கிரிதர கோபாலா..(2)

தாய் தந்தை இல்லாத குறையே தெரியாமல் மீராவை  மிகவும் செல்லமாக வளர்த்தார் தூதாராவ். அரசாங்க காரியங்கள் போக மீதி நேரம் முழுவதும் குழந்தையுடனேயே செலவழித்தார்.

அவளுக்கு நிறைய கண்ணன் கதைகளையும், ஸாதுக்களின் கதைகளையும் சொல்வார். குழந்தைக்குத் தாத்தாவிடம் கதை கேட்பதென்றால் கொள்ளை ஆசை.

விழி விரியக் கேட்டுக் கொண்டிருப்பாள் குட்டி‌மீரா. 
ராஜபுத்ரப் பெண்கள் பொதுவாக அந்தப்புரத்தைத் தாண்டுவதில்லை. அவளுக்காக அரண்மனையிலேயே நிறைய ஸத்சங்கங்களை ஏற்பாடு செய்தார் தூதாராவ்.

அரண்மனையில் எப்போதும் கதை, பஜனை என்று ஏதாவது நடந்துகொண்டே இருந்தது.
ஸத்சங்கமே ஒரு ஜீவனை இறைவனுக்கு மிக அருகில் கொண்டு சேர்க்கிறது. அதிலும் இறைவனைப் பற்றிய கதைகளைக் கேட்பது முதல் படி. அதுவே கடைசிப் படியும்கூட.

ஏனெனில் ஒரு விஷயத்தைப் பற்றி அறியவேண்டுமானால் அதைப் பற்றிக்  கேட்கவேண்டும். வீட்டிற்கு ஒரு பொருள் வாங்குவதானால் கூட அதைப் பற்றிக் கேட்டு, பலரிடம் விசாரித்து அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து பின்னர்தானே வாங்குவதற்கு முடிவு செய்து கடைக்குச் செல்கிறோம்?

கண்ணுக்குத் தெரியும் லௌகீகமான பொருள்களுக்கே இப்படி என்றால் கண்ணுக்குப் புலப்படாத  இறைவனை எப்படி அடைய முடியும்? அவரைப் பற்றிய கதைகளைக் கேட்டு கேட்டு அவரது குணநலன்களையும், வடிவழகையும் ஓரளவு அனுமானம் செய்யலாம். அவ்வாறு கதை கேட்பது இறைவனை அடையும் ஆர்வத்தைத் தூண்டிவிடும்.

பிரஹலாதன் நவவித பக்தி சாதனங்களைச் சொல்லும்போது, முதல் சாதனமாக ச்ரவணம், அதாவது பகவத் கதைகளைக் கேட்டல் என்கிறான்.

எந்த மஹானின் வாழ்வை நோக்கினாலும் அவர் சிறுவயதில் இறைவனைப் பற்றிய ஏராளமான கதைகளைக் கேட்டார் என்பதைப் பார்க்கலாம். பரீக்ஷித் என்ற அரசன் கதை கேட்டு முக்தி அடைந்துவிட்டான், ஏனெனில் கதை முடிந்தபின் வேறெந்த சாதனையும் செய்வதற்கு அவனுக்கு நேரமில்லாமல் போயிற்று.

ஒருவனின் காது வழியாக நுழைந்துதான் இறைவன் ஒருவனின் உள்ளத்தில் குடியேறுகிறான்.

ஒரு சமயம், சித்தோடுக்கு நிறைய ஸாதுக்கள் கூட்டமாக வந்தனர். அவர்கள் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கப் போவதாகவும், நான்கு மாதங்கள் அவ்வூரில் தங்க விழைவதாகவும் தூதாராவிடம் கூறினர்.

சாதுக்கள் தம்மைத் தேடி வந்ததும், இறைவனே வந்ததாக மகிழ்ந்தார். அரண்மனையிலேயே அவர்கள் தங்குவதற்கு  ஏற்பாடுகள் செய்தார்.

குழந்தை மீராவின் குஷிக்கு எல்லையே இல்லை. எப்போதும்‌ உற்சாகமாக இருப்பவள், இப்போது துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தாள். காரணம், அந்த சாதுக்களோடு வந்திருந்த கண்ணன்.

இதுநாள் வரை எத்தனையோ கண்ணன் கதைகளைக் கேட்டு மனதிற்குள் அவன் எப்படி இருப்பான் என்று ஒரு வடிவத்தைக் கற்பனை செய்துவைத்திருந்தாள். இப்போது வந்திருந்த கண்ணன் அவளது கற்பனையில் கண்ட அதே வடிவில் இருந்தான். 

கண்ணனை அழைத்துக்கொண்டு வந்திருந்த மூத்த ஸாதுவிடம் போய் தைரியமாகக் கேட்டாள்.

தாத்தா, இந்த ஸ்வாமி பேரென்ன?
மீராவின் அழகும், தேஜஸும் அவளை தெய்வீகக் குழந்தை என்று பறை சாற்றின.

அவர் சிரித்துக்கொண்டே  சொன்னார், இவர் பெயர் கிரிதாரி. உனக்கு இவரைப் பிடிச்சிருக்கா குழந்தை?

ஓ.. ரொம்ம்ம்ம்ப..

அது முதல்
கிரிதாரி கிரிதாரி கிரிதாரி
இதுவே அவளின் தாரக மந்திரமாயிற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37