கிரிதர கோபாலா.. (4)
நாள் முழுவதும் கிரிதாரியின் ஸந்நிதியில் மாலை கட்டுவதும், பாடல்கள் பாடுவதும், ஆடுவதும், கதை கேட்பதுமாகக் கழிந்துகொண்டிருந்தது மீராவிற்கு.
அதிகாலை கிளம்பி அவன் ஸந்நிதிக்குள் வந்தால் இரவு டோலோற்சவம் ஆகி, அவன் பள்ளியறைக்கு எழுந்தருளித் திரை போடும் வரை அங்கேயே பழியாய்க் கிடந்தாள்.
காலம் நிற்குமா? நாள்கள் ஓடின. திரும்பிப் பார்ப்பதற்குள் நான்கு மாதங்கள் ஓடிவிட்டன.
ஒரு நாள் வந்திருந்த ஸாதுக்களுள் ஒருவர் தூதாராவிடம் சென்று,
மஹராஜ்! நாங்கள் வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன, சாதுர்மாஸ்ய விரதம் இன்றோடு முடிகிறது. நாங்கள் அதற்கு மேல் ஒரே இடத்தில் தங்கலாகாது, நாளைக் காலை புறப்படலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
தாங்கள் எங்கள் அனைவரையும் ஒரு குறைவும் வராமல் மிக நன்றாகப் பார்த்துக்கொண்டீர்கள். சாது சேவையில் தங்களுக்கிருக்கும் ஆர்வம் போற்றத்தக்கது. தங்கள்பேத்தி மீரா இவ்வளவு இளம் வயதிலேயே சாது சேவையிலும், பகவத் பக்தியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறாள், எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் இறைவன் சௌக்கியமாக வைக்கட்டும் என்று கூறினார்.
இதைக் கேட்டுக்கொண்டே இருந்த மீராவிற்கு இதயத்தில் இடி விழுந்ததுபோலாயிற்று.
அந்த ஸாதுவை வணங்கி, அவர்கள் புறப்பட ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார் தூதாராவ்.
எல்லாரும் சென்றதும் மீரா தாத்தாவைப் பிடித்துக்கொண்டாள்.
அவங்கல்லாம் கிளம்பப் போறாங்களா தாத்தா?
ஆமாம் மீரா.
ஏன் தாத்தா?
எவ்ளோ நாளைக்கு இங்கயே இருப்பாங்க?
ஏன்? இருக்கக்கூடாதா? எதுக்குப் போகணும்? இங்க என்ன குறைவு? என்னைப் பிடிக்கலையா? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டனா? வேற ஏதாவது பிரச்சினையா? அவங்களுக்கு வேணுங்கறதைப் பண்ணிக் குடுக்கலையா?
அதெல்லாம் இல்லம்மா மீரா..
அவங்க தொடர்ந்து மூணு நாளைக்கு மேல் ஒரு இடத்தில் தங்கமாட்டாங்க. சாதுர்மாஸ்ய விரதம்னு நாலு மாசம் ஒரே இடத்தில் தங்கி சாதனைகளைச் செய்வாங்க. இந்த நாலு மாசமும் மழையும் குளிருமா இருக்கற மாசம். மழை நாளில் வெளில அலைஞ்சா பூமியில் இருக்கற புழுபூச்சியெல்லாம் கால்ல மிதிபடும். மேலும், இவங்கலாம் பிக்ஷை எடுத்துதான் சாப்பிடணும், மழை நாளில் அவங்களுக்கு சரியா பிக்ஷையும் கிடைக்காது.
வருஷம் முழுக்க அலைஞ்சிண்டிருந்தா எப்ப ஜபம் தபஸ் எல்லாம் பண்றது? தபஸ்தான் அவங்களோட பலம். சாதுக்கள் எல்லாரும் இதயத்தில் பகவானை வெச்சுப் பூஜை பண்றதால் அவங்களை நடமாடற கோவில்னே சொல்லலாம்.
இவங்க நெடுக சஞ்சாரம் பண்றதால், இவங்களை தரிசனம் பண்றவங்க எல்லார்க்கும் பகவான் இவங்க மூலமா அனுக்ரஹம் பண்ணுவான். இந்த நாலு மாசமும் ஒரே இடத்தில் தங்கி சாதனைகள், ஜபம் எல்லாம் நிறைய பண்ணுவாங்க.
அப்பதான் மத்த நாளில் அவங்களால் ஜனங்களுக்கு அனுக்ரஹம் பண்ணமுடியும், அவங்களோட நியமம்மா அது. மறுபடி வரணும்னு வேண்டிக் கேட்டுக்கலாமே ஒழிய தடுக்க முடியாது. நீ போய் அவங்களை எல்லாம் நமஸ்காரம் பண்ணு. அவங்களோட ஆசீர்வாதம் உன்னை எப்பவும் சௌக்யமா வைக்கும்.
தாத்தா.. அவங்க போகும்போது கிரிதாரியையும் அழைச்சிண்டு போயிடுவாங்களா?
தூதாராவிற்கு மீராவின் கவலை புரிந்தது.
ஆமாம் கண்ணம்மா. அவங்க பூஜை பண்ற ஸ்வாமி கிரிதாரி அவரை எப்படி விட்டுட்டுப் போவாங்க? தெய்வத்தை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டாங்கம்மா. அவங்க அப்றம் மறுநாள்ளேர்ந்து யாரை பூஜை பண்ணுவாங்க?
தாத்தா.. அவங்களை கிரிதாரியை இங்கயே விட்டுட்டுப்போக சொல்லுங்க. வேணும்னா வேற மூர்த்தி பண்ணிக் கொடுத்துடுங்க. அவங்க அந்த ஸ்வாமியைப் பூஜை பண்ணட்டும்.
அதெல்லாம் நடக்காது மீரா. இப்படிக் கேக்கறதே தப்பு, நீ போய்த் தூங்கு. நேரமாச்சு. காலைல சீக்கிரமே கிளம்பிடுவாங்க. நாம எழுந்து அவங்களை வழியனுப்பணும். நிறைய வேலை இருக்கு, உள்ள போ.
அதற்கு மேல் தாத்தாவிடம் பேசமுடியவில்லை.
நொறுங்கிப் போனாள் மீரா. கிரிதாரி தன்னைவிட்டுப் போய்விடுவான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.
நேராக கிரிதாரியின் ஸந்நிதிக்குச் சென்றாள்.
அங்கே டோலோற்சவம் நடந்து கொண்டிருந்தது.
விழிநீர் திரையிட கண்ணனைப் பார்க்கவே முடியவில்லை அவளால்.
என்னை விட்டுப் போகப் போறயா?
என்று திரும்பத் திரும்ப மானசீகமாகக் கேட்டுக்கொண்டே இருந்தாள்.
அவனோ மீராவைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிச் சிரித்தான்.
டோலோற்சவம் முடிந்து திரையிடப்பட்டது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment