குருவருள் ஒன்றே கதி - 13
வேகாத பானை - 5
விசோபா கேசரிடம் மந்திரோபதேசம் பெற்றதுமே ஞானத்தை அடைந்தார் நாமதேவர்.
காணுமிடமெல்லாம் விட்டலனே நிறைந்திருந்தான். அவ்வப்போது மூர்ச்சை அடைவதும் எழுவதுமாக இருந்தவரை பண்டரிபுரத்திற்கு அனுப்பி வைத்தார் விசோபா.
ஒருவாறு பண்டரியை அடைந்த நாமதேவர் கோவிலை அடைந்தார்.
கண்ணாற விட்டலனைக் கண்டுவிட்டு, கோவிலில் வழக்கமாய்த்தான் அமரும் கோவில் வாசலின் முதல் படியில் அமர்ந்து கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தார்.
அவர் வழக்கமாய் அமர்ந்து பாடும் படிக்கட்டின் அடியிலேயே அவரது அஸ்தி வைக்கப்பட்டு, இன்றும் நாமதேவர் படிக்கட்டு என்றே வழங்கப்படுகிறது.
அன்று ஏதோ விசேஷமான தினம் போலும். கோவிலில் கூட்டம் அலைமோதியது.
படிக்கட்டில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தவருக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது.
அவரோ காணும் பொருள் அனைத்திலும் கடவுளைக் காணத் துவங்கிவிட்டார். எனவே, சந்திரபாகா நதிக்கரைக்குச் சென்றார். அங்கு ஒரு பாறையில் அமர்ந்து கொண்டார்.
நதியும், அதன் தெள்ளிய நீரும், அவ்வப்போது செல்லும் படகுகளும், துள்ளும் மீன்களும், அக்கரையோரம் வளர்ந்திருக்கும் நாணலும், நீண்ட மணல் திட்டும், அங்கிருந்தே தெரியும் மஹாத்வாரமும், குளிர் தென்றலும் இன்னும் காண்பதனைத்துமே விட்டலனே என்றுணர்ந்தவரின் கண்களில் நீர் துளிர்த்தது.
என்னே விட்டலனின் கருணை!
தழுதழுக்கும் குரலில் நாமகீர்த்தனம் செய்யத் துவங்கினார். அப்படியே கீர்த்தனத்தில் லயித்து தன்னை மறந்தார்.
ராம்க்ருஷ்ண ஹரி,
ராம்க்ருஷ்ண ஹரி
அவரது மதுரமான குரல் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது.
சற்று நேரம்சென்றதும்
நாமதேவா..
என்ற அழைப்பொலி அவரது லயத்தைக் கலைத்தது. கண்ணைத் திறந்து பார்த்தார்.
எதிரே..
பீதாம்பரதாரி, மகரகுண்டலதாரி
சங்கதாரி,
கிரீடதாரி
அழகான மனம் மயக்கும் புன்னகையுடன் எதிரே நின்றுகொண்டிருந்தான்.
பகவானைக் கண்டதும் விழுந்து வணங்கினார்.
நாமதேவா, என்ன இங்கு வந்து கீர்த்தனம் செய்யற?
கோவிலில் ஒரே பக்தர்கள் கூட்டம். சத்தமும் அதிகம். எனவே, இங்கு அமைதியான சூழலில் பாடலாம் என்று வந்தேன்.
அது சரி, உன் பாட்டை நான் கேக்க வேணாமா? வேற யாருக்காகப் பாடற?
உனக்காகத்தான் விட்டலா, உனக்காக மட்டும்தான் பாடறேன். ஆனா, நீ தான் எல்லா இடத்திலும் நிறைஞ்சிருக்கியே. உனக்குக் கேக்கலையா என்ன?
நாமதேவா, உனக்கு வேணும்னா குருக்ருபையால ஞானம் வந்திருக்கலாம். பார்க்கற இடத்திலெல்லாம் நான் தெரியலாம். ஆனா,,
ஆனா என்ன?
எனக்கு நீ எல்லா இடத்திலயும் தெரியலையே.
கோவில்ல
என்னைப் பார்க்க எவ்வளவோ பக்தர்கள் வரலாம். ஆனால், எல்லாரும் நாமதேவர் ஆக முடியுமா? எனக்கு உன்னைப் பார்த்துண்டே இருக்கணும் நாமதேவா, உன் குரல் கேட்கலன்னா எனக்கு என்னவோபோல் இருக்கு. நீ கோவில்ல வந்து வழக்கமா உட்காரும் படிக்கட்டிலயே உட்கார்ந்து பாடு. இப்படி நதிக்கரையெல்லாம் வேணாம். எவ்வளவு சத்தமா இருந்தாலும் எனக்காகப் பொறுக்கமாட்டியா?
நாமதேவருக்கு குருவின் கருணை யையும் விட்டலனின் வாத்ஸல்யத்தையும் நினைத்து அழுகை வந்தது.
மறுபடி கோவிலுக்குச் சென்று தன் இடத்திலேயே அமர்ந்து பாட ஆரம்பித்தார்.
குருவிடம் அனுப்பி, அவரது பரிபூரண க்ருபைக்கு பாத்திரமாகும்படிச் செய்து, ஞானத்தையும் வழங்கிவிட்டு, அந்த பக்தனின் அடிமையாகவும் ஆகிறான் இறைவன்.
குருக்ருபை இல்லாமல் ஹரிக்ருபை இல்லை.
ஹரிக்ருபை இல்லாமல் பக்தியும் இல்லை
பக்தியில்லாமல் முக்தியும்இல்லை
முக்தியில்லாமல் துக்க நிவ்ருத்தியும் இல்லை...
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment