குருவருள் ஒன்றே கதி - 12

வேகாத பானை - 4

நாமதேவர் குருவைத் தேடியலைந்தார். ஒருவாறு ஒரு கிராமத்தில் அவர் ஒரு சிவன் கோவிலில் இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது. நாமதேவரும் விசோபாவைத் தேடிச் சென்றார். 

சின்னஞ்சிறிய சிவன் ஸந்நிதி. அங்கு ஒருவர் லிங்கத்திற்கு நேராகக் காலை நீட்டிக்கொண்டு படுத்திருந்தார். நாமதேவருக்கு மிகவும் கோபம்‌ வந்தது. 
என்ன மனிதர் இவர்? பைத்தியமா? கோவிலில் படுக்கக்கூடாது. அதுவும்‌ 
ஸ்வாமி‌ ஸந்நிதிக்கு நேராகக் காலை நீட்டிக் கொண்டிருக்கிறார்.  குருவைத் தேடி வந்தால், இப்படியெல்லாம் காணவேண்டி வந்ததே என்று நொந்துகொண்டார்.

நேராக அவரிடம் போனார் நாமதேவர். 

என்னய்யா? கோவிலில் படுத்துக்கிடக்கறதில்லாம, ஸ்வாமி ஸந்நிதிக்கு நேரா காலை நீட்டிருக்கீங்க?

அந்த முதிர்ந்த மனிதர் மெதுவாக நிமிர்ந்து பார்த்தார்.

அப்படியா? ஸ்வாமி ஸந்நிதியா? காலை நீட்டக்கூடாதா?  எனக்குத் தெரியலயே. 

இது ஸ்வாமி ஸந்நிதின்னுகூடத் தெரியாதா?

ஓ, இப்ப என்னை செய்யச் சொல்ற?

காலை நகர்த்தி வேற இடத்தில் வெச்சுக்கோங்க

என்னால முடியலையேப்பா. நீதான் நகத்திவிடேன்.

நாமதேவர், வயதானவர் முடியாததால் சொல்கிறார் என நினைத்து, அவர் காலை வேறு திசை நோக்கி நகர்த்திவிட்டார்.

ஆனால், என்ன ஆச்சரியம்! நாமதேவர் நகர்த்திவிட்ட இடத்தில் அவர் காலுக்கு நேராக ஒரு லிங்கம் தோன்றியது.

தான் சரியாக கவனிக்கவில்லை போலும் என்று நினைத்து மறுபடி வேறு திசையில் நகர்த்திவைக்க, அங்கும் லிங்கம் தோன்றியது.

அதிர்ந்துபோனார் நாமதேவர். பயம் வந்துவிட்டது. இதுவரை விட்டலனைத் தவிர வேறு எவர் மீதும் அவருக்கு இப்படிப்பட்ட பயம் கலந்த மரியாதை வந்ததில்லை.
யாரோ பெரியவர் போலும். நாம்தான் தவறாக நினைத்துவிட்டோம்.

ஸ்வாமி, நீங்க யார்னு தெரியல. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா மன்னிச்சிடுங்க.

நீ ஒரு தப்பும் பண்ணலையே. ஏன் இப்படி சொல்ற? 

ஸ்வாமி நீங்க?

என்னை விசோபா கேசர்னு சொல்வாங்க.

வேரற்ற மரம்போல் அவரது காலில் விழுந்தார் நாமதேவர். விட்டலன் சரியான ஆளிடம்தான் அனுப்பியிருக்கிறான். எப்பேர்ப்பட்ட மஹாத்மா? அவரது காலைப் பிடிக்கும் பாக்கியம் கிடைத்ததே. இப்படி லீலை செய்துவிட்டாரே.

வி்சோபா  கேசர் எழுந்ததும் ஆங்காங்கு தோன்றிய சிவலிங்கங்கள் மறைந்தன. 

ஸ்வாமி எனக்கு மந்திரோபதேசம் செய்யணும்.

நாமதேவர் தானே..விட்டலன் அனுப்பினானா? என்று சிரித்துக் கொண்டே நாமதேவரின் வலது காதில் விட்டலனின் மூலமந்திரமான 
ராம்க்ருஷ்ணஹரி 
என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார். 

இவ்வளவு நாட்களாக ஜபம்‌ செய்த அதே மந்திரம்தான். குருவின் வாயிலிருந்து வெளிப்படும்போது அக்னிபோல் ஒளிர்கிறது. அக்கணமே ஞானம் தந்துவிட்டது. 

மூர்ச்சையடைந்தார் நாமதேவர்.

ஒருவாறு மூர்ச்சை தெளிந்து எழுந்ததும், விசோபா கேசர் அவரை பண்டரிக்குத் திரும்ப உத்தரவிட்டார்.

நாமதேவருக்கோ குருவடிவில் விட்டலனே தெரிந்தபடியால், குருவைப் பிரிய மனமின்றி அழுதார். விட்டலன் உன்னை எதிர்பார்த்துட்டிருப்பான். உடனே கிளம்பு

என்றதும் வேறு வழியின்றி, பிரிய மனமில்லாமல் பண்டரி திரும்பினார்...

குரு உபதேசம் பெற்று ஞானமடைந்து ஊர் திரும்பிய நாமதேவரின் நிலைதான் என்ன?

அடுத்த பதிவில்..

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37