கிரிதர கோபாலா.. (11)

மீராவின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே போக மருத்துவர் வரவழைக்கப்பட்டார். குழந்தை கஷ்டப்படுவதைப் பார்த்து தாத்தாவும் அழ,

அவளோ தாத்தா, அழாதீங்க. என் வியாதிக்கு இந்த வைத்தியமெல்லாம் பயன்படாது. இவருக்கு உள் மனத்தின் நோய் பற்றி தெரியாது. எப்படி மருந்து கொடுப்பார்?

உனக்கென்னம்மா கஷ்டம்?

தெரியாத மாதிரி கேக்கறீங்களே என்னால் கிரிதாரியை விட்டுட்டு ஒரு நிமிஷம்கூட இருக்கமுடியாது. நீங்க குறிச்சிருக்கற மணநாளில் நான் கிரிதாரியோடு சேர்ந்துவிடுவதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.

என்ன உளற்ற மீரா? நீ இப்படி பேசறதைக் கேட்கவா உன்னை கஷ்டப்பட்டு வளர்த்தேன்? எனக்கும் உன் விருப்பத்துக்கு மாறா நடக்க இஷ்டமில்லை. ஆனா, ராணாவுக்கு வாக்கு கொடுத்துட்டேனே. என்ன பண்றது? அவர் நம் மஹாராஜா. கல்யாண அழைப்பை அனுப்பிட்டு இப்ப மறுத்தா அவர் போருக்கு வருவாரோன்னு வேற பயமா இருக்கு.

என்ன சொல்வதென்று தெரியாமல் இருவரும் அமைதியாகி விட்டனர்.

மருத்துவர் மீராவின் கையைப் பிடித்து நாடி பார்க்கக்கூட அவள் அனுமதிக்கவில்லை. என்னை இன்னொருவர் தொடலாகாது என்று சொன்னாள்.

வேறு வழியின்றி அவர் கண்ணால் பார்த்து மருந்து கொடுத்து விட்டுப் போனார்.

மூர்க் பைத் மர்ம் நஹி ஜானே
என் நோயை இவர் எங்கனம் அறிவார்?

ஆர்க்கும் என் நோய் அறியவொண்ணாது என்ற ஆண்டாளின் வரிகளை ஒத்தது இப்பாடல்.

தோழிகள் மருந்தை எடுத்துக் கொடுக்க, அதை ஏற்க மறுத்த மீரா மெல்லிய குரலில் பாடலானாள்.

ஹை ரே! மை தோ ப்ரேம் திவானீ
மேரே தர்த் ந ஜானே கோயீ!

உன் மேல் பைத்தியமானேன் கண்ணா.. என் வேதனை யாருக்கிங்கே புரியும்?

சற்று நேரம் தூங்கேன் மீரா
,தோழி சொல்ல
அதற்கும் பாடினாள்

சூலீ ஊபர் சேஜ் ஹமாரி சோவன் கிஸ் பித் ஹொயீ

ஓ தோழி! முள்ளாலான படுக்கையில் படுத்து நிம்மதியாக உறங்குவதெப்படி?

க்ருஷ்ண விரஹத்தில் மீரா இதுபோல் ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறாள்.

அரசர் ராணா எப்படிப்பட்டவர்? ஏற்கனவே திருமணமான பெண்ணை, கிரிதாரியின் மனைவியை அவர் மறுமணம் செய்வாரா? அசோக வனத்தில் சீதை எப்படித் துடித்திருப்பாள் என்று இப்போதுதான் விளங்குகிறது. கண்ணா! இந்த வாழ்வு உனக்காக மட்டுமே! இதை நீயே எடுத்துக் கொண்டு விடேன்.

கிரிதாரியின் கழுத்திலிருந்த மாலை மின்னல்போல் ஒளிர்ந்தது. மீரா சட்டென எழுந்து உறுதியான நடையுடன் கிரிதாரியின் எதிரில் சென்றாள். தோழிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். கிரிதாரி கழுத்திலிருந்த மாலையிலிருந்து ஒரு வைரத்தை தட்டி எடுத்துப் பாலுடன் சேர்த்து விழுங்கினாள்.

நான் இப்போதே உன்னிடம் வந்துவிடுகிறேன். என்னை ஏற்றுக்கொள் என்று வேண்டினாள்.

வயிறு வலிக்கத் துவங்கியது. இதயத்தின் வலி அதைவிட அதிகமாக இருந்தது. மயங்கி விழுந்தாள்.

ஆயிரம் கோடி சூரியன்கள் ஒருங்கே உதித்தாற்போன்ற பிரகாசத்துடன் கிரிதாரி அவள் முன்னால் தோன்றினான்.

மஞ்சள் பட்டாடை, கழுத்தில் அசையும் வனமாலை, காதுகளில் மகர குண்டலம், கைகளில் கங்கணங்கள், கால்களில் நூபுரம் இசைக்க,‌ குழல் கொண்டு மனம் மயக்கும் இசையை வாசிக்கத் துவங்கினான்.
என்னை ஏற்கமாட்டாயா கண்ணா?

அழகாகப்‌ புன்னகைத்தான்.
மீரா! நீ கோலோகத்திலிருந்து எதற்காக புவிக்கு வந்தாய்? மறந்துவிட்டாயா?
நான் உன் இறைவன் என்பதை கணமும் மறவாதே. அதே சமயம், உலக வழக்கங்களிலிருந்து விடுபட முயற்சி செய்யாதே.

இந்த விளையாட்டு முழுவதும் என்னுடையது. சுவற்றில் நான் அடிக்கும் பந்து என் கைக்கேதான் வரும். பக்தியை உலகில் நிறுவ நடக்கும் லீலைகளில் நீ என் கருவி என்பதை மறவாதே. நடப்பவை அனைத்தையும் ஏற்றுக்கொள். எந்த ஒரு நிகழ்வும் என் மீதான உன் பக்தியை பாதிக்கப் போவதில்லை. மாறாக அவை பக்தியை வளர்க்கப் போகின்றன. ராணாவைத் திருமணம் செய்துகொள் என்று கூறிவிட்டு மறைந்தான் ஜகன்மோஹனன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37