கிரிதர கோபாலா.. (5)

வெகு நேரம் கிரிதாரியின் ஸந்நிதியிலேயே அமர்ந்திருந்த மீராவை அன்னை வந்து அழைத்துப்போனார், உறக்கம் வருமா குழந்தைக்கு?

மறுநாள் பொழுது விடிந்தது. காலையில் கிரிதாரிக்கு பள்ளியெழுச்சி பாடத் துவங்கினர் ஸாதுக்கள்.
மீரா இன்னும் வரலியே.. அவர்களது கண்கள் தேடியபோதும், ஸ்வாமி ஆராதனத்தைக் காக்க வைக்க இயலாதே. பாடல்களைப் பாடி திரையைத் திறந்தால் அங்கே..
கிரிதாரி இல்லை.

தூக்கிவாரிப் போட்டது அனைவர்க்கும்.

ஸ்வாமி எங்கே?
ஸ்வாமி எங்கே?
ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். விக்ரஹத்தைக் காணோமே.. எங்கே போயிருக்கும்?
நான் ராத்ரி டோலோற்சவம் பண்ணித் திரை போடும்போது இருந்ததே.

அந்த அறை முழுவதும் தேடினார்கள். எலி ஏதாவது இழுத்துப் போட்டிருக்கலாமோ என்றெண்ணினர்.

தூதாராவிடம் சொல்லத் தயக்கமாக இருந்ததது.. நான்கு மாதங்களாக அப்படித் தாங்கினார், இன்று கிளம்பும் சமயம் காணவில்லை என்று சொன்னால் மனம் வருந்துவார். ஏதாவது கடுமையான சோதனை, தண்டனை என்றெல்லாம் உத்தரவிட்டால் எல்லாருக்கும் கஷ்டம். நாம் வந்தவழியே கிளம்பலாம் என்று முடிவெடுத்தனர்.

அப்போது தூதாராவ் அங்கு வந்தார்.

என்னாச்சு? உங்கள் எல்லார் முகமும் ஏன் வாடியிருக்கு?

பேசாமல் இருந்தனர் அனைவரும். தூதாராவ் மீண்டும் மீண்டும் கேட்டபோது, ஒரு வழியாக ஸ்வாமியைக் காணவில்லை என்று சொல்லவேண்டியதாயிற்று.

தூதாராவ் உடனே கேட்டார்.

மீரா எங்கே?

மீரா இங்கே வரவே இல்லையே.

அப்படியா?

நீங்கள் எங்கள் இடத்திற்கு வந்துவிட்டு மன வருத்தத்தோடு செல்லக்கூடாது,  சற்று பொறுங்கள். உங்கள் ஸ்வாமியைத் தேடிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். எங்கள் இடத்திற்கு வந்து தங்களுக்கு இப்படி மனவருத்தமாகிவிட்டது என்று சொல்லி சமாதானப் படுத்தினார்.

உடனே ஆள்களை அனுப்பி மீரா எங்கிருக்கிறாள் என்று பார்க்கச் சொன்னார்.

மீரா அந்தப் புரத்தில் இல்லை என்று பதில் வந்தது.

மீராவை எல்லா இடங்களிலும் தேடப் போக, அந்தப்புரத் தோட்டத்தில் அவர்கள் கண்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

அழகாக லவங்கக் கொடிகளால் ஆன ஒரு ஊஞ்சல் போட்டு, மலர்களால்‌ அலங்கரித்து, அதில் கிரிதாரியை எழுந்தருளப் பண்ணி

நான்கு தோழிப் பெண்களுடன் அவ்வூஞ்சலைச் சுற்றி சுற்றி வந்து மீரா தானே பாடி ஆடிக் கொண்டிருந்தாள்.

மன மோஹன முரளீ கான லோல ஸ்ரீ கிரிதர கோபாலா...

அவளது கானம் தேன்மதுர இசையாய் ஒலிக்க, அங்கே குழுமிய அனைவரும் அக்காட்சியில் ஒன்றிப்போய் சிலையாகிப்போனார்கள்.

எவ்வளவு நேரம் ஓடிற்றோ தெரியாது.
பாடல் முடிந்ததும் தான் அனைவர்க்கும் பிரக்ஞை வந்தது.

தூதாராவிற்கு மீராவின் பக்தியைப் பார்த்து சந்தோஷமாக இருந்தபோதும், மறுபுறம் மிகுந்த கோபம் வந்தது.

மீரா நீ செய்தது தவறு. இப்படிப் பண்ணக்கூடாது.

என்ன தாத்தா..

இப்படி யாருக்கும் தெரியாமல் ஸ்வாமியைத் தூக்கிக்கொண்டு வரக்கூடாது. இது ஸாதுக்கள் பூஜை பண்ணும் விக்ரஹம்,  அவர்களிடம் கொடுத்து விடு.

தாத்தா, இவன் விக்ரஹம் இல்லை. இவனுக்கு உயிர் இருக்கு, இவன் என்னைப் பார்த்து சிரிக்கறான், கண் சிமிட்டறான், பேசவும் செய்யறான். இவனேதான்‌ என்னை வந்து அழைச்சுண்டுபோன்னு சொன்னான் , அதான் இங்க கூட்டிண்டு வந்தேன்.
போதும் மீரா. அம்மா அப்பா இல்லாத குழந்தைன்னு ரொம்ப செல்லம் கொடுத்துட்டேன். அவங்கல்லாம் எப்படி வருத்தப்படறாங்க பார்?

ஸாதுக்களிடம் திரும்பி,

நீங்கள் எனக்காக இவளை மன்னித்து விடுங்கள், குழந்தை தெரியாமல் செய்துவிட்டாள்.
இப்போது உங்கள் பூஜா மூர்த்தியை நீங்கள்‌ எடுத்துக்கொண்டு போகலாம். தயவு செய்து எங்கள் எல்லாரையும் மன்னிக்கவேண்டும்.

தாத்தா கிரிதாரியை விட்டு என்னால் இருக்கமுடியாது, நான் தரமாட்டேன்.

மீரா, இவரைப் பூஜிக்க முறைகள்‌ உண்டு, நீ உன் இஷ்டப்படி தூக்கிக்கொண்டுவந்து இப்படியெல்லாம் செய்தா அபசாரமாயிடும். ஸ்வாமியெல்லாம் தொடக்கூடாது, நீ குழந்தை. உனக்கொன்னும் தெரியாது. தாத்தா சொல்றேன், பேசாம விக்ரஹத்தை எடுத்து அவங்ககிட்ட கொடு.

தாத்தா இவன் விக்ரஹம்‌ இல்லை. இவன் என் ஸ்வாமி, நான் தர முடியாது என்று ஓடிச்சென்று கிரிதாரியைக் கட்டிக்கொண்டாள்.

தூதாராவின் கோபம்‌ தலைக்கேறியது.

மீரா.. நீ திரும்ப திரும்ப தப்பு பண்ற. என்று சொல்லிக்கொண்டு மீராவின் கைகளிலிருந்து கிரிதாரியைப் பிடுங்கினார்.

கிரிதாரீ..

அலறினாள் மீரா.
அவ்வளவுதான் மூர்ச்சையாகி விழுந்தாள்.

படம்: தூதாராவின் அரண்மனையில் மீரா கண்ணனை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்த இடம்.
மெர்டா சிடி, ராஜஸ்தான்

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37