குருவருள் ஒன்றே கதி - 11
வேகாத பானை - 3
நாமதேவரைச் சிறு குழந்தையாக இருக்கும்போதிலிருந்து லாலனை செய்துவந்தபடியால், அவர் மீது தந்தை என்ற வாஞ்சை வந்துவிட்டது விட்டலனுக்கு. எனவேதான், வேறு குருவை நாடும்படி அவரை அனுப்பிவிட்டான் போலும்.
நாமதேவர் விசோபா கேசரைத் தேடி அடைவதற்குள் நாம் அவரைப் பற்றிச் சிறிது பார்க்கலாம். விட்டலனே ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்கிறான் என்றால், அவர் எப்பேர்ப்பட்டவராக இருப்பார்.
ஞானேஸ்வரர்,சோபானதேவர், நிவ்ருத்தி தேவர், முக்தாபாய் அனைவரும் தற்போது பைடன் என்று அழைக்கப்படும் ப்ரதிஷ்டானபுரத்தில் வசித்து வந்தனர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டனர். ஸந்நியாஸி பெற்ற பிள்ளைகள் என்று ஊராரும் அவர்களைத் தள்ளி வைத்தார்கள். என்னதான் ஞானேஸ்வரர் எருமை மாட்டை வேதம் ஓதவைத்து தன் ஞானத்தை நிரூபித்த போதிலும், பலருக்கு அவர்கள் மீது ஒரு இளக்காரம் இருந்தது.
ஒருநாள் ஞானேஸ்வரர் மாண்டே என்று அழைக்கப்படும் போளி போன்ற ஒரு பதார்த்தத்தைச் செய்யும்படி முக்தாவிடம் கேட்டார்.
அதைப் பொரிப்பதற்கு ஒரு தனிவகையான மண் பாத்திரம் தேவை. அடியில் நெருப்பு மூட்டி மாண்டேவை மேல் பாகத்தில் இட்டுப் பொரிக்கவேண்டும். அந்த மான்டே ஏந்தன் என்ற மண் பாத்திரம் வீட்டில் இல்லாததால் முக்தா அதை வாங்கிவரக் கடைவீதிக்குச் சென்றாள்.
கடைவீதியில் இருந்த விசோபா கேசர் முக்தாவைப் பார்த்ததும் கேலி செய்து வம்புக்கிழுத்தார். அவரைப் பார்த்தாலே குழந்தைக்கு பயம்.
என்னம்மா எங்க வந்த?
அண்ணா, மான்டே பண்ணச் சொன்னார். அதைப் பொரிக்கற பாத்திரம் இல்ல. அதான். வாங்க வந்தேன்.
தயங்கி தயங்கிச் சொன்னது குழந்தை.
சந்நியாசி பெத்த பிள்ளைகளுக்கு நாக்குக்கொன்னும் குறைவில்ல. மான்டே கேக்குதோ?
என்று கேலி பேசிவிட்டு, கடைவீதியில் இருந்த வியாபாரிகளிடம்
இந்தப் பொண்ணு என்ன கேட்டாலும் தரக்கூடாது. மீறிக் கொடுத்தா என்னைப் பகைச்சுக்க நேரிடும்
என்று மிரட்டி வைத்தார்.
விசோபா மிகவும் செல்வாக்குள்ளவர் என்பதால் அவருக்கு பயந்து ஒருவரும் முக்தாவிற்கு பாத்திரம் கொடுக்கவில்லை.
அழுதுகொண்டே வீடு திரும்பிய முக்தாவை
ஞானேஸ்வரர் கவனித்து விட்டார்
ஏம்மா அழற?
அண்ணா, எதுவுமே கேக்காத நீங்களே அதிசயமா மான்டே வேணும்னு கேட்டீங்க. அதைப் பொரிக்கப் பாத்திரம் இல்லையேன்னு கடைவீதிக்கு போனேன். அங்க அந்த விசோபா மாமா எல்லாரையும் எனக்கு எதுவும் தரக்கூடாதுன்னு மிரட்டிவெச்சுட்டார்.
அதனால் என்னம்மா? மான்டே சாப்பிடலன்னா குறைஞ்சுபோயிடுவோமா? விடு பரவால்ல.
இல்லண்ணா, நீங்களே என்னிக்கோதான் கேப்பீங்க.
இப்ப என்ன உனக்கு மான்டே பொரிக்க பாத்திரம் வேணும். அவ்ளோதானே..
ஆமாண்ணா..
நீ போய் மாவைத் தயார் செய்து கொண்டு வா
சரிண்ணா..
மாவைத் தயார் செய்து கொண்டு வந்து அதைப் போளி போல் தட்டினாள்...
அண்ணா எப்படி பொரிக்கறது? பாத்திரம் எங்க?
ஞானேஸ்வரர் குப்புறப்படுத்துக்கொண்டார்.
இதோ பாரு முக்தா.. குண்டலினி அக்னியை எழுப்பிருக்கேன். என் முதுகில் போட்டுப் பொரி. தொட்டுடாத.. கை சுடும்.
ஞானேஸ்வரரின் முதுகு அக்னி கனன்றுகொண்டிருப்பதைப் போல் சிவந்திருந்தது.
மாவைத் தட்டி முதுகில் போட போட சூட்டினால் பட படவென்று கணத்தில் பொரிந்தது. குழந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அண்ணான்னா அண்ணா தான்
என்று குதித்துக் கொண்டு எல்லாவற்றையும் நைவேத்யம் செய்ய எடுத்துப் போனாள்.
முக்தாவை விரட்டிவிட்ட விசோபா கேசர், அவள் என்னதான் செய்கிறாள் பார்க்கலாம் என்று பின்னாலேயே வந்து திண்ணையில் ஓளிந்துகொண்டு அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்போது அவரது நெஞ்சம் சுட்டது.
பெரிய தவறிழைத்துவிட்டோம். இந்தப் பாவத்தை எங்கே தொலைப்பது? பகவானுக்கு அபசாரம் செய்தால் கூட மன்னிப்பு உண்டு. ஞானிகளுக்கு அபசாரம் செய்தால் கதியேது?
ஓடோடி வந்து ஞானேஸ்வரரின் கால்களில் விழுந்து
மன்னிக்கும்படி மன்றாடினார்.
ஞானேஸ்வரரோ,
மன்னிப்பெல்லாம் எதுக்கு? நீங்க தப்பே பண்ணலியே..
இல்ல குழந்தையைக் கண்டபடி பேசிட்டேனே...
அப்ப அவகிட்டயே மன்னிப்பு கேளுங்க..
முக்தா பயந்துபோய் ஒளிந்துகொண்டாள்.
நீங்க என்னைத் தள்ளிடக்கூடாது. உங்களையே குருவாய் ஏத்துக்கறேன். எனக்கு உபதேசம் பண்ணுங்க
அழுதார் விசோபா கேசர்.
ஞானேஸ்வரர் முக்தாவைக் கூப்பிட்டு விசோபா கேசருக்கு உபதேசம் செய்யச் சொன்னார்.
முக்தா அவரது வலது காதில் மந்திரோபதேசம் செய்ய, அக்கணமே ஞானத்தை அடைந்தார் விசோபா கேசர்.
ஞானேஸ்வர் தன் முதுகில் பொரிக்கப்பட்ட மான்டேவைப் பிரசாதமாகக் கொடுத்தார்.
அன்று முதல் ப்ரும்மஞானியாக அங்குமிங்கும் சுற்றி வந்தார்.
அவரிடம் மந்திரோபதேசம் பெறுவதற்குத்தான் நாமதேவர் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment