கிரிதர கோபாலா.. (6)

கிரிதாரியை மீராவின் கையிலிருந்து பிடிவாதமாக வாங்கினார் தூதாராவ். ஸாதுக்களுக்குப் பிழை ஏற்பட்டுவிடப்போகிறதே என்பது அவரது பயம்.

தெய்வம் தனக்குப் பிழை செய்பவரைப் பொறுக்கும். தன் அடியார்களுக்குச் செய்யும் பிழையைப் பொறுக்காது, சாபம் கூடக் கொடுக்க வேண்டாம். அவர்களது சிறிய அத்ருப்தியே பெரிய அளவில் கேடு விளைவிக்கும்.

ஆனால், ஸாதுக்களின் நிலை வேறாக இருந்தது.
அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர்...
இவ்வளவு காலமாகப் பூஜை செய்துவருகிறோம், இன்னும் இவனை உயிருள்ள மூர்த்தியாக எண்ணத் தெரியவில்லை. விக்ரஹம் விக்ரஹம் என்று எண்ணிப் பூஜை செய்தால் அவனும் விக்ரஹமாகவே இருந்து விடுகிறான்.

இந்தச் சின்னக் குழந்தையின் கள்ளமில்லாத அன்பு எங்களுக்கு எப்போது வருமோ..

காலையிலிருந்து கிரிதாரியைக் காணவில்லை என்றதும் எங்களுக்குக் கவலை ஏற்ப்பட்டது. விக்ரஹத்தை ஏதாவது எலி இழுத்துப் போட்டிருக்கும் என்றெல்லாம் தோன்றியது.

ஆனால், ஒரு குழந்தையைத் தொலைத்தாற்போன்ற துடிப்பு ஏற்படவில்லை, மூர்ச்சித்து விழவில்லை, நீங்கள் தவறாக எண்ணுவீர்கள் எனவே கிரிதாரி இல்லாமல் கிளம்பிவிடலாம் என்று கூட நினைத்தோம். எங்களுடைய பக்தி எங்கே? கண நேரம் பிரிந்ததும் மூர்ச்சையடைந்து விழும் இக்குழந்தையின் பக்தி எங்கே?

இவளைப்போல் பக்தி சித்திக்க இன்னும் எங்களுக்கு எத்தனை பிறவியாகுமோ?
மேனி சிலிர்ப்பது, புளக்காங்கிதமடைவது, இறைவனைத் தவிர வேறெந்த விஷயத்தையும் யோசிக்காமல் இருப்பது, யாராவது வேறு விஷயம்‌ பேசினாலும் கூட அதை இறை விஷயமாக மாற்றுவது,  இடம் பொருள் ஏவல் என்று தயங்காமல், எல்லா இடங்களிலும் இறை ஒருவனையே கண்டு, எப்போதும் வெட்கத்தைவிட்டு  இறையின் பெயரைப் பாடி ஆடுவது, பூஜை செய்யும் மூர்த்தி பூரண ஸாந்நித்யத்துடன் அருள் செய்வதை உணர்வது ஆகியவை பக்தியின் மேம்பட்ட நிலை. பக்தியின் எல்லா லக்ஷணங்களும் இச்சிறு குழந்தையிடம் வெளிப்படுகின்றன.

இவளுடன் இந்த கிரிதாரி பேசி விளையாட ஆரம்பித்து விட்டான். இந்நிலையில் இவனை நாங்கள் தூக்கிக்கொண்டுபோனால் கிரிதாரிக்கே அது உகப்பாக இருக்காது.

இவன் இவளுக்காகத்தான் இங்கு எழுந்தருளினான் போலும். மீராவிடமிருந்து கிரிதாரியைப் பிரிக்கவேண்டாம். இத்தகைய பக்தி எங்களுக்கும் சித்திக்க கிரிதாரி அருள் புரியட்டும்.
என்று சொன்னார்.

தூதாராவிடமிருந்து கிரிதாரியை வாங்கித் தலைமேல் வைத்து வணங்கினார். பின்னர் மூர்ச்சையடைந்து விழுந்திருக்கும் மீராவின் அருகில் சென்று அவளைத் தூக்கி, அவள் மடியில் கிரிதாரியை வைத்தார். 
குழந்தே, கிரிதாரி உன்னை விட்டு எங்கயும் போகல. இதோ இருக்கான் பார் என்றார்.
மீராவிற்கு உணர்வு வந்தது.

மடியில் கிரிதாரியைப் பார்த்ததும் சந்தோஷத்தில் கட்டிக்கொண்டாள். சுற்றியிருந்த எவரையும் லட்சியம் செய்யவில்லை. கிரிதாரியைத் 
தூக்கிக்கொண்டு அந்தப்புறத்திற்கு சிட்டாட்டம் பறந்துவிட்டாள்.

தூதாராவ் விக்கித்துப்போய் நின்றுவிட்டார்.
அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

பக்தி என்றால் ஏதோ கோவிலுக்குப் போவார்கள், சங்கல்பத்திற்கு ஸ்வாமியின் ஸஹஸ்ரநாமத்தைவிட நீளமாக பெயர், நட்சத்திரம், மற்றும் கோத்ர வரிசைகளைச் சொல்வார்கள், அர்ச்சனை செய்வார்கள். இரண்டு வெற்றிலை, பாக்கு, பழம்,  ஒரு தேங்காய், பத்து ரூபாய் பணம் இவற்றிற்கு அந்த இறைவன் அவர்களுக்கு வாழ்நாளுக்கான மித்த சௌகர்யங்களையும் அருளிவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

மற்றபடி அந்த ஸ்வாமி ஆணா, பெண்ணா, அவரது திருநாமம் என்ன, தாயார் பெயர் என்ன? ஸ்தல வரலாறு, பரிவார தேவதைகள், கோவிலின் சிறப்பு, இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் இருக்காது. அதுகூடப் பரவாயில்லை. அந்த ஸ்வாமி நின்ற கோலமா, அமர்ந்த கோலமா, கையை எப்படி வைத்திருக்கிறார், அபய ஹஸ்தமா, வரத ஹஸ்தமா, என்னென்ன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் குறைந்தபட்சம் கோவிலுக்குப்போன அன்றாவது  என்ன நிறத்தில் வஸ்திரம் சாற்றிக்கொண்டிருந்தார் என்பதுகூடத் தெரியாது.

அவருக்கு மாலை இருக்கிறதோ இல்லையோ, அர்ச்சகர் இவர்கள்  கழுத்தில் ஸ்வாமி பிரசாதமாக மாலை போட்டு விட வேண்டும். அந்த ஸ்வாமிக்குக் குறையில்லாமல் நைவேத்யங்கள் நடக்கிறதோ இல்லையோ, வேண்டுபவருக்கு வாழ்நாள் முழுதும்  உணவிற்கு பிரச்சைனை வரக்கூடாது. கோவில் பாழடைந்திருக்கிறதா, ஒட்டடை இருக்கிறதா, கோபுரத்தில் மரம் வளர்ந்திருக்கிறதா கவலையே இல்லை. நாம் வீடு வாசலுடன் சௌக்கியமாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

ஸ்வாமியின் வஸ்திரத்தில் எண்ணெய்க்கறை, கிழிசல் எது இருந்தாலும் நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால், சேவார்த்திக்குப்  புத்தாடைகள் குறைவின்றிக் கிடைக்கவேண்டும். அவருக்கு வாகனம் இருக்கிறதா, உற்சவாதிகள் நடக்கிறதா.. தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமே இல்லை, நம் வீட்டு வாசலில் நான்கு மகிழுந்துகள் வேண்டும் என்ற எண்ணப்போக்கு.
  
கோவிலில் வேண்டிக்கொண்டு வந்த  பிறகு இறைவன் ஏதோ வேறுலகத்தில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு, அவன் தங்களை எப்போதும் கவனித்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வுகூட இல்லாமல் தவறுகளைச் செய்வார்கள். கஷ்டம் வந்தால் மட்டும் மீண்டும் கோவிலுக்கு ஓடிவந்து, இறைவா உனக்குக் கண்ணில்லையா, எனக்குக் கஷ்டம் வந்துவிட்டதே என்று புலம்புவார்கள்.

இப்படியெல்லாம் இருக்கும் பக்தியைத்தான் உலகத்தில் பார்க்கிறோம். அது புரியும்,
உலக வழக்கிற்கு மேலான ஒரு பக்தி, இறைவனை நேரில் பேசச்செய்யும் பக்தி எப்படிப் புரியும்? நமது தமிழ்நாட்டில் ஆண்டாளும் இவ்வாறுதான் தவித்தாள், பெரிய பக்தரான பெரியாழ்வாருக்கே ஆண்டாளின் நிலை புரியவில்லை...அவள் பெருமாளின் மாலையைச்  சூட்டிக்கொண்டதும் அவள் தவறு செய்ததாக எண்ணித் துடித்தார் என்றால் சாமான்யர்களுக்கு எப்படிப் புரியும்?

தூதாராவிற்குக் கவலை அதிகரித்தது, அந்தக் காலத்தில் பத்து வயதிற்குள் திருமணம் செய்து விடுவார்கள், எனவே மீராவிற்கு ஒரு திருமணம் செய்துவிடலாம், குடும்பம் பொறுப்பு என்று வந்துவிட்டால் சரியாகிவிடும். இப்படி பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடமாட்டாள் என்று நினைத்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37