கிரிதர கோபாலா.. (3)


கிரிதாரி வந்ததிலிருந்து மீராவிற்குத் தன் அறையில் இருப்பே கொள்ளவில்லை. நாளின் பெரும்பகுதியை கண்ணனின் ஸந்நிதியிலேயே கழித்தாள்.

அதிகாலை எழுந்து குளித்துவிட்டு உடை உடுக்கும்போதே தன்னை வளர்த்த அன்னையிடம் ஆரம்பிப்பாள்.
அம்மா, இந்த நீலப் பாவாடை போட்டுக்கவா? மஞ்சளா?

உனக்கு எது பிடிக்குதோ அதைப் போட்டுக்கயேன் மீரா.

அதில்லமா, இன்னிக்கு கிரிதாரி குளிச்சப்றம் எந்த நிறத்தில் உடை போட்டுப்பான்?

எனக்கெப்படித் தெரியும் செல்லம்?

சரி, நான் இந்த நீலப் பாவாடை போட்டுக்கறேன். கிரிதாரியும் இதே நிறத்தில் போட்டுக்கறானான்னு பாக்கலாம்.

இப்படியாக, காலை எழுந்தது முதல் மீராவின் பேச்சு, செயல்கள்‌ அனைத்தும் கிரிதாரியைச் சுற்றியே அமைந்தன.

தோட்டத்தில் இருக்கும் பூக்களைத் தானே பறித்துக்கொண்டு கிரிதாரியைப் பார்க்க ஓடுவாள்.

அங்கே ஸாதுக்கள்
கிரிதாரிக்குப் பிரபோதனம் (பள்ளியெழுச்சி) பாடும்பொது மீராவும் சேர்ந்துகொள்வாள். அவளது இனிமையான குரலைக் கேட்டு, ஸாதுக்கள் குழந்தையே பாடட்டும் என்று மெதுவாக வாய்க்குள் பாடிக்கொள்வார்கள்.

திரை எப்போது திறக்கும் என்று மீராவிற்கு ஒரே பரபரப்பாக இருக்கும். திரை திறந்ததும் பார்த்தால் ஆச்சரியமாக கிரிதாரியின் உடையும் மிராவின் உடையும் ஒரே நிறத்திலேயே இருக்கும். கண்ணனுக்குத் தெரியாதா குட்டி மீராவின் மனநிலை.

கிரிதாரி ஒரு விக்ரஹமாக மீராவின் கண்களுக்குத் தெரியவே இல்லை. உயிரோட்டம் நிரம்பிய வடிவமாகவே தெரிந்தான். எப்போதும் மீரா கிரிதாரியுடன் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள்.

பால் சாப்டியா?

கிரிதாரி சொல்லும் பதில் அவளுக்கு மட்டுமே புரியும்.

என்ன? பால் இனிக்கலியா?
இரு. கேக்கறேன்.

தாத்தா, பால்ல சர்க்கரை போடலியா?

அடடா, மறந்துட்டேனே.. ஆனா பிரசாதப் பால் இனிக்கறதே. எப்படி?

வாங்கிக் குடித்தால் நிஜமாகவே இனிக்கும்.

ம்ம்.. ஆமா.. எப்படி? குழந்தை குழம்புவாள். கிரிதாரியின் குறும்புச் சிரிப்பு அவளுக்குப் புரியாதா?

தாத்தா, இது கிரிதாரி சாப்பிட்ட பால். அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே மதுரமா ஆயிடுமில்லையா.. அதனால இனிக்கறது. நாளைலேர்ந்து நானே பால் காய்ச்சி எடுத்துண்டுவரேன். என்றதும் கிரிதாரி அவளைப் பார்த்து ரகசியமாய்ப் புன்னகைப்பான்.

எத்தகைய அழகான 'பா'வலோக சஞ்சாரம். சாமான்யர்களுக்குப் புரியுமா என்ன? ஆனால், மீராவுடனான கிரிதாரியின் சம்பாஷணைகள் எதுவும் அவளது ப்ரமையோ, கற்பனையோ அல்ல. அத்தனையும் ஸத்யம்.

மீரா தன் குட்டிக் கரங்களால் தானே அழகான மாலை தொடுத்து கிரிதாரிக்கு சமர்ப்பணம் செய்வாள்.

அவ்வப்போது கிரிதாரியின் மீது மிக அழகான பாடல்களைத் தானே இயற்றிப் பாடுவாள். அந்தப் பாடலுக்கேற்றபடி அபிநயம் செய்து ஆடவும் செய்வாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37