மதுரா நாயகா.. (40)
அசுரர்களை யெல்லாம் ஒரே அடியில் மரணிக்க வைத்து, அவர்களுக்கு ஸாயுஜ்யம், சாரூப்யம் போன்ற முக்தியைக் கொடுக்கும் கண்ணன், முசுகுந்தரைப் பார்த்து, தவம் செய்து பாவங்களைப் போக்கிக்கொண்டு அடுத்த பிறவியில் அந்தணனாகப் பிறந்து என்னையே தியானம் செய்து முக்தி அடையலாம் என்று கூறிவிட்டான்.
என்ன ஒரு பாரபட்சம் என்று தோன்றுகிறதல்லவா?
உண்மையில் தனக்காக ஏங்கும் பக்தனுக்காக பகவானும் ஏங்குகிறான். அத்தகைய பக்தன் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் பிறவியைக் கொடுத்து அவர்கள் பக்தி பண்ணும் அழகை ரசிக்கிறான். அவர்களை வைத்து பக்தி செய்வது எப்படி என்று உலகோர்க்கு போதிக்கிறான்.
அசுரனுக்குப் பிறவி கொடுத்தால் அவனுக்கு பக்தி செய்யும் மனப்பக்குவம் எத்தனை பிறவிகள் கழித்து வருமோ? அதுவரை அந்த ஜீவனுக்காகக் காத்திருக்க வேண்டும்.
அம்மா மாடியில் துணி உலர்த்திக்கொண்டிருந்தாள். பள்ளியிலிருந்து வீடு திரும்பிய குழந்தை அம்மாவைத் தேடினால், மேலே இருக்கிறேன் வா என்று பதில் கொடுக்கிறாள். கீழே தொட்டிலில் உறங்கும் குழந்தை அழுதால் தானே ஓடி வருகிறாள்.
இரண்டுமே அவள் குழந்தைகள்தானே. அவளுக்கு பாரபட்சமா? ஒரு குழந்தைக்கு இறங்கி வருவதும், இன்னொரு குழந்தையைத் தானே ஏறி வரச்சொல்வதும் எப்படி சரியாகும் என்றால், மேலே ஏறி வரத் தெரிந்த குழந்தைக்கு, தானே வரட்டும் என்று விடுகிறாள். அது இயலாத குழந்தைக்கு தான் வருகிறாள்.
அதுபோல் பக்குவமுள்ள பக்தனுக்கு பிறவி கொடுத்து பக்தி செய்து, சாதனை செய்து பிறகு வா என்கிறான். பக்குவமில்லை, ஆனால், எப்படியோ பகவானின் கண்களில் விழுந்துவிட்டான் என்றால், அவனை ஆராயமல் தரதரவென்று இழுத்துப்போய், முக்தியில் விடுகிறான். அதற்காக பகவான் கொடுக்கும் அடியில், அவனது பாவங்களும் புண்ணியங்களும் வலுக்கட்டாயமாகக் கரைக்கப்படுகின்றன.
யவனப்படையை அழித்துவிட்டுக் கண்ணன் துவாரகைக்குச் செல்லும் சமயத்தில் பதினெட்டாவது முறையாக இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையுடன் எதிர்த்து வந்தான் ஜராஸந்தன்.
அதற்குள் பலராமனும் அங்கு வந்துவிட்டான். கண்ணனும் பலராமனும் இம்முறை போரிடவில்லை. வேறு லீலை நிகழ்த்த எண்ணி வேகமாக ஓடினர்.
பயந்தவர்கள் போல் அவர்கள் ஓடுவதைப் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தான் ஜராஸந்தன். அவர்களைத் தொடர்ந்து தானும் ஓடலானான்.
வெகு வேகமாக வெகு தொலைவு ஓடிய இருவரும் பிரவர்ஷணம் என்ற மலை மீது ஏறினர்.
தொடர்ந்து வந்த ஜராஸந்தன் மலை முழுவதும் அவர்களைத் தேடினான். எங்கும் அவர்களைக் காணாமல் திகைத்தான்.
பின்னர், மலையை விட்டு அவர்கள் எங்கும் வெளியில் சென்றிருக்கமுடியாது என்றெண்ணி மலையைச் சுற்றி ஏராளமான மரங்களையும், விறகுகளையும் போட்டுத் தீ மூட்டிவிட்டான்.
கொழுந்து விட்டெரிந்த தீயிலிருந்து அவர்கள் தப்பிக்க வழியே இல்லை. எரிந்து சாம்பலாவார்கள் என்று குழந்தைத்தனமாக நம்பிக்கொண்டு அங்கிருந்து அகன்றான்.
பின்னர், கண்ணனையும் பலராமனையும் நான் அழித்துவிட்டேன் என்று வெற்றிச் சங்கு முழங்கிக்கொண்டு திரும்பிச் சென்றான்.
ஆனால், கண்ணனும் பலராமனும், எட்டு யோஜனை தூரத்திற்கு மேலெழும்பி மலையிலிருந்து குதித்து, ரகசியமாக துவாரகையை அடைந்துவிட்டனர்.
துவாரகாவாசிகள் திரும்பி வந்த கண்ணனையும் பலராமனையும் பலவாறு கொண்டாடினர்.
கண்ணனின் மதுரா லீலைகள் நிறைவடைகின்றன. சில நாள்கள் கழித்து கண்ணனை துவாரகையில் சந்திப்போம். குருவின் பேரருளால் நம் அனைவரின் மனம் எனும் ப்ருந்தாவனத்தில் கண்ணன் எப்போதும் லீலைகள் நிகழ்த்தட்டும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment