கிரிதர கோபாலா.. (10)

ரகுநாத தாஸ் மஹாராணாவின் ராஜகுரு என்பதால், ராணா அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தான். மேலும் சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டிருந்த ராணா. ரகுநாத தாஸின் கண்காணிப்பில்தான் வளர்ந்தான். எனவே தந்தை ஸ்தானத்திலும் வைத்து மரியாதை‌ செய்வான்.

எனவே தன் மகன் போன்ற ராணாவிற்கு மீராவுடனான திருமணம் பெரிய ‌மன ஆறுதலைத்தரும் என்று எண்ணினார் அவர்.
ராணாவிடம் அவர் மீராவைப் பற்றிச் சொல்ல சொல்ல, அவனுக்கு உடனே மீராவைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

அவனது எண்ணத்தைப்‌ புரிந்துகொண்ட ரகுநாததாஸ் தூதாராவிற்கு மீராவை ராணாவிற்காகப் பெண் கேட்டு  ஓலை அனுப்பினார்.

மஹாராணா கும்பாருடன் மீராவிற்குத் திருமணமா? தூதாராவ் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார்.

தாயில்லாத பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கவேண்டுமே என்று அவர் கவலைப்படாத நாளே இல்லை, வேண்டாத தெய்வமே இல்லை. உடனேயே புரோஹிதரை அழைத்து திருமணத் தேதியை நிச்சயம் செய்தார். சம்மதம் சொல்லி, திருமணத் தேதியையும் குறிப்பிட்டு, அழைப்பு ஓலை  அனுப்பிவிட்டார். அரண்மனை முழுதும் குதூஹலம் பரவிற்று.

அங்கே ஒருவருக்கும் மீராவின் சம்மதம் கேட்கவோ, அவளது விருப்பம் அறியவோ, அல்லது அவளிடம் தெரிவிக்கவோ கூட நேரமில்லை. அதைப் பற்றியெல்லாம் அவர்கள்‌ நினைக்கக்கூட இல்லை.

தூதாராவ் மீராவிடம் கேட்டுவிட்டுச் செய்யலாம் என்று ஒரு வார்த்தை கூறியபோது, அவையிலிருந்த தூதாராவின் உறவினர்கள், சிறுபெண்ணான மீராவுக்கு என்ன தெரியும்? அவளை எதற்காகக் கேட்பது? இதைவிட நல்ல இடம் அமையுமா? மீரா மஹாராணி ஆகப்போகிறாள், இந்த வாய்ப்பை நழுவவிடலாமா? எவ்வளவு சீக்கிரம்‌ முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்தி விட வேண்டும். அடுத்த வாரமே முஹூர்த்த‌நாள் பாருங்கள் என்றெல்லாம் சொல்லி அவரை மாற்றிவிட்டனர்.

ஆனால், அந்தப்புரத்திலிருந்த தோழிகளுள் ஒருத்திக்கு செய்தி எட்ட, அவள் மூலம் தனக்கு கல்யாண ஏற்பாடு நடக்கிறது என்று அறிந்தாள் மீரா.
அனலில் இட்ட புழுவாய்த் துடித்தாள்.

அவளது ஆட்டம், பாட்டுக்கள், சந்தோஷம், தோட்டத்திற்குச் செல்வது, வீணை மீட்டுவது அனைத்தும் அன்றோடு நின்றுபோயின. கண்ணீரைத் தவிர வேறொன்றும் அறியாதவளானாள்.

தோழிகள் உள்பட யாருடனும் பேச மறுத்தாள். 
அவளைச் சமாதனப் படுத்துவது என்பது இயலாத காரியமாயிற்று. அழுது அழுது, விரஹத்தினால் படு மோசமாக இளைத்துப் போனாள். முகம் வெளிரிக் கிடந்தது.
கிரிதாரியின் சரணத்தில் கதறதுவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை.

க்ருஷ்ண கரோ யஜமான் ப்ரபோ தும்.
நீயே என் எஜமானனாக எப்போது இரு இறைவா
என் இதயம்‌ உன்னைத் தவிர வேறொருவரையும் ஏற்காது. நான் என்னதான் செய்வேன்? நீ மட்டுமே என் ஆதாரம். நீ ஏன் வேறு விதமாக நடந்துகொள்கிறாய்? நான் உன்னுடையவள் இல்லையா? என்னை ஏற்க மாட்டாயா?
எத்தனை எத்தனை புலம்பல்கள்? பாடல்கள்? 

அழுதழுது மிகவும் சக்தியற்றுப்போய் படுத்த படுக்கையானாள். கடுமையான ஜுரம் வந்துவிட்டது.

அவளது நிலைமை ஒரே நாளில் இவ்வளவு மோசமாகும்‌ என்று எவரும் நினைக்கவில்லை. தூதாராவ் உடனே சிகிச்சைக்காக மருத்துவரை அழைத்தார்.

#மஹாராண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

படம்: மீராவின் அரண்மனையின் அருகில் இருக்கும் சதுர்புஜநாத் மந்திர். மெர்டா சிடி, புஷ்கர், ராஜஸ்தான்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37