குருவருள் ஒன்றே கதி - 14

பாம்பின் கால்‌ பாம்பறியும் - 1

வீர சிவாஜி ஒரு சமயம் ஒரு போருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. ஒரு நதிக்கரையைக் கண்டதும் அங்கே சற்று இளைப்பாறிவிட்டு பயணத்தைத் தொடரலாம் என்று படைகளுக்கு உத்தரவிட்டார். நால்வகைப் படைகளும் போரில் களைத்திருந்தன. 

தாகம் தீர்க்க நதிக்கு வந்தார் சிவாஜி. முகம் கை கால்களைக் கழுவிக்கொண்டு, நீரைப் பருக எண்ணி கைகளில் நீரை அள்ளியபோது, கையில் ஒரு இலை வந்தது. அதில் ஏதோ எழுதிருந்தது. என்னவென்று படித்தபோது ராமரைப் பற்றிய ஒரு அழகான பாடல் என்று அறிந்துகொண்டார். யாரோ இப்போதுதான் எழுதிருக்கவேண்டும். எங்கிருந்து வந்தது? யார் எழுதியிருப்பார்கள்? எவ்வளவு அழகான கவிதை? சிவாஜியின் கண்கள் எழுதியவரைத் தேடின. சிறிது தூரம் நதியின் ஓரமாகவே நடந்தார். அடுத்ததாக பாடல் தாங்கிய  இன்னொரு இலை வந்தது. தொடர்ந்து சென்றபோது, பாடல்கள் நிரம்பிய இலைகள் வரிசையாய் வந்துகொண்டே இருந்தன. யாரோ எழுதி எழுதி நதியில் போடுகிறார்கள். இவ்வளவு அழகான பாடல்களை நதியில் போடுவானேன்?
ஆர்வம் தாங்காமல், 
இலைகள் வந்த திசையை நோக்கி வேகமாய் நடந்தார்.

சிறிது தூரம் சென்றதும், இவ்வளவு குளிர் காலத்திலும் ஒரே ஒரு கோவணத்துடன், மஹாதேஜஸ்வியாக, ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது முகம் ப்ரஸன்னமாக இருந்தது. கனிவு பொங்கும் கண்கள், நீண்ட கைகள், அமைதியே உருவாக அமர்ந்திருந்தார்.
பார்த்ததுமே யாரோ பெரிய மஹாத்மா என்று உணர்ந்துகொண்டார் சிவாஜி.

நின்ற இடத்திலேயே காலணியைக் கழற்றிவிட்டு, அவரருகில் சென்று விழுந்து வணங்கினார்.

இவர்தான் பாடல்கள் எழுதிருக்கவேண்டும்.
சிவாஜியின் கையில் பாடல்கள் நிரம்பிய இலைகளைப் பார்த்ததும் மந்தஹாஸம் செய்தார்.

சிவாஜி மஹராஜ்?

ஸ்வாமி, நான் சிவாஜி.

சிரித்தார்.

இந்தப் பாடல்கள்?

அதிருக்கட்டும். யுத்தம் ஜெயம்தானே?

ஆம்‌ ஸ்வாமி! பவானியருளால்..

பெரிதாய்ச் சிரித்தார்.

சரி, களைச்சுப் போயிருப்ப.. சாப்பிட்டுப் போகலாம்.

ஸ்வாமி, நான் தனியா வரல. என்னோடு சதுரங்க சேனையும் இருக்கு. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு கிளம்பிடறேன்.

தெரியும்பா, ராஜான்னா, சேனையோடுதான் வருவான்.
எல்லாரும் சாப்பிட்டுப் போகலாம்.

ஸ்வாமி...
தயங்கினார் சிவாஜி.

இதுவோ காடு, இவரோ உடைமைகள் எதுவுமே இல்லாமல் இருக்கிறார்? ஆயிரக்கணக்கான வீரர்கள், யானைப்படை, குதிரைப் படை எல்லாவற்றுக்கும் எப்படி உணவு படைக்க முடியும்? 
அவன் மனதில் பல்லாயிரம் கேள்விகள். அவரது தேஜஸைப் பார்த்து கேள்வி எதுவும் கேட்க சிவாஜிக்கு தயக்கமாய் இருந்தது.

சிவாஜி, நீ போய், எல்லாரையும் வரிசையாக வரச் சொல். யானை, குதிரையெல்லாம் கூட..

ஒன்றுமே புரியவில்லை சிவாஜிக்கு..
சொன்னதைச் செய்வோம். என்னதான் செய்கிறார் பார்க்கலாம் என்று அனைவரையும் வரிசையாக வர உத்தரவிட்டார் சிவாஜி. 
அந்த ஸாது திரும்பிப் பின்னால் பார்க்க, பின்னாலிருந்த ஒரு குகையின் வாசலில் இருந்த பாறையை ஒரு சீடர் ஓடி வந்து நகர்த்தினார்.

ஸாது அதை நோக்கிக் கையைக் காட்ட, உள்ளே சென்று பார்த்தால், அதில் பல்வேறு வகையான உணவுகள், இனிப்புகள், குதிரைகளுக்கு வேண்டியவை, யானைகளுக்கு வேண்டியவை எல்லாம் பாத்திரங்களில் இருந்தன. அதைவிட ஆச்சரியம், எடுக்க எடுக்கக் குறையாமல் வந்துகொண்டே இருந்தன.

சிவாஜிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

எல்லோரும் வயிறு நிரம்ப உண்டனர்.

ஸ்வாமி, கேள்வி கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் என் தலை வெடித்துவிடும்போலிருக்கிறது. ஒரு அரசாங்கத்தை நடத்தும் எனக்கே கூட, அவ்வளவு வசதிகள் இருந்தபோதிலும், இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு உணவுவகைகளைத் தயார் செய்ய முடியாது. 
இங்கு காட்டில் எந்த வசதியும் இல்லை. நீங்கள் எப்படி தயார் செய்தீர்கள்?

இடிஇடியென்று சிரித்தார் ஸாது. 

அதுவா.. புனே பக்கத்தில் தேஹு என்று ஒரு கிராமம் இருக்கு. அங்கு துகாராம் னு ஒரு மஹாத்மா இருக்கார். அவர்கிட்டபோய்க் கேள். அவர் சொல்வார்.

அதற்குமேல் கேள்வி கேட்பது மரியாதை இல்லை என்று சரியெனத் தலையாட்டிவிட்டுக் கிளம்பினார் சிவாஜி.

 ஸமர்த்த ராமதாசர் என்ற அந்த மாஹாத்மாவின் ஆலோசனையினாலும், தபோபலத்தினாலும்தான் சிவாஜி பெரிய அரசாங்கத்தை நிறுவினார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37