கிரிதர கோபாலா.. (9)
குழந்தை மீரா அழுகிறாள் என்று தாத்தாவிற்குச் செய்தி பறந்தது. மனம் பொறாமல் மீண்டும் மீராவைப் பார்க்க வந்தார்.
தாத்தாவைப் பார்த்ததும் மீரா அழுவதை நிறுத்திவிட்டாள்.
என்ன மீரா அழறயா?
இல்ல தாத்தா..
பொறந்ததிலேர்ந்து உன்னைப் பாக்கறேன், எனக்குத் தெரியாதா..
சொன்னாப் புரிஞ்சுக்கோ மீரா. இந்த கிரிதாரியே உனக்கேத்த மாப்பிள்ளையா அனுக்ரஹம் பண்ணுவார். நீ வருத்தப்படும்படி எதுவும் ஆகாது.
ஏன் தாத்தா நான் கிரிதாரியைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதா?
முடியாதும்மா..
சீதா, ருக்மிணியெல்லாம் பண்ணிண்டாங்களே?
அப்ப பகவான் பொறந்திருந்தார் மா. அவர் பூமியில் அவதாரம் பண்ணின சமயம் அது சாத்தியம், இப்ப அப்படி அவதாரம் இல்லையே.
தாத்தா நான் கிரிதாரியை என் கணவரா வரிச்சுட்டேன். இன்னொருத்தரை எப்படி கல்யாணம் பண்ணிக்கமுடியும்?
போதும் மீரா சொன்னாக் கேளு, அழக்கூடாது. நல்ல இடத்தில் க்ருஷ்ண பக்தனா, உன் பக்திக்குத் தடை சொல்லாதவனா பார்த்து கல்யாணம் பண்ணி வெக்கறேன்.
மனசை தயார் பண்ணிக்கோ..
தாத்தா போய்விட்டார்.
சிலைபோல் நின்றாள் மீரா.
மீராவின் மனம் மாறுவதற்காக நிறைய சாதுசங்கம் ஏற்பாடு செய்தார் தூதாராவ். சாதுக்கள் வந்து பஜனை, கதை என்று சத்சங்கம் செய்தால் மீரா சற்று அழாமல் அமைதியாக இருந்தாள். அதற்காகவே தூதாராவ் பார்த்துப் பார்த்து செய்தார்.
ஒரு நாள் சத்சங்கத்திற்கு ரகுநாத தாஸ் மஹாமாத்ரா என்பவர் வந்திருந்தார், அவர் பெரிய ஸாது. மேலும் மஹாராணா கும்பாருக்கு ராஜகுருவாக இருப்பவர். அவர் மீது ராணா மிகுந்த மரியாதை வைத்திருந்தான்.
மஹா ராணா கும்பார் பெரிய ரஜபுத்ர சமஸ்தானத்தின் அரசன். மஹாவீரனான அவனுக்குக் கீழ் நிறைய சிற்றரசுகள் இருந்தன. சித்தோடும் மஹாராணாவிற்குக் கீழ்தான் இருந்தது.
அவனுக்குப் பல மனைவிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உலகாயத விஷயங்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாக இருந்தனர். எனவே பக்தியுடைய ஒரு மனைவி வேண்டும். அவளுடன் கோவில் கோவிலாகச் சென்று யாத்திரை செல்லவேண்டும், பக்தி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான்.
அவனுக்கு ஆத்மலாபத்தை அடையும் முயற்சியில் துணையாக ஒருத்தி இருந்தால் நல்லது என்ற எண்ணம் வலுவடைந்தது. நிறைய போர்க்களங்களைச் சந்தித்திருந்ததால் வாழ்வு நிலையற்றது. அதற்குள் பக்தி செய்து முக்திக்கான வழியை அடையவேண்டும் என்றெண்ணினான்.
ஒருநாள் தன் ராஜ குருவான ரகுநாத தாஸிடம் தன் எண்ணத்தைச் சொன்னான்.
அந்தப்புரத்துக்குள்ள போனாலே நிம்மதியே இல்ல. ஒவ்வொரு மனைவியும் எவ்வளவு செய்தாலும் ஆசையாலும் பொறாமையாலும் நிறைய பிரச்சினை பண்றாங்க.
ஸ்வாமி விஷயம் பேசினாலே சன்யாசியான்னு கேலி பண்றாங்க. என்னைப் புரிஞ்சுண்டு பக்தி மார்கத்தில் தூண்டக்கூடிய ஒரு பெண் வேண்டும் என்றான்.
ரகுநாத தாஸ் ராணாவிடம், அத்தகைய பெண் கிடைப்பது மிகவும் கஷ்டம். தேடிப் பார்க்கலாம். என்று கூறிவிட்டார்.
இப்போது தூதாராவின் அரண்மனையில் மீராவைப் பார்த்ததும் அவருக்கு ராணாவின் நினைவு வந்தது. அமைதியே உருவான மீராவின் முகம் மனத்தை விட்டகலாமல் நின்றது.
அவளது பக்தி, ஆடல், பாடல், சாதுசேவை அனைத்தையும் கவனித்தார். மிகவும் மகிழ்ந்தார்.
தூதாராவிடம் மீராவின் திருமணம் பற்றிக் கேட்டார். க்ருஷ்ண பக்தனாக ஒரு வரன் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று தூதாராவ் சொன்னதும், ரகுநாததாஸுக்கு உடனே ராணாவிற்கு மீரா பொருத்தமாக இருப்பாள் என்று தோன்றியது.
தூதாராவிடம் ஒன்றும் சொல்லாமல் நிச்சயம் அவள்மனம் போல் வரன் கிடைப்பான் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். நேராக மஹாராணாவின் அரண்மனைக்குப் போனார் என்று சொல்லவும் வேண்டுமா?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment