மதுரா நாயகா..(39)
எதைக் கேட்டாலும் தருவேன். வேண்டும் வரத்தைக் கேள் என்று பகவான் கண்ணன் கூறியபோதும் முசுகுந்தர் என்ன கேட்டார் தெரியுமா?
பகவானே! நான் இவ்வுலகில் ஒரு சாதாரண அரசனாயிருந்தேன். நான் எனது என்று மமதை பிடித்தலைந்தேன். இவ்வுடலையே நான் என்று நினைத்து, மண், மனைவி, மக்கள் என்று ஈர்ப்பு கொண்டு அவற்றின் நினைவிலேயே காலத்தைக் கழித்தேன்.
தேர்களும், காலாட்படைகளும், யானைகளும், குதிரைகளும் புடை சூழ உலகைச் சுற்றி வந்தேன். செய்யத் தகுந்தது, தகாதது என்று பேதம் பாராமல் சுயநிலை மறந்து சிற்றின்பத்தில் காலம் கழித்தேன்.
இவ்வாறு உழல்பவனைக் காலரூபியான தாங்கள் பாம்பு எலியைப் பிடிப்பதுபோல் பிடிக்கிறீர்கள்.
தங்களைப் போற்றாதவன் பிறவித் தளையிலிருந்து விடுபட இயலாமல் தனக்குத்தானே பகைவனாகிறான். தங்கள் மீது பற்றுக் கொள்பவனே முக்தியடைகிறான்.
பிறப்பு இறப்புச் சுழலில் சுற்றும் மனிதனுக்கு விடுதலை கிடைக்கும் காலம் வரும்போது நல்லோரின் இணக்கம் கிடைக்கிறது. ஸாதுக்களின் ஸங்கம் கிட்டும் அதே தருணத்தில் தங்களிடம் பக்தி செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
விவேகிகள் அரியணை ஆசையை விட்டு நாட்டைத் துறந்து வானப்ரஸ்தம் சென்று தங்களை தியானம் செய்கிறார்கள். எனக்கோ எம்முயற்சியும் இன்றி அரியணை ஆசை அகன்றுவிட்டது.
முனிவர்களும் விரும்பிக் கேட்பது தங்களின் திருவடி சேவைதானே. முக்தி வழங்கத் தக்க தங்களிடம் உலகியல் ஆசைகளைக் கேட்பவன் அறிவிலியாவான்.
நான் தங்களையே சரணடைகிறேன். என்னைக் காத்தருள்வீர். என்றார்.
எவ்வளவு அழகான பிரார்த்தனை!
கண்ணன் மிகவும் மகிழ்ந்துபோனான்.
அரசே! நானே ஆசை காட்டியும் நீ அதற்கு அடிமையாகவில்லை. பக்தியில்லாமல் சாதனைகளால் மனத்தை அடக்கினால், அது மீண்டும் வெளிக்கிளம்பும். நீ என்னிடமே உள்ளத்தைச் செலுத்தி பூமியில் உன் இஷ்டம்போல் சுற்றி வரலாம். என்னிடம் உனக்கு நீங்காத பக்தி உண்டாகும்.
நீ வேட்டை முதலியவைகளால் எண்ணற்ற விலங்குகளைக் கொன்று குவித்திருக்கிறாய். எனவே என்னை நினைத்துத் தவமிருந்து தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள். அடுத்த பிறவியில் எல்லா உயிரினத்திடமும் மிகவும் அன்பு பூண்டு ஒழுகும் உத்தம அந்தணராகப் பிறந்து என்னையே அடைவாய் என்றான்.
பின்னர் முசுகுந்தர் கண்ணனை வலம் வந்து வணங்கி அங்கிருந்து வெளியேறினார்.
மனிதர்களும் விலங்குகளும் தாவரங்களும் மிகவும் குறைந்த உயரத்துடன் இருப்பது கண்டு திகைத்தார். பிறகு கலியுகம் வரும் காலம் என்றுணர்ந்தார். வடக்கு நோக்கிச் சென்றார்.
கந்தமாதன மலையில் பொறிகளை அடக்கித் தவம் புரிந்தார். பின்னர் பதரிகாச்ரமம் சென்று நர நாராயணர்களை வழிபட்டுத் தவமியற்றினார்.
கண்ணன் மதுராவிற்குத் திரும்பினான். தலைவனை இழந்த யவனப் படை மதுராவை முற்றுகையிட்டு நின்றுகொண்டிருந்தது. அவர்கள் அனைவரையும் அழித்து, அவர்களது செல்வங்களை எடுத்துக்கொண்டு துவாரகைக்குச் சென்றான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment