குருவருள் ஒன்றே கதி - 15

பாம்பின் கால் பாம்பறியும் - 2

ஸமர்த்த ராமதாசரைச் சந்தித்த பிறகு, அந்த ப்ரமிப்பிலிருந்து  சிவாஜியால் விடுபடவே இயலவில்லை.
அவரது அழகான திரவுருவம், அவர் பேசிய வார்த்தைகள், அவரது மகிமை இவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். 

சிறிது காலம் சென்றதும் வேறெங்கோ சென்றுவிட்டுப் படையோடு திரும்பிக் கொண்டிருந்த சிவாஜியின் கண்களில் தேஹு‌ என்ற ஊரின் பெயர் தென்பட்டது. சட்டென்று நின்றார் சிவாஜி. அன்றைக்கு குருநாதர் இந்த தேஹு கிராமத்தில் சென்று துகாராம் என்ற மஹாத்மாவைப் பார் என்றாரே.
படைகள் முழுவதையும் ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு, இரண்டு மந்திரிகளுடன் ஊருக்குள் சென்றார் சிவாஜி.

துகாராம் மஹராஜின் வீட்டைக் கண்டுபிடிப்பது வெகு சுலபமாய் இருந்தது. மந்திரிகளை தூரத்தில் நிறுத்தி விட்டுத் தான் மட்டும் துகாராமைப் பார்க்கச் சென்றார் சிவாஜி. 
பழைய வீடு, வீட்டில் எந்த வசதிகளும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. சின்னஞ்சிறிய குழந்தைகள் கந்தலாடையோடும், ஒட்டிய வயிறோடும் வாசலில்  விளையாடிக்கொண்டிருந்தன.
துகாராம் திண்ணையில் அமர்ந்து தம்புராவை மீட்டிக்கொண்டு கீர்த்தனம்‌ செய்துகொண்டிருந்தார்.

அவரது இனிமையான குரல் சிவாஜியின் மனத்தை என்னவோ செய்தது. சிறிது தூரத்தில் நின்றுகொண்டு தன்னை மறந்து கீர்த்தனத்தில் லயிக்கலானார்.

சிறிதுநேரம் கழித்து சிவாஜியைக் கவனித்த துகாராம் தலையசைத்து அருகில் அழைத்தார்.

நீங்க சிவாஜி மஹாராஜா தானே?

ஆம் ஸ்வாமி

வாங்க, இங்க என் வீட்டு வாசலில் என்ன செய்யறீங்க? ஏதாவது வேணுமா?

சிவாஜி தான் ஸமர்த்த ராமதாசரைச் சந்தித்த விவரங்களைச் சொல்லி,

 அவர்தான் உம்மைப் பார்த்து வரச் சொன்னார். அவரால் எப்படி அவ்வளவு குறுகிய நேரத்தில் அவ்வளவு பேருக்கும் உணவு படைக்க முடிந்தது? அந்த ரகசியத்தை உம்மிடம் கேட்கச் சொன்னார் 
என்று சொன்னார்.

துகாராம் பெரிதாய்ச் சிரித்தார்.

அதிருக்கட்டும்.
இப்ப யுத்தம் முடிச்சுட்டுத்தானே  வர? 

ஆமாம் ஸ்வாமி

படைகளெல்லாம்?

ஊருக்குள்ள படைகள் வந்தா கிராமத்து மக்களுக்குத் தொந்தரவாயிடும்னு  கிராமத்து எல்லையில் நிறுத்தியிருக்கேன்.

சரி,  எல்லாரும் சாப்பிட்டுப் போகலாம். 
என்றாரே பார்க்கவேண்டும்.

சிவாஜிக்குத் தலை சுற்றியது. காட்டுக்குள் ஒருவர் அதிசயம் செய்தார் என்றால், இவரும் அதையே சொல்கிறாரே.

ஸ்வாமி, சதுரங்க சைன்யமும் வந்திருக்கு. நான் தம்மைச் சந்திக்கத்தான் வந்தேன். 

எனக்குத் தெரியும்பா.. ராஜா வந்தா சதுரங்க சைன்யம் வரும்னு தெரியாதா? எல்லாரும் சாப்பிட்டுப் போகலாம்.
என்றவர், 
உள்ளே திரும்பி
 ஆவளீ..
என்றழைத்தார்.

 அவரது மனைவி ஜீஜாபாய் இவர் கண்ணைக் காட்டியதும், ஆட்டா மாவு  இருந்த ஒரு சிறிய சம்படத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்.

படையெல்லாம் இங்க வந்தா, கிராமத்து ஜனங்களெல்லாம் பயப்படுவாங்க
நாம அங்க போவோம் 
என்று சொல்லிக்கொண்டே ஊர் எல்லைக்கு வந்தார்.
சிவாஜி பேச்சற்றுப் போய், பின்தொடர்ந்தார்.

எல்லாப் படைவீரர்களையும், யானை, குதிரகளையும் வரிசையாய் நிற்க வைத்து கையை நீட்டச் சொல்லி,  கோவில்களில் விபூதி ப்ரசாதம் கொடுப்பதுபோல், ஒரு சிட்டிகை ஆட்டா மாவு கொடுத்தார். அதை உண்டதும், கண்ணன் உண்ட  ஒரு  சோற்றுப் பருக்கையால் துர்வாசரின் வயிறு நிறைந்ததுபோல், அத்தனை பேரின் வயிறுகளும் நிரம்பின. படைவீரர்கள் எல்லாரும் 

வயிறு நிரம்பிடுச்சு. 
இன்னும் பத்து நாளைக்கு உணவே வேணாம்‌ மஹராஜ். 

என்றனர். உண்மையில் சிவாஜிக்கும் அப்படித்தான் இருந்தது. 

காட்டில் இருந்துகொண்டு கணத்தில் பெரிய விருந்தை ஏற்பாடு செய்த அவர் பெரியவரா? அல்லது ஒன்றுமே இல்லாமல் ஒரு சிட்டிகை மாவைக் கொடுத்து வயிறு நிரம்பச் செய்த இவர் பெரியவரா?
எது அதிசயம்? அங்காவது உண்மையில் உண்பதற்கு விருந்து இருந்தது. உண்டதும் வயிறு நிரம்பியது. இங்கு ஒன்றுமே இல்லாமல், ஒரு சிட்டிகை மாவில் வயிறு நிரம்பிவிட்டது. சிவாஜிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. விழுந்து வணங்கிவிட்டு, 
துகாராமிடம் கேட்டேவிட்டார்.

ஸ்வாமி, நான் அவர் காட்டில் எப்படி உணவு படைத்தார் என்று தெரிந்துகொள்ள வந்தால், நீங்கள் வெறும் கையால் வயிற்றை நிரப்புகிறீர்கள்? இது எப்படி சாத்தியமாயிற்று. தயவு செய்து சொல்லுங்கள் என்றார்.

குழந்தைபோல் சிரித்த துகாராம்‌ சொன்னர்.

அதுவா, காட்டில் ஸமர்த்த ராமதாசர் இருக்காரே? அவர்கிட்ட போய்க் கேளு.
என்றார்.

ஞானிகளைப் பற்றி ஞானியரே அறிவர். ஸாமான்யர்களுக்கு அவர்களது நிலை புரிந்துவிடுவதில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37