கிரிதர கோபாலா.. (7)
தூதாராவின் அரண்மனைக்கு வந்திருந்த ஸாது, ஸந்த் ரயிதாஸ் என்பவர். கண்ணனின் லீலைகளையும், மீராவின் பக்தியையும் நன்கு புரிந்து கொண்டிருந்த அவர் கிரிதாரியை மீராவின் கைகளில் ஓப்படைத்ததால் குரு ஸ்தானத்தில் அமைகிறார்.
கிரிதாரி அவளது கைகளில் வந்ததிலிருந்து ஒருகணம் கூட அவனைப் பிரிந்தாளில்லை.
ஒரு நாள்
வாசலில் ஒரு திருமண ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது. அவர்கள் முறைப்படி குதிரை மீது மணமகனை அமரவைத்து, பல்வேறு வாத்யங்கள் இசைத்துக்கொண்டும், அனைவரும் நடனமாடிக்கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.
சத்தம்கேட்டு உப்பரிகைக்கு ஓடிவந்தாள் மீரா..
மீராவின் வளர்ப்புத்தாயும் இன்னும் சிலரும் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அம்மா அது என்ன?
அது கல்யாண ஊர்வலம் மீரா
கல்யாண ஊர்வலமா?அப்டின்னா?
குதிரை மேல உட்கார்ந்து போற பையனுக்கும் ஒரு பெண்ணுக்கும் கல்யாணம்.
பெண்ணுக்கா? அவளைக் காணோமே.
அவள் மண்டபத்தில் இருப்பாள்.
இவங்க ஏன் ஆடறாங்க.
அவங்க வீட்டுக் கல்யாணமில்லையா? சந்தோஷத்தில் ஆடறாங்க.
எல்லாப் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்குமா?
ஆமாம் மீரா.
எனக்குமா?
உனக்கும்தான் ..
உன் அழகுக்கு பெரிய ராஜகுமாரன் வருவான்.
யார் அவன்?
வருவான் மீரா..
எப்போ வருவான்?
உனக்கு கல்யாண வேளை வரும்போது வருவான்.
யார் அவன்? யாரோட எனக்குக் கல்யாணம் நடக்கும்?
திரும்ப திரும்பக் கேட்டாள் குழந்தை.
அன்னைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்ன சொல்லிக் குழந்தைக்குப் புரியவைப்பது, உனக்கு மாப்பிள்ளையைப் பார்க்க அவ்ளோ அவசரமா? உன் கையிலிருக்கும் கண்ணன்தான் மாப்பிள்ளை. பேசாமல் இரு. இப்படியெல்லாம் யாரையும் கேட்டுவைக்காதே, கேலி செய்வார்கள் என்றாள்.
உன் கையிலிருக்கும் கண்ணன்தான் மாப்பிள்ளை, அது போதும். அதற்கு மேல் மீராவின் காதில் ஒன்றும் விழவில்லை.
ஹை..
இந்த கிரிதாரியா..
என் மாப்பிள்ளையா..
அதற்குமேல் வெட்கம் வந்துவிட்டது.
சந்தோஷம் தாங்கவில்லை.
துள்ளிக் குதித்துக்கொண்டு உள்ளே ஓடினாள்..
கிடுகிடுவென்று தோட்டத்தில் மிக அழகாக ஒரு ஊஞ்சல் அமைத்தாள். கிரிதாரியை அதில் எழுந்தருளப் பண்ணினாள். தன்னை மறந்து பாடிக்கொண்டு ஆட ஆரம்பித்தாள்.
ஜூலத ராதா ஸங்க கிரிதர..
அவளது உலகம் வேறாக இருந்தது.
கண்ணனும் அவளுடன் ஆட ஆரம்பித்தான்.
மீரவைத் தவிர வேறொருவர்க்கும் புலப்படாமல் அங்கே அழகாக ஒரு ராஸநடனம் அரங்கேறியது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment