குருவருள்‌ ஒன்றே கதி - 10

வேகாத பானை - 2

சின்னஞ்சிறு பெண் குழந்தை தனக்கு வைகுண்டம்‌ செல்லத் தகுதி இல்லை என்று சொல்லிவிட்டாளே என்று பொருமிக்கொண்டு மிகுந்த வருத்தத்துடன் பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்  நாமதேவர்.

இவர் வருவதைப் பார்த்துவிட்டு, பாண்டுரங்கன் ருக்மிணியின் பின்னால் ஒளிந்துகொண்டான். இவர் என்ன‌ கேட்கப் போகிறார் என்று அவனுக்குத் தெரியாதா?

விட்டலா விட்டலா..

வா நாமதேவா 
என்றாள் ருக்மிணி.

விட்டலன்‌ எங்கே?

இதோ என்‌ பின்னால்‌ என்று கண்ணைக் காட்டினாள் ருக்மிணி.

விட்டலா, என்னைப் பார்த்து ஏன்‌ 
ஒளியற? 

ஒன்னுமில்லையே, சும்மாதான்‌. சொல்லு நாமதேவா

நேத்திக்கு கோராகும்பார் வீட்டு‌ ஸத்சங்கத்திற்குப் போயிருந்தேன்.

ரொம்ப நல்ல விஷயம். நானும் அங்கதான் இருந்தேன்..
எல்லாரும் அருமையா பாடினாங்களே..ஆனா, எல்லார் பாடினதை விடவும் நீ பாடினதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது நாமதேவா..

நாமதேவருக்கு சற்று ஆறுதாலாய் இருந்தது.

நீ‌இப்படி சொல்ற.. ஆனா, அந்தச் சின்ன்ப்பொண்ணு, ஞானேஸ்வரர் தங்கச்சி, அந்த முக்தா என்ன சொல்றா தெரியுமா?

என்ன‌ சொன்னா? 

ஒன்றுமறியாதான்போல் கேட்டான் கள்ளக் கண்ணன்.

எனக்கு வைகுண்டம் வரத் தகுதியில்லைன்னு சொல்லிட்டா.. 

...

அவ  சொன்னா சொல்லிட்டுப்போறா. நீ சொல்லு விட்டலா.. எனக்கு வைகுண்டம் உண்டுதானே.. உன் சொல்தான் எனக்கு முக்கியம்..

சிறு குழந்தைபோல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு கேட்கும் நாமதேவரைப் பரிதாபமாகப் பார்த்தான் விட்டலன்.

என்ன பேசாம இருக்க? சொல்லு விட்டலா..

வந்து.. வந்து..

என்ன வந்து..போயி..

அவ சொன்னது நிஜம்தான் நாமதேவா.. 

தீயினாற்சுட்டதுபோல் துடித்துப் போனார் நாமதேவர்.

என்ன என்ன சொல்ற விட்டலா..
அஞ்சு வயசிலேர்ந்து நீ நான் கூப்பிடும்போதெ ல் லாம் என்னோட பேசற. நீயும் நானும் எவ்ளோ விளையாடிருக்கோம்? ஆனா, எனக்கு வைகுண்டம் கிடையாதா?

கோவப்படாத நாமதேவா..

ஏன் ஏன் ஏன் எனக்கு வைகுண்டம் இல்ல? அப்ப நீ என்னோடு பேசறதெல்லாம் என்ன?

அது வேற.. உன் முரட்டு பக்திக்கும் நான் பேசறதுக்கும்‌ சரியாப்போச்சு. 

தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டார் நாமதேவர்..
பிறகு சுதாரித்துக் கொண்டு, 

சரி, எனக்கு ஏன் வைகுண்டம் கிடையாது?

நீ குருமுகமா வரல.  சின்னக் குழந்தையான நீ முரட்டுத்தனமா அடம் பிடிச்ச. உன் கள்ளமில்லாத பிடிவாதமான பக்திக்காக உன் முன்னால் வந்தேன். நீ தினமும் பேசணும்னு கேட்ட.. உன்னோடு பேசறது எனக்கும் பிடிக்கும். அதனால் பேசறேன்.

அவ்ளோதானே.. குருமுகமா வரணுமா? 
இதை ஏன் நீ முன்னாடியே சொல்லல? நீயே எனக்கு குருவா இருந்து உபதேசம் பண்ணு.

நீ இப்பத்தான் கேட்ட. மேலும், நான் உன்னோட குரு இல்ல நாமதேவா..

எவ்வளவோ பேருக்கு குருவாய் இருந்து உபதேசம் பண்ணியிருக்கதானே. எனக்கு மட்டும் பண்ணமாட்டியா?  அதெல்லாம்‌ முடியாது. நான் வேற யார்கிட்டயும்‌ போகமாட்டேன்.

வீணா பிடிவாதம் பிடிக்காத நாமதேவா..

சரி, பிடிவாதம் பிடிக்கல. என் குரு யார்னாவது காமிச்சுக் குடு.

உன் குருவின் பெயர் விசோபா கேசர். அவரைத் தேடி அவரிடமிருந்து உபதேசம் வாங்கிக்கோ..

அவர் எங்க இருக்கார்..

அவர் எங்க வேணா இருப்பார். நீதான் தேடிக் கண்டுபிடிக்கணும்..

சரி, நீ எப்போதும் எனக்குத் துணையாய் இருக்கணும். சரியா? நான் என் குருவைத் தேடி உபதேசம் வாங்கிக்கொண்டு வரேன்..

குருவைத் தேடிப் புறப்பட்டார் நாமதேவர்..

நாமதேவர் அழைக்கும்போதெல்லாம்  ஓடிவந்து அவரோடு பேசுகிறான் விட்டலன். ஆனால், குருவைச் சரணடையாமல் வைகுண்டம் இல்லை என்று சொல்லிவிட்டான். என்றால், சாமான்யர்களான நமக்கு குருவருளைத் தவிர வேறு கதி ஏது?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37