னப்பா? இவ்ளோ நாள் அர்த்த்தமில்லாத வாழ்க்கை வாழ்ந்தாச்சு. கடைசி காலத்திலாவது பகவானுக்கு ஏதாவது தொண்டு செய்தாத்தானே போறவழிக்கு புண்ணியம் கிடைக்கும்?
அப்படியா? உடம்பில் தெம்பு வந்தா இன்னும் நல்லா தொண்டு செய்யலாமே..
என்றவன் அந்தப் பாட்டியின் கையைப் பிடித்தான்.
குப்ஜையை அழகாக்க கண்ணன் அவளது கால் கட்டை விரலை மிதித்துக்கொண்டு முகவாயைப் பிடித்துத் தூக்கினான்.
இங்கு ஒரு உத்தம குருவின் சீடனது கரம் பட்டதுமே கிழவி குமரியானாள்.
இப்ப இன்னும் நல்லா தொண்டு செய்ங்க
என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டான் கணிகண்ணன்.
விஷயம் காட்டுத்தீ போல் பரவியது.
அந்தப் பெண்மணியை அரசவையில் அழைத்து விசாரித்த மன்னன், உடனே கணிகண்ணனை சகல மரியாதைகளோடு அழைத்துவரும்படி உத்தரவிட்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment