கிரிதர கோபாலா.. (8)
மீராவும் கிரிதாரியும் தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். மீராவிற்கு இவ்வுலக நிகழ்வுகளுடனான தொடர்பு அறவே விட்டுப்போயிற்று.
தோட்டத்திலுள்ள மயில், குயில், கிளி மற்றும் சில தோழிகள் இவைகளே , அவளது உலகத்தில் இருந்தன. அவர்களை விளித்துப் பாடியும் ஆடியும் பேசியும் மகிழ்ந்தாள். எவ்வளவு அழகான உலகம் அது!
அவளது தூய்மையான அன்பைக் கண்டு பெரியவர்களாலும் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
என்ன இருந்தாலும் தாத்தாவிற்குக் கவலை விடுமா?
இந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்தால் என்ன செய்வாளோ என்ற கவலை அவர் மனத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது. ஒரு நாள் குழந்தையை அழைத்து,
மீரா, நீ சிறு குழந்தையில்லை, இப்படி பொம்மையோடு விளையாடிண்டிருக்கியே.
வெட்கத்தை விட்டு இப்படி ஆடிப் பாடுவாங்களா? ரஜபுத்ரப் பெண்கள் இவ்வாறு ஆடமாட்டாங்கம்மா என்றார்.
என்ன தாத்தா.. நான் உங்களுக்குக் குழந்தைதானே இல்லைன்னு சொல்றீங்க?
உன் வயதுப் பெண்களைப் பாரும்மா, அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயாச்சு. எவ்வளவு பொறுப்பா குடும்ப நிர்வாகம் பண்றாங்க பாத்தியா?
தாத்தா இதுவரை கல்யாணம் ஆகாத பெண்களுக்குத்தானே கல்யாணம் பண்ணமுடியும்?
ஆமாம்.
எனக்குத்தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சே.
அதிர்ந்துபோனார் தூதாராவ்.
என்ன உளற்ற மீரா? உனக்கெப்ப கல்யாணம் ஆச்சு? யார்கூட?
இந்த கிரிதாரிதான் என் மாப்பிள்ளை, கல்யாணம் பண்ணிண்டு தினமும் என்கூட ராஸம் பண்றான் தெரியுமா? நான் ஒன்னும் தனியா ஆடல. இந்த கிரிதாரியும் என்னோடு ஆடறான் தாத்தா.
முட்டாள் பெண்ணே,இதெல்லாம் கல்யாணம் இல்ல. இந்த உலகத்தில் இதையெல்லாம் ஒத்துக்கமாட்டாங்கம்மா.
தாத்தா நீங்களே எங்க ரெண்டு பேர்க்கும் இந்த உலக வழக்கப்படி கல்யாணம் பண்ணி வெச்சுடுங்களேன். அதிலென்ன கஷ்டம்?
மீரா! மீரா! உனக்கெப்படிப் புரிய வெக்கறது? கிரிதாரி வெறும் சிலை மா. விக்ரஹத்தோடு ஒரு பெண்ணை எப்படிக் கல்யாணம் பண்ணமுடியும்? நீ ஒரு மனுஷனைத் தான் கல்யாணம் பண்ணிக்க முடியும். தெய்வ விக்ரஹத்தை இல்லம்மா.
என்ன தாத்தா . இவ்வளவு முட்டாள்தனமா நீங்க பேசலாமா? இந்த கிரிதாரி விக்ரஹம் இல்ல,இவன் தெய்வம்னுதானே சாதுக்கள் பூஜை பண்ணினாங்க. அனுக்ரஹம் பண்றான்தானே. அபப்படின்னா காது கேட்கறது, வெறும் விக்ரஹமா இருந்தா காது கேட்குமா? எப்படி வேண்டுதலை நிறைவேத்தும்? அனுக்ரஹம் பண்ணக்கூடிய மூர்த்தி எப்டி விக்ரஹமாகும் தாத்தா? தேவைப்படும்போது மனுஷ ரூபமும், மற்ற நேரங்களில் விக்ரஹமாகவும் காட்சி தரக்கூட இவனுக்கு சக்தி இல்லையா என்ன? என்ன சொல்றீங்க,நீங்க பேசறது சரியில்ல
சற்று கோபமாகவே கூறினாள் மீரா.
மீரா! நீ இந்த உலக வழக்கங்களைப் புரிஞ்சுக்காத குழந்தை மாதிரி பேசற.
இப்ப என்னதான் சொல்ல வரீங்க தாத்தா?
நீ ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிண்டுதான் ஆகணும். பெண்களுக்கு திருமணம் செய்யாம விடுவது முறையில்ல, எல்லாரும் என்னைப் பழிப்பாங்க. தாயில்லாத குழந்தைன்னு கடைமையைச் செய்யலன்னு காது படப் பேசுவாங்க. இந்த வயசான காலத்தில் உன்னை பத்திரமா ஒருத்தன் கைல பிடிச்சுக் கொடுத்தாதான் நான் நிம்மதியா கண்ணை முடியும்.
நான் உனக்கு வரன் பார்க்கப்போறேன், நீ தடையேதும் சொல்லக்கூடாது. உன் மனம் கோணாம உன் விருப்பப்படி நடந்துக்கற பையனாப் பாக்கறேன். எதிர்த்து எதிர்த்துப் பேசாம கல்யாணம் பண்ணிக்கோ. அவ்ளோதான்.
சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் தூதாராவ் அங்கிருந்து சென்றுவிட்டார்.
மீராவின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத்துவங்கியது. அழுதுகொண்டே ஓடிச்சென்று கிரிதாரியின் சரணத்தில் விழுந்தாள்.
இவ்வளவு நேரம் இனிமையாகத் தோன்றிய தோட்டமும், பறவைகளும் கசந்தன. தோழிகள் அனைவரும் எதிரிகள்போல் தெரிந்தனர்.
இதென்ன கிரிதாரி இப்படிக் கைவிடுவியா நீ? த்ரௌபதி கதறினபோது உதவி செய்தியே? உன்னைக் கல்யாணம் செய்துண்ட எனக்கு இன்னொரு வரனா? எவ்வளவு பெரிய அவமானம்? ஒரு பெண் ரெண்டு பேரைக் கல்யாணம் பண்ணிக்கமுடியுமா? என்னைக் கைவிட்டுட்டியா?
அவளது புலம்பல் கேட்டு செய்வதறியாது விக்கித்து நின்றனர் தோழிகளும் செவிலித் தாய்களும்.
Comments
Post a Comment